Tuesday, December 23, 2014

பிசாசு (2014) - அதீதத்தின் ருசி



முதல் காட்சியிலேயே படத்தின் மொத்த மையத்தையும் திறந்து விட்டாரே ? ஒரு பேய் படத்திற்கு தேவை யார் பேய்? என்கிற சஸ்பென்ஸ்தானே, இந்த பெண்தான் பேயாகும், என கதையின் மையத்தை பார்வையாளர்களுக்கு திறந்துவிட்ட பின், என்ன பெரிய சுவாரஸ்யம் இருந்துவிடப்போகிறது. இப்படி எதிர்வினை கேள்வியுடன் தான் ஆரம்பிக்கிறது பிசாசு, எனேனில் அனேக பேய் சினிமாக்களில், இடைவேளைக்கு பிந்தைய கதை என்பது யார் அந்த பேய்? எங்கிருந்து/ஏன் வந்தது? எப்படி அதை துரத்திவிடுவது? என்பதாகத்தான் இருக்கும்.

அந்த மூன்று கேள்விகள் கொண்ட கோட்பாட்டில் வந்த அத்தனை தமிழ் சினிமாக்களையும், கட்டுடைத்ததே இந்த படத்தின் முதல் வெற்றி. அப்படி கட்டுடைப்பதன் அத்தியாவசியம் நோக்கி அடுக்கப்பட்ட அடுத்தடுத்த காட்சிகளின்  நேர்த்தியும்,புனைவுகளும், இந்த சினிமாவை இதுவரை வந்த ஹாரர் ஜெனர் சினிமாக்களில், அசுரப்பாய்சலில் வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கிறது.

பொதுவான பேய் குறித்த சிந்தனைகளின் எதிர்திசைதான் இந்த கதையின் களம். பேய்களை சைக்கலாஜிக்களாக அணுகும் அனேக அயல் திரைப்படங்கள் பார்த்திருந்தாலும், தமிழில் இது புது முயற்சி என்பதோடு இல்லாமல், பிசாசுகளின் எதிர் சிந்தனையை அன்பின் வழி கட்டமைத்த அந்த கலைஞனின் பிரயாசையை அனைவரும் உச்சிமுகர்ந்து வரவேற்க வேண்டும், என்பதே இந்த படைப்பிற்கு நாம் செய்யும் கைமாறு.

ஒரு பீர் openar'ஐ கொண்டு பிசாசின் வருகையை காட்சி வழி open செய்வது, நிகழ்ந்துவிட்ட நிறங்கள் தொடர்பான சிக்கலை முன்னிருந்தே கட்டமைத்து வந்து அதை வெகு இயல்பாக பார்வையாளன் வசம் சேர்ப்பது, ஒரு தகப்பனின் கதறலை இருதயத்தினுள் உணர்வுப்பூர்வமாக நிறுவுவது, இடைச்செருகலாக இருந்தாலும் அமெரிக்க நாட்டின் பேராசையை கதாபாத்திரத்தின் வழி பகடி செய்வது, கிராபிக்ஸ் ஏதுமின்றியும் வெற்றிகரமாக பிசாசை காட்சிப்படுத்தியது, இறுதி காட்சியில், உண்மை ஒழுகுவதாக ஒட்டை தண்ணீர் குடத்தை குறியீடாக வைத்தது, என படம் நெடுக, கதையை நோக்கி மையல் கொள்ள காட்சிகள் படைத்ததோடு, கதையின் மையப்புள்ளியை நேசிக்கவும் வைத்ததே இந்த படைப்பில், மிஷ்கின் எனும் கலைஞனின் ஆகச்சிறந்த வெற்றி.

பிசாசு எனும் இந்த அதீத கற்பனையின் ருசி மிக மிக இனிப்பான ஒன்று. என்பதில் என்னளவில், எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

Tuesday, December 9, 2014

என் பொம்முக்குட்டி அப்பாவுக்கு


கோணங்கள் அமைப்பின் சார்பாக நடந்து வரும் உலக சினிமா திரையிடலில், கடந்த ஞாயிறன்று பார்த்த Like Father, Like Son (2013திரைப்படத்தை பற்றி,  
    

அந்திக்கருக்கலில்
இந்தத்திசை தவறிய
பெண்பறவை
தன் கூட்டுக்காய்
அலைமோதிக் கரைகிறது.
எனக்கதன் கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்
இருந்தும்
எனக்கதன்
பாஷை தெரியவில்லை.
-          - கலாப்ரியா

கலாப்ரியாவின் இந்த ஒற்றைக்கவிதை  நம் மனதுக்குள் ஏற்படுத்தும் அத்தனை உணர்ச்சிக்குவியல்களையும், மனிதப்பறவைகளின் வாழ்வியலில் பொருத்தி காட்சிகளின் அடுக்குகளில் பாசம் எனும் பாஷையை இரத்தமும்,சதையுமாக, நமக்குள் கடத்திவிடுவதோடு மனித இனத்தின் உன்னத அன்பை பறைசாற்றும் ஜப்பானிய தேசத்தின் அற்புத திரைப்படமே இந்த லைக் பாதர் லைக் சன்,

ஜப்பானின் எதோ ஒரு நகரில், வெற்றி பெற்ற பொறியாளனும், காலத்தின் பொருத்தபாட்டுடன் ஒத்திசைந்து பணம் திரட்டும் வழியில் செயல் படுபவனும், உயர்தர நாகரிகம் கொண்ட ஒரு பணக்கார தந்தைக்கு மனைவியும், “கெய்தா” எனும் அழகிய ஆறு வயது மகனும் உள்ள குடும்பம் இருக்கிறது, ”கெய்தா”விற்கு அவனின் பணக்கார தந்தை அவனுடன் அதிக நேரம் செலவிடுவதில்லை என்கிற மனவருத்தம் உண்டு, மேலும் அக்குடும்பம் குட்மார்னிங், வெல்கம் ஹோம், பியானோ கிளாஸ், போன்ற உயர்தர குடும்பங்களின் சம்பிரதாய கட்டமைப்புடன் வாழ்ந்து வருகிறது.

அதே நகரில் ஒரு சிறிய கடை வைத்திருப்பரும் நடுத்தர குடும்பத்தை நடத்தி வருபவருமான ஒருவருக்கு மூன்று குழந்தைகள் மற்றும் நிர்வாக திறமை வாய்ந்த மனைவியும் இருக்கிறார்கள், இவர்களின் 6 வயது மகனின் பெயர் ”ரூயிஸி” அக்கறை நிறைந்த அன்பை வெளிப்படுத்துவதும், குழந்தைகளோடு குழந்தைகளாக விளையாடவும் எந்நேரமும் மகிழ்ச்சியில் திளைக்கும் மிக அழகான குடும்பம் இவர்களுடையது.

 ”கெய்தா” வை பள்ளியில் சேர்த்த சில மாதங்களுக்கு பின்னர், அவன் பிறந்த மருத்துவமனையிலிருந்து ஒரு அவசர அழைப்பு உயர்தர குடும்ப தந்தைக்கு வருகிறது, அதன் பொருட்டு விசாரிக்க சென்ற அவர்களுக்கு மருத்துவமனை 6 வருடங்களுக்கு முன்னர் அங்கு பிறந்த இரண்டு குழந்தைகள் பெற்றோர்களிடமிருந்து இடம் மாறிவிட்டதாகவும், தீவிர விசாரனை  மேற்கொண்டதில் ”கெய்தா” அவர்களின் மகன் இல்லையென்றும் பேரதிர்ச்சியை அளிக்கிறது. சில நாட்கள் கழித்து, மருத்துவமனை நடத்திய மரபனு பரிசோதனைகளின் முடிவில், அதே நகரை சேர்ந்த ஒரு நடுத்தரவசதி கொண்ட குடும்பத்தில் வாழும் “ரூயிஸி” தான் அவர்களின் மகன் எனவும் ”கெய்தா” அந்த நடுத்தர குடும்பத்தின் மகன் எனவும் தெரிவிக்கிறது, மேலும் இரண்டு குடும்பங்களையும் சந்தித்து பேசவும் வைக்கிறது,

நடந்துவிட்ட இந்த சிக்கல் குறித்து அவ்விரு குடும்பங்களும் விவாதித்து ஒரு நாள் மட்டும் அவ்விரு சிறுவர்களையும் இடம் மாற்றிப்பார்க்கலாம் என முடிவு செய்து, தத்தமது குழந்தைகளை இடம் மாற்றிப்பார்க்கிறது, இரு குடும்பங்களும் பொது இடங்களில் சந்தித்து பேசி மேலும் இது குறித்து விவாதித்து ஒரு நாள் மொத்தமாக இரு குழந்தைகளையும் இடம் மாற்றி விடுகிறார்கள், இதற்கு பிறகு இரண்டு தந்தைகளுக்குள்ளும், தாய்களுக்குள்ளும், குழந்தைகளுக்குள்ளும் நீள்கிற வெம்மையை ஒவ்வொரு காட்சியும் கவித்துமாக நம்முள் கடத்துகிற சுவாரஸ்யத்தினை இந்த திரைக்காவியத்தை தரிசித்தால் மட்டுமே கிட்டும்.

இந்த படத்தின் தாய்,தந்தை,குழந்தை, என ஒவ்வொருவரும் பேசுகிற வசனங்கள் மிக சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது.

உதாரணமாக குழந்தைகள் இடம் மாறப்போகும் அந்த நாளில், அந்த இரு தந்தைகளும் பேசிக்கொள்ளும் வசனம்.

“பட்டம் விடுவது என்பது மிக மகிழ்ச்சிகரமான விளையாட்டு, இப்போதெல்லாம் பட்டங்கள் தானாகவே பறக்கிறது, பட்டம் செய்ய பேப்பரை மடித்து ஒரு வாலை ஒட்டவைத்து அதை காற்றில் பறக்க விடுவதென்பது அலாதியான இன்பம்,  
”ரூயிஸை” உங்கள் வீட்டுக்கு அழைத்து போனதும் அவனுக்கு வாரத்திற்கு ஒரு முறையேனும் பட்டம் விட சொல்லிக்கொடு, அவனுக்கு பட்டம் விடுவது என்றால் மிக பிடிக்கும்”

“என் தந்தை எனக்கு பட்டம் விட சொல்லித்தந்த தந்தையாக இருந்ததே இல்லை”

“ம்ம் உன் சூழ்நிலை எனக்கு புரிகிறது, உன்னையும் உன் தந்தைபோலவேதான் உன் குழந்தையிடம் செயல்பட வேண்டும் என எதுவும் நிர்பந்திப்பது இல்லையே ?”

நீரோடையின் முன்பாக படமாக்கப்பட்டிருக்கும் இந்த காட்சியும், அதை தொடர்ந்து அவர்கள் மொத்த குடும்பமும் எடுத்துக்கொள்ளும் ஒரு புகைப்படமும், மொத்த கதையின் ஒரு அழகான குறியீடு.

வளர்த்த மகனின் இருப்பை பிரிந்த தாய்மையின் குரலாக ஒலிக்கும் மற்றொறு வசனம்

”மகன் என்பவன் ஒரே இரத்தம் என்றால் மட்டுமே மகனாகிறான்”

“மகன் என்பவன் வளர்ப்பினாலும் மகனாகிறான்”

அப்பாக்களின் அருகாமையை விரும்பும் குழந்தைகளின் குரலாக
பாதர்ஸ்டேவிற்காக பள்ளியிலிருந்து காகித பூச்செண்டு தயாரித்து வந்து தந்த மகனிடம்

” நன்றி கெய்தா, எதற்காக இரண்டு பூச்செண்டு?

“ அது என் ரோபோ பொம்மையை சரி செய்து கொடுத்த “ரூயிஸி”யின் அப்பாவுக்கு..

அன்பை மிக உணர்ச்சிப்பூர்வமாக வெளிப்படுத்தும் இந்த படத்தின் மொத்த வசனமும் செறிவான காட்சியமைப்பும் நமக்குள் எல்லையில்லாத ஒரு அன்பின் புரட்சியை கிளர்த்தி விடுகிறது் என்பது மட்டும் நிஜம்.

கொத்துக்கறியும்,வடகறியுமாக மாற்றி,மாற்றி தமிழ்சினிமா கால் நூற்றாண்டுகளாக தாளித்து வந்த அதே ஆள் மாறாட்ட கதைதான், ஆனால் அது இங்கு வெளிப்பட்ட விதமும், வெளிக்கொணரும் அன்புமே, இதை சிறந்த உலக சினிமாக்களுள் ஒன்றாக்கிவிடுகிறது.

சொந்த மகன்களை,மகள்களை சாதியின் காரணம் கெளரவ கொலை என பெயரிட்டு காட்டுமிராண்டித்தனம் நடத்தும் சாதி வெறியர்கள் வாழும் தேசத்திற்கு, ஒரே இரத்தம், சொந்த வாரிசு என்பதையெல்லாம் தாண்டிய அன்பின் எல்லை என்பது எவ்வளவு தூரம் நீளமானது, எந்த அளவு அழமானது, அன்பு இருக்கும் மனித கலாசாரம் என்பது எவ்வளவு நாகரிகமானது என்பதை மயிலிறகால் வருடி சொல்லித்தருகிறது லைக் பாதர், லைக் சன், 



Thursday, December 4, 2014

மேக் இன் இந்தியா ( Anything,Anywhere,Anyways )

குடலைப்பிடுங்கும் நாற்றத்துடன் உள்ள சாக்கடைகளையும்,கால்வாய்களையும்,மலக்கிடங்குகளையும்,குப்பைத்தொட்டிகளையும், எப்போதும் போல நடுத்தர,கீழ்மட்ட மக்களே புலங்கி அதை அடித்தட்டு மக்கள் சுத்தம் செய்வதென்பது, காலம் காலமாக ஒரு புறமாக நடந்து வந்தாலும், மதிப்பிற்குரிய பாரத பிரதமர் அவர்களால் முன்மொழியப்பட்டு, இந்தியாவின் ஆகச்சிறந்த சீமான்களாலும்,சீமாட்டிகளாலும் வழிமொழியப்பட்ட “க்ளீன் இந்தியா” எனும் திட்டம் எப்படி நடைபெறுகிறது என்பது நாமனைவரும் அறிந்த உண்மை. அந்த சாக்டைகள்,கால்வாய்கள்,பொதுகழிப்பிடங்கள், மூக்கை வைத்து கூட பார்க்க விரும்பாத பெரும் சீமான்களும்,சீமாட்டிகளும், குப்பைகளே இல்லாத சாலையில் குப்பை இருப்பதாக காட்டி, அதை சுத்தம் செய்வதாகவும் காட்டி நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வந்தடையும், புகைபடங்களில் சில நூறு சமூக சேவக,சேவகிகளை அடையாளம் காட்டியதே அந்த க்ளீன் இந்தியா திட்டத்தின் ஆகச்சிறந்த சிறப்பென்றால் அது மிகையல்ல.

அப்படிப்பட்ட அந்த வெற்றிகரமான திட்டத்திற்கு, பிறகு நமது பாரத பிரதமரால் முன்மொழியப்பட்டுள்ள அடுத்த திட்டம், ”மேக் இன் இந்தியா” வாகும். அதாவது பன்னாட்டு முதலாளிகளையும்,நிறுவனங்களையும், எல்லா பொருட்களையும் இந்தியாவிலே உற்பத்தி செய்து கொள்ளலாம். அதற்கு தேவையான அத்தனை வளங்களும் எங்களிடம் தாரளமாக இருக்கிறது, விரைந்து வாரீர், வந்து பயனடைவீர். என்பதே அந்த திட்டத்தின் சாரம். இதன் மூலம் இந்தியாவில் தொழில் வாய்ப்பு பெருகும், பொருளாதாரம் பெருகும், வளங்கள் சுரண்டப்படும் என்பது ஒருபுறமாக இருப்பினும் இந்தியா நிச்சயமாக வல்லரசு ஆகிவிடும் என்பது ஊர்ஜிதம் என நம்பும் அப்பாவி மக்களுக்கு சொல்ல ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது.

“ARGO” என்றொரு அமெரிக்க திரைப்படம் வந்தது, அத்திரைப்படத்தின் கதையாவது ஈரானின் அதிபர் ஒரு அமெரிக்க கைக்கூலி என அந்நாட்டு மக்கள் ஏக வெறுப்பில் இருந்து வருகையில், திடிரென உருவாகும் உள்நாட்டு கிளர்ச்சியால் ஈரானில் உள்ள அமெரிக்க தூதரகம் அம்மக்களால் சிறைபிடிக்கப்படுகிறது, தூதரகத்தில் பணியாற்றும் 6 அமெரிக்க அலுவலர்கள் அங்கிருந்து தப்பி அங்கிருக்கும் கனடா நாட்டின் தூதரக அதிகாரி ஒருவர் வீட்டில் தஞ்சமடைகிறார்கள், அவர்களை மீட்க அமெரிக்காவில் இருந்து ஒரு போலீஸ் அதிகாரி போலியாக ஒரு சினிமா குழுவை உருவாக்கி ஈரானில் படமெடுக்க லொகேஷன் பார்க்க வந்திருப்பதாக, ஈரானின் கிளர்ச்சியாளர்களை நம்ப வைத்து, அந்த அறுவரையும் வெற்றிகரமாக மீட்டு தாய்நாடு சேர்ப்பதாக ( வழக்கம்போல அமெரிக்க தேச சொம்புகளையடித்து) உணர்ச்சிகரமாக முடியும் அத்திரைப்படத்தின் கதை.

இந்த சினிமாவில் வரும் திரைக்கதைக்கும், அதன் நடிகர்களுக்கும் சற்றும் சளைக்காத ஒரு கதையையும், ஆகச்சிறந்த நடிகர்களின் நடிப்பு மட்டும் மிகச்சிறப்பான திரைக்கதைகளால் கட்டமைக்கப்பட்டதே இந்தியா எனும் நாடும் அதன் அதிகாரிகளும். 1980களில் இப்போதைய ”மேக் இன் இந்தியா” போலவே, இந்தியாவில் உற்பத்தி செய்ய அப்போதைய எதோ ஒரு திட்டத்தின் கீழ் வந்த கம்பெனிதான் “யூனியன் கார்பைடு” எனும் நிறுவனம். போபாலில் 1984 டிசம்பர் 2,3, தேதிகளில் அந்நிறுவனம் மெதில் ஐசோ சயனைட் எனும் நச்சை காற்றில் கடத்தி கொத்து கொத்தாக மனித பலிகளை நிகழ்த்திய வரலாறு நாமறிந்ததே. உலகமே துக்ககரமாக இருந்த அந்த இரண்டு நாட்களில், பெரும் கோரத்தின் மிச்ச உயிர்களும் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டிருக்கும் போதே சூட்டோடு சூட்டாக அந்த நிறுவனத்தின் தலைவரான வாரன் ஆண்டர்சனை அந்த ARGO திரைப்படத்தின் அத்தனை சுவாரஸ்யங்களோடும் அவரது தாய் நாட்டிற்கு பத்திரமாக அனுப்பி வைத்தது மட்டுமின்றி இன்று வரை அவரின் ஒற்றை கேசத்துக்கு எதிராக ஒரு பெட்டி கேசை கூட போட முடியாத ஆகச்சிறந்த கலைஞர்களை கொண்டதே நமது அரசாங்கமும்,அதிகாரமும். 

அத்தனை உயிர்களின் பலி கொண்ட அந்த நிறுவனத்தின் தலைவர் வாரன் ஆண்டர்சன் தனது 62 வயதில் மிக பத்திரமாக தன் தாயகம் சென்று சேர்ந்து தனது 92 வயதுவரை நிறைவாழ்வு வாழ்ந்து உயிர் நீத்தார். என்பது இனி எப்போதும் மாற்றியெழுத முடியாத கசப்பான உண்மை.

நடந்தவை எல்லாம் போகட்டும், தற்போதைய ”மேக் இன் இந்தியா” திட்டங்களோ, அதையொற்றி நம் நாட்டில் படையெடுக்கப்போகும் பன்னாட்டு நிறுவனங்களோ எவ்வித தயக்கமுமின்றி தைரியமாக இங்கு படையெடுக்கலாம், பொருளாதாரத்தை பெருக்கலாம், போபால் விஷவாயு போல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த எதேனும் விபரீதங்களை அக்கம்பெனிகள் நிகழ்த்தினாலும், அவர்களை பத்திரமாக வீடு கொண்டு சேர்க்க இங்கு ஆட்கள் உண்டு, அடுத்த நாளைப்பற்றிய ஆயிரம் கனவுகளை சுமந்து உறங்கி  மடிந்து போன மக்களின் ஆன்மாக்களுக்கு இன்றுவரையும், இனிமேலும் பதில் சொல்லத்தான் இங்கு யாரும் இல்லை.

மேக் இன் இந்தியா-Anything,Anywhere,Anyways.

காவியத்தலைவன் (2014)


தமிழ்சினிமாவில் வரலாற்றை மையப்படுத்திய புனைவு கதையொன்றை, அந்த வரலாற்றின் அட்சுரம் பிசகாமல் சொல்வதென்பது கடினமான காரியம்தான். மாறாக அயல் சினிமாக்களில் அது வெற்றிகரமாக நிறுவப்பட்டே வந்திருக்கிறது உதாரணமாக டைட்டானிக்,பியர்ல் ஹார்பர், என ஏக வெற்றிச்சித்திரங்களுண்டு.

காவியத்தலைவனும் அத்தகைய முயற்சியே ஆனால் அது வெற்றிகரமாக சொல்லப்படவில்லை என்றுதான் சொல்லவேண்டும். தமிழகத்தில் நாடக கலை என்பது ஒரு நெடிய வரலாற்றைக்கொண்டது, அதை மையப்படுத்திய புனைவை மிக சிறப்பாக சொல்லவில்லை. அனேக இடங்களில் இந்த திரைப்படம் தமிழ்சினிமா ரசிகனை சமரசம் செய்தே வெளிப்பட்டிருக்கிறது, அதுவே இதன் மிகப்பெரும் பலவீனமாக இருக்கிறது. மிக மிக தொய்வான திரைக்கதை இதை ரசிக்கும் படியாக காட்டவில்லை என்பதே நிஜம்.

ஒரு நாடக குழுவை சார்ந்த இரு பெரும் நடிகர்களுக்கிடையில் ஒருவருக்கு நிகழும் யார் பெரியவன், என்ற மனப்போராட்டமும் அதை தொடர்ந்து அந்த நடிகன் நிகழ்த்தும் சில விளைவுகளும் ஆனதே நாடக வரலாற்றையொற்றிய இத்திரைப்படம்.

Black swan என்றொரு அமெரிக்க திரைப்படம் உண்டு. பாலோ நடனம் என்ற கலையை மையப்படுத்திய அந்த கதையில் அக்கலையை உயிராக நினைத்து  (ப்ரித்விராஜ்  போல ) வாழும் பெண் கலைஞர் ஒருத்திக்கு நாடக கலையை போலவே ராஜபார்ட், ஸ்த்ரிபார்ட், மாதிரியான அங்கீகாரம் தொட்டு ஏற்படும் மன நிலைகளை அதன் பொருட்டு அந்த அங்கீகாரம் அவளை கூட்டிச்செல்லும் அதீத விளைவுகளை மிகச்சிறப்பாக சொல்லியிருப்பார்கள்.

ஏறக்குறைய அதே மனப்போராட்டத்தையொத்த காவியத்தலைவனில் அது சிறப்பாக சொல்லப்படுவதற்கு மாறாக தலையை சுற்றி மூக்கை தொடும் பழைய பல்லவி கலந்த எளிதில் யூகிக்க கூடிய திரைக்கதையால், மிக தட்டையாகவே வெளிப்பட்டிருக்கிறது. இதுவே இந்த படத்தின் மிகபெரிய பலவீனமாக இருக்கிறது. அது போக பிரித்விராஜ்,வேதிகா, நாசர் தவிர்த்த பாத்திர தேர்வும் ரகுமானின் இடைசெருகலான இசையும்,அந்த பலவீனத்தோடு கைக்கோர்த்து மிகுந்த ஆயாசத்தைத்தான் தருகிறது.

ஆசானின் ஒவ்வொரு கதையையும் ஒரு திரைப்படத்தை படிப்பது போன்ற சுவாரஸ்யத்தை தரக்கூடியது, ஆனால் ஏனோ அவர் பங்கு பெற்ற ஒவ்வொரு திரைப்படமும் கொட்டாவி வரக்கூடிய புத்தகத்தை படிப்பது போன்ற அயற்சியத்தான் தருகிறது, அன்பின் ஆசானே பெட்டர்லக் நெக்ஸ்ட் டைம்.

இத்தனை பலவீனங்களையும் கடைந்தெடுத்துப்பார்த்தால் பலமாக ஒரே ஒருத்தர்தான் இருக்கிறார். அவர் ப்ரித்விராஜ். மனிதர் கோமதி பாகவதராக அனாயசமாக வாழ்ந்து தள்ளியிருக்கிறார். கொழும்பிலிருந்து திரும்பியதும் சித்தார்த்தை விசாரித்து விட்டு, அப்படி ஒருவர் இல்லையென்பதாக பதில் வந்ததும் உதட்டோரமாக குரூரப்புன்னகையொன்றினை உதிர்ப்பதாகட்டும், காய்ச்சலில் கிடந்தாலும் ஈகோவின் பொருட்டு நடிக்க கிளம்புவதாகட்டும் என்னே ஒரு அற்புதமான நடிப்பு.

ப்ரித்விராஜ் உன் மனசுல என்னதான் இருக்கு என வேதிகாவை கேட்கும் போது வேதிகா பின்புறமாக இருக்கும் சித்தார்த்தை பார்க்கும் காட்சியிலும், கர்ணமோட்சம் நாடகத்தின் இறுதியில் அர்ச்சனாக சித்தார்த் எதை ஜெயித்தாய், என பாடுவதாக காட்டியிருக்கும் காட்சியிலும் மட்டுமே வசந்தபாலன் படம் என்பது நினைவுக்கு வருகிறது, மற்றபடி சொல்ல ஏதுமில்லை.

எவ்வளவு குறைகள் இருப்பினும் தமிழ்சினிமாவில் இத்தகைய முயற்சிகள் வரவேற்கத்தக்கது என்பது மட்டும் நிஜம். ஆகவே திரை அரங்கில் வருகிற கொட்டாவியையும் உறக்கத்தையும் கட்டுப்படுத்திக்கொண்டேனும்,  காவியத்தலைவன் என்கிற இந்த சீரிய முயற்சியை வரவேற்போம்.

Saturday, November 22, 2014

பாரதி,நான்,நித்யா மற்றும் ஜீவா

ஒரு ஓவியத்தை கையாள்வதைப்போலத்தான் ஜீவாவை அணுகுகிறாள் நித்யா, அவளின் அக்கறை நிறைந்த பராமரிப்புகளுக்குப்பின்னர் அவனும் ஓவியமாகவே மிளிர்கிறான். ஓவியத்தை தொடங்குவது முதல் முடிப்பது வரையிலான இடைப்பட்ட நேரங்களை பொறுமையாக பார்த்துக்கொண்டிருக்க எவரும் விரும்புவதில்லை. அதே போல ஒரே ஓவியத்தை திரும்ப திரும்ப வரைவதற்கும். எல்லோருக்கும் அந்த நேரமும் அப்படி பட்ட ஓவியமும் தேவையாக இருப்பதில்லை, அப்படித்தான் எனக்கும் இருக்கிறது, மேலாக இப்போதெல்லாம் ஜீவாவை ஓவியமாக காண்கிற பொறுமையும் என்னிடம் இருப்பதில்லை. பாரதிக்கும் அப்படித்தான் இருக்க வேண்டும் இல்லையென்றால் ஜீவா இல்லாத வீட்டுக்கு போயிடலாமாப்பா எனச்சொல்லியிருப்பாளா பாரதி. 

பாரதி – என் மகளதிகாரம், என் இப்போதைய ஒரே பிடிப்பு, எனக்கும் நித்யாவிற்குமான பெருங்காதலின் சாட்சி. 4 வயதிற்குமேல் குழந்தைகள் உலகிலிருந்து வழிதவறி,கர்த்தரின் கைகளையும் கர்த்தரையும் தொலைத்த ஆட்டுக்குட்டி, அவளுக்கு இப்போது 11 வயது, சாரசரி குழந்தைகள் அனுபவிக்கின்றன எந்த விளையாட்டுகளிலும் அவள் ஈடுபட்டதில்லை ஜீவாவை கவனித்துகொள்ள நித்யாவிற்கு உதவி செய்யவே அவளுக்கு நேரம் சரியாக இருக்கிறது. இன்னமும் குழந்தைதனத்திற்கு ஏங்குகிற ஏக்கம் வழிந்தபடி இருக்கும் முகம் கொண்டவள், இவளையும் நித்யாவையும் எப்படி இந்த துன்பகரமான சூழ்நிலையிலிருந்து விடுவிப்பதென யோசித்து கொண்டிருந்த நாளில் தான் அவள் அவ்வாறு சொல்லியிருந்தால்,

“ஒரு அக்கா நீ இப்படி பேசலாமா? பாவம்ல ஜீவா நம்ம தம்பியில்ல”
”அவனுக்கு நம்மள விட்டா யார் இருக்கா ? யார் அவன பாத்துக்குவா? போன்ற கிளிஷே வசனங்கள் எதுவும் தோன்றாத மன நிலையில்தான் நானும் இருந்தேன். இந்த 8 ஆண்டுகள் அப்படித்தான் இருக்க வைத்திருக்கிறது என்னை. 

நான் - நான் ராம்குமார், கோவையில் உள்ள ஒரு பெரிய ஹாரன் உற்பத்தி கம்பெனியின் கடைநிலை பொறியாளன். இப்போதைய இந்த வாழ்க்கையிலும் கடைபிணம்,கடைஉயிர், இரண்டுக்கும் இடைப்பட்டவனே நான், இப்போதைக்கு அவ்வளவே நான், நித்யா இல்லாத நான், அல்லது எனக்கு மிக பிடித்த நித்யாவின் மென்புன்னகை இல்லாத நித்யாவை கொண்ட நான்.அந்த பரிசுத்த புன்னகை இல்லாத நித்யா.

நித்யா - என் சொந்த அத்தைப்பெண், நான் நான்காம்வகுப்பு படிக்கும் போது காய்ச்சலில் கிடந்த எனக்கு ரொட்டி வாங்கி வந்ததோடு இல்லாமல் ஊட்டியும் விட்ட கணத்திலயே முடிவெடுத்திருந்தேன் நித்யாதான் என் மனைவியென்று.. ஆம் அப்படி குழைந்தைதனமாகத்தான் ஆரம்பித்தது, பின்னர் 10ஆம் வகுப்பில் என் நாய் சீஸர் காரில் அடிபட்டு கட்டுகளோடு கிடந்த போது தினமும் வந்து என் நாய்க்கு பிஸ்கட் தந்து பழக்கப்படுத்தியிருந்தாள் எஜமானனான என்னைவிட சீஸர் நித்யாவிற்குதான் அதிகமாக வாலாட்டுவது போல தோன்றியபோதும் நித்யாவை கைபற்றும் எண்னம் என்னிடம் அதிதீவிரமாகியிருந்தது,.. மென்மையான மெல்லிசைக்கும் நித்யாவிற்கும் பெரிதாக வித்தியாசம் எதுவுமிருக்காது, யார் புன்னகை மிக மென்மையானது என நித்யாவிற்கும் மோனலிசா ஒவியத்திற்கும் போட்டி வைத்தாள் நிச்சயமாக நித்யாவே ஜெயிப்பாள் உலகின் மிக சிறப்பான குழிவிழும் கன்னத்தை கொண்ட, மென் புன்னகைக்காரி,

இந்த புன்னகைக்காரிக்கு அதிர்ந்து சிரிக்கவே தெரியாது என்பது பிரண்ட்ஸ் படத்தில் நடிகர் வடிவேலுவின் தலையில் சுத்தியல் ஒன்று விழும் காட்சிக்கு ஒட்டுமொத்த தியேட்டரே விழுந்தடித்து சிரித்துக்கொண்டிருக்கும் போது கூட அவள் இதழோரமாக மென்மையாக சிரித்ததை பார்த்தபோதுதான் தெரிந்தது, இந்த உலகின் மென்மையானவைகளின் அத்தனை பட்டியலிலும் முதன்மையானவள் இவளே என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை என்னிடம் உண்டு, இவளை கைவிட்டுவிடாதே உடனே பற்றிக்கொள்ளென என்னுள் பொங்கிய காதல் சொல்லியது.. சொல்லியதொடு இல்லாமல் யாருமற்ற சாலை ஒன்றில் வழக்கமான பேச்சுக்கள் ஒய்ந்து மவுனங்கள் பேசத்தொடங்கிய போது, அக்காதல் நதியாக பிரவாகமெடுத்து நரம்புகளின் வழி பாய்ந்து அவளின் கரம் எனும் கடலில் மிருதுவாக சங்கமித்தது. அவள் திரும்பி பார்த்தாள், என் காதலை ஒப்புவித்தேன்.. என் வாழ்வின் மிக முக்கிய மகிழ்ச்சிகரமான ஸ்லோமோஷன் காட்சியொன்று நடந்தேறியது.. அவளுக்கும் விருப்பம்தானாம். அந்த மென்புன்னகை அவளை முந்திக்கொண்டு அவள் காதலை சொன்னது,

சொந்த அத்தைப்பெண், படித்தவன், வேலையிலிருப்பவன், இத்தியாதி, இத்தியாதி சுமூக காரங்களை கொண்ட எங்கள் காதல் திருமணத்தில் முடியாமல் போயிருந்தால்தான் ஆச்சர்யம். எல்லாம் இனிதாகவே நடந்து முடிந்தது. ஜீவாவை பிரசவிக்க மருத்துவமனையின் ஆப்ரேஷன் தியேட்டரில் நுழையும் வரையிலும் அவளின் பூக்கள் விரியும் சிரிப்பின் மகரந்ததூள்களில் மிதந்து கொண்டேதான் இருந்தேன் ஜீவா இப்படியென தெரிந்த நொடியிலிருந்து எல்லாம் தொலைந்து போனது,அல்லது அனைத்தையும், விழுங்கிக்கொண்டேதான் வந்து சேர்ந்தான் ஜீவா.

ஜீவா  – ஜீவாவை நர்ஸ் ஏந்திக்கொண்டுவந்து ”ஆண்குழந்தை பிறந்திருக்கிறது” என காட்டுவது போலவும் ஜீவா பொக்கைவாயை திறந்து அழுவது போலவும் நொடிக்கொரு தரம் தடுக்கி விழுந்த கனவோடு மருத்துவமனையின் காத்திருப்புச்சேரில் அவனுக்காக காத்திருந்தேன், மடியில் பாரதி உறங்கிக்கொண்டிருந்தாள், பகல் கனவு பலிக்காது என்பது உண்மைதான் போல அவனின் அறிமுகம் இன்குபேட்டருக்குள்ளாகத்தான் கிடைத்தது , வைக்கோல் மீது இயேசு சிலுவையுடன் பிறந்ததை போல எதேதோ ஒயர்கள் சூழ சாந்தமாக படுத்திருந்தான்.

ஜீவா குறைபிரசவ குழந்தை என்றார்கள், எடை போதவில்லை என்றார்கள்,மூளை வளர்ச்சியடையவில்லை என்றார்கள், முதுகுதண்டும் வளர்ச்சியடையவில்லை என்றார்கள், இவன் உயிர்பிழைப்பது கடினம் என்றார்கள், ஊனமாய் பிறந்திருக்கிறான் என்றார்கள், இறுதியாக இவன்தான் உன் கனவில் வந்தழுத பொக்கைவாய் மகன் என்றார்கள், பாரதியை இறுக அனைத்தபடி நித்யா ? என்றேன் மயக்க நிலையில் இருக்கிறார் தெளிய நான்கு மணி நேரமாகும் என்றார்கள். பிறகு பார்க்கலாம் என்றார்கள்.. ஆனால் அடுத்த எட்டு வருடத்திற்கு அவளிடம் அந்த மென்சிரிப்பை மட்டும் உன்னால் பார்த்துவிட முடியாதென மட்டும் யாரும் சொல்லவில்லை.

இதோ எட்டு வருடங்களாகிற்று, பாரதியின் குழைந்தைதனத்தையும், நித்யாவின் மென்சிரிப்பையும், எங்களின் இயல்பையும் முறித்துப்போட்டுவிட்டு படுக்கையில் ஒரு போன்சாய் மரத்தை போல, தன்னைத்தானே அசிங்கமாக்கிக்கொள்ளும் ஓவியத்தை போல எச்சில் வழிந்தபடி நாள்முழுதும் எதையாவது அரற்றிக்கொண்டே கிடக்கிறான் ஜீவா,

அவனின் நான்கு வயதில் கேட்டேன்

“ஜீவா மாதிரி குழந்தைகள கவனிச்சுக்க நிறைய ஹோம் இருக்கு நித்தி, இவன அங்க சேத்தி விட்டுறுவோம், போதும் இவ்ளோ நாள் நம்ம கஷ்டபட்டது போதும், பாரதி பியூச்சர நினைச்சு பாரு, அவளும் பாவம்தான? இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி இவன் கஷ்டபடறத நாம பாக்கிறது?

“ஜீவா மாதிரி அங்கயும் நிறைய குழந்தைக இருப்பாங்களா?”

“ஆமாம்”

”எப்படி ராம் மனசாட்சியே இல்லாம இந்த நிலைமையில இருக்கிற குழந்தைகள அங்க விடறாங்க?”

”புரிஞ்சிக்க நித்யா, இப்படிப்பட்ட நிலைமைல இருக்கிறதாலதான் விடறாங்க, அவங்க இயல்பு பாதிக்கப்படுதுங்கிறதுக்காகதான் விடறாங்க, பாரதி மாதிரி, என்ன மாதிரி, உன்ன மாதிரி பழைய சந்தோசங்கள திரும்ப கொண்டு வரத்தான் விடறாங்க”

“நம்மள நம்பி வந்த ஜீவன கைவிடறது பாவம் ராம், சின்ன சின்ன சுயநலமான காரணங்களுக்காகவெல்லாம் நான் ஜீவாவ விட்டுக்குடுக்க மாட்டேன், நீங்க புரிஞ்சுக்குங்க ராம், உடம்புல எந்த குறையும் இல்லாம இருக்கிற நானே ஹாஸ்டல்ல, அம்மாவோட அருகாமைய நினைச்சு எத்தன ராத்திரி அழுதுருக்கேன் தெரியுமா? ப்ளீஸ் ராம்…. ஜீவா பாவம்.

“விவாதம் இப்படி முடியும்போது ஹாஆஆஅஹஹுஅஹா” பரிகாசம் செய்வதைப்போல அரற்றினான் ஜீவா, அப்போது விழுந்தது வன்மம் இவன்மீது,

வளர்ந்து வளர்ந்து இதோ இன்றைய இரவு விருட்சமாகி இருக்கிறது.. எந்த அன்பு சுயநலமில்லாமல் இருக்கிறது?,அப்படி சுயநலமாக இருப்பதில்தான் என்ன தவறு உள்ளது.?. எல்லாம் பக்குவப்பட்டாகிவிட்டது இனி நிகழ்த்த வேண்டியிருப்பது கொலை மட்டுமே, தான் ஈன்ற தன் சவலைப்பிள்ளை குட்டியை தன் மற்ற குட்டிகளுக்கு வேண்டி தானே உன்னும் மிருகங்களின் சித்தாந்தம்தான் இது, உயிர்களின் அடிப்படையும் அதுதானே? நாகரிகம், மனிதஅறிவு எல்லாவற்றையும் மீறி இப்போது ஒரு காடு எனக்குள் பரந்து விரிந்து கிடக்கிறது, காட்டின் விதிகளும்.

அவனுக்கான இன்றைய இரவுப்பாலில் ஐம்பது டைசோஃபார்ம் மாத்திரைகளை கலந்தாகிற்று, ஒவ்வோரு டைசோஃபார்ம்களிலும் ஒர் இரவு தூக்கம் ஒளிந்திருப்பது போல மொத்தமாய் இந்த ஐம்பது மாத்திரைகளில் மற்றவர்களை பொருத்தமட்டிலும் ஒரு கொலை, ஒரு மரணம், ஒளிந்திருக்கிறது, என்னை பொருத்தவரையில் ஒரு விடுதலை ஒளிந்திருக்கிறது, எங்களுக்கும் ஜீவாவிற்குமான விடுதலை. நிறைவேற்றினேன்.


இந்த எட்டு வருடங்களில் எப்போதுமில்லாமல், நடுசாமத்தின் விளக்கவொன்றா, அமைதியான இந்த நேரத்தில். நான் ஊட்டிய இந்த பாலை மொத்தமாக குடிக்கும் முன்பாகவேனும், எனக்கு பிடித்த, என்னைப்பிடித்த அந்த நித்யாவின் அந்த மென்சிரிப்பை சிரித்துக்காட்டியிருக்கலாம், ஒருவேளை இதெல்லாம் நிகழ்ந்திருக்காது, படுபாவி இந்த பாலை முழுவதுமாக குடிக்கவைத்து, வாய் துடைத்து, கழுத்துவரை போர்வையை போர்த்தி விட்ட இந்த நொடியில் இதோ அந்த மென்சிரிப்பை உதிர்க்கிறான் ஜீவா.


Tuesday, November 18, 2014

பெருநகர ரிக்‌ஷா


அதீத பாய்ச்சலோடு
நகரும் நகரத்தினூடே
ஈடுகொடுத்து ஓடும்
கால்களோடு
பத்தாத பட்ஜெட்டுகளில்
சுரக்கும் வியர்வைகளை
துடைத்து துடைத்து
களைப்பான துண்டு சகிதமாக
உயர்ரக ஊர்திகள்
உற்சாகமாக ஓடும்
அதே ரோடுகளில்
அடைமழை அடைவெயிலோடு
நகரத்துடன் ஒத்து இல்லை
ஓரம் நகர்கிறது மூனுசக்கர சீவனம் !! 

Wednesday, November 12, 2014

கூண்டு

ஒரு கிளியை
கூண்டுக்குள்
அடைப்பதை போல
அத்தனை சுலபமானதல்ல
அதன் வானத்தை அடைப்பது !!

Sunday, November 9, 2014

சிவப்பு யானை

பெங்களூர்,எந்த பந்தயமும் நடைபெறாத ஒரு காலையில் மெல்லிய பனி படர்ந்திருந்த ரேஸ்கோர்ஸ் மைதானத்தின் சுற்று சுவரில் இருந்த ஒரு பிளவான விரிசலின் வழியே ஈக்கள் மொய்யப்பதை போல கூடி வெறித்து பார்த்து கொண்டிருந்த கூட்டத்தை "பந்தி..பந்தி...அல்லி...பந்தி" என காக்கிசட்டையனிந்த வட்டதொப்பி போலீசுகாரர்கள் லத்தியால் துரத்திக்கொண்டிருந்தனர் மைதானத்தின் ஓரத்திலிருந்த நாணற்புற்களின் அருகே ரத்தச்சேற்றில் குப்புற விழுந்து கிடந்த பிணத்திலிருந்து கிளம்பிய இரத்தப்புள்ளிகள் சில அடிகள் நீண்டு ஒரு புளியங்காயை போல சுருங்கி விழுந்து கிடந்த ஒரு ஆண்குறியில் முடிந்திருந்தது எந்த அசைவுமின்றி கிடந்த இவைகளை அசைந்தசைந்து விதவித கோணங்களில் படம்பிடித்துக் கொண்டிருந்தனர் ஃபோட்டோகிராபர்கள் 

பனியை கொஞ்சமாகவும் மழையை கொஞ்சமாகவும் மாறி மாறி ஏந்திக்கொண்டிருந்த பெங்களூரில் அடுத்த மூன்று மணித்தியாலங்களுக்கு பிறகு கமிசனர் அலுவலகத்தில் 

"சரியா ரெண்டு மாசத்துக்கு முன்னாடி மும்பையில் நடந்த  இரண்டு கொலைகளைப்போலவே இப்போது இங்கும் நடந்திருக்கிறது..என்ன செய்யலாம்னு இருக்கீங்க மிஸ்டர் கிருஷ்ணா" கமிசனர் நேராக விவாதத்தை தொடங்கினார் 

"நீங்க சொல்றது சரிதான் சார் எங்களுக்கும் மும்பை சம்பவத்த போலவே இதுவுமாங்கிறதுல டவுட் இருக்கு மும்பை போலீஸ ஏற்கனவே கான்டாக்ட் பன்னிட்டோம் கேஸ் சம்பந்தமான எல்லா விவரத்தையும் அனுப்ப சொல்லியிருக்கோம் இங்க நடந்த கொலை விவரம் டிவில டெலிகாஸ்ட் பன்னியிருக்கோம் சோ  கொலையானவர் யாருன்னு முதல்ல தெரியனும் அது போக போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் இன்னும் ஒரு மணி நேரத்துல கிடைச்சிரும் சார் பாரன்ஸிக் ரிப்போர்ட் கிடைக்க ஈவ்னிங் ஆகிடும் எல்லா ரிப்போர்ட்டும் கிடைச்சதும் இது தனிப்பட்ட முன் விரோதங்களினால நடந்ததா இல்ல மும்பை தொடர் கொலையான்னு விசாரிக்க முடியும் " விறைப்பாக சொல்லி முடித்தார் அசிஸ்டெண்ட் கமிசனர் கிருஷ்ணாஹெக்டே 

"ஒகே கோ அகேட்.. ஒன்ஸ் பைனலைஸ் ஆல் என்கொயரிங் ஸ்டேடஸ் மீட் அகெய்ன் இன் ஈவ்னிங்" விவாதத்தை கமிசனர் முடித்தார் 

பின்னிரவிற்கு பிறகு தூங்க சென்றுவிட்டு விடிந்த வெகுநேரம் கழித்து எழுந்து வந்தவனை போல எந்த கதிரையும் வீசாது சோம்பலாக எட்டிப்பார்த்த சூரியனையும் மீறி குளிர் சிலுசிலுவென வீசிக்கொண்டிருந்தது வரிசையற்ற எறும்புக்கூட்ட மக்களோடு நூறு சதவீத நகரத்தின் சாயல்களில் எப்போதும் போல இயங்கிக்கொண்டிருந்தது மெஜஸ்டிக் பேருந்துநிலையம்.. எதிர்புறம் இருந்த டீக்கடையின் வாசலில் பெங்களூர் டீக்கடைக்களுக்கே உரித்தான மிகச்சிறிய டம்ளரில் டீக்குடித்துக்கொண்டிருந்தாள் மேகலா அவள் கண்களில் நேற்றுக்குடித்த சாரயத்தின் நெடியோடு இன்னும் பாக்கியிருந்தது நடத்தி முடித்த அந்த கொலையின் நெடியும்.. தேநீரின் கடைசி மிடறும் இறங்கிய பிறகு குளிருக்கு கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது பிறகு ரோட்டில் இறங்கி பஸ் ஸ்டாண்டுக்குள் நுழைந்து இரயில் நிலையம் நோக்கி ஒரு துணிப்பையோடு தனது பருத்த உடலை தூக்கிக்கொண்டு யானை போல மெதுவாக நடந்தாள்.. யானை போல என்பதற்கும் மெதுவாக நடக்கவும் அவளிடம் ஒரு காரணம் இருக்கிறது அது அவள் இந்த உலகத்தில் வெறுக்கும் ஆயிரமாயிரம் ஆண்குறிகளில் ஒன்றான ஒரு குறியினால் வந்தது, அந்த ஆண் குறிதான் இவள் கொலைக்கணக்கின் பிள்ளையார் சுழி இன்னும் எத்தனை மீதம் என்பதும் அவளுக்கு தெரியாது.. 

அம்மையையும் அப்பனையும் இழந்து அம்மாச்சி பாட்டியின் நிழலில் பருவத்தின் பேரழகியாக தாமிரபரணி கரையோரம் வசித்து வந்தவளை அந்த குறி தான் காதலாகி கசிந்துருக வைத்தது.. எந்த சுவடுமில்லாது ஒரே இரவில் புலம் பெயர்த்து மும்பைக்கு கொண்டுவந்தது தாலியும் வீடும் பிறகு பார்த்துகொள்ளலாம் என வாக்கு தந்து விடுதியில் தங்க வைத்து புணர்ந்து தீர்த்தது எப்படியும் இரு நாளில் தாலி ஏறும் என நினைத்து காத்திருந்தவளை மொத்தமாக பொட்டலம் கட்டி தெரு நாய்களுக்கு வீசியெறிந்தது.. ஒற்றைக்குறியை நம்பி வந்தவளை அடுத்தடுத்த இரவுகளில் ஓவ்வொருகுறியாய் புணர சொன்னது அப்படியாகா எல்லா இரவையும் நரகமாய் கழிக்க வைத்தது சட்டையை பிடித்து நியாயம் கேட்கும் போதெல்லாம் அடித்து துவைத்தது வேறு குறியை தொட முடியாது என்று தீர்க்கமாக சொல்லி உறங்கிய இரவில் தன் பெண்குறி மீது கல்லை போட்டு சிதைத்தது அந்த காயம்தான் பின்னாட்களில் அவளை மெதுவாக நடக்க வைத்தது காயம் ஆறிய பிறகுதான் மேகலா ஆசுவாசமாக இருந்தாள் 

இனி யாரும் புணர முடியாத அளவுக்கு பெரும்காயம் அது... நரகத்தின் இரவுகள் எல்லாம் முடிவுக்கு வந்ததாய் நினைத்திருந்த சமயத்தில் அந்த குறி வேறோர் நரகத்தை அறிமுகப்படுத்தியது ஆயிரமாயிரம் ஆண்குறிகளை வாயினால் சுவைத்து இன்பம் தரவேண்டும் மும்பையில் இதுவும் ஒரு வகையான பாலியல் தொழில் பெரும்பாலும் இரவுக்குபின் கடற்கரையில் நடக்கும் தொழில்.. நம்பி வந்த குறி இதில் தள்ளிய சில காலம் கழித்து சில பல குறிகளை வாயில் அடைத்து சலித்தபின்னர் அவளுக்கு தோன்றியது இந்த ஆண்குறிகளெல்லாம் ஒரு வகையான பாம்பு அதற்கு விறைப்புதன்மை வந்தால் அது எதில் வேண்டுமானாலும் நுழையும் அது தன் வயதொத்த வயதுக்கு சிறிய அல்லது மீறிய எந்த எதிர்குறியாக இருந்தாலும் அது நுழைய விரும்பும் எந்த குறியும் கிடைக்காத போதும் எதிர் பாலினத்தின் எல்லா ஓட்டைகளிலும் நுழைய விரும்பும் பாம்பு அதை நசுக்க வேண்டும் தலையை கொய்து ரசிக்க வேண்டும் என தோன்றியிருந்தது 

பிரிதொரு இரவில் நரகத்தில் நுழைத்த அந்த குறியை கொய்யும் அந்த நாள் வந்தது 

"அவுசாரி முண்ட இன்னிக்கு கலெக்சன இவ்ளோதானாடி" கஞ்சா குடித்த போதையில் மெதுவாகத்தான் கேட்டான்

"இவ்ளோ மட்டுமில்லடா இதான் கடைசி" சற்றைக்கு முன் சந்தித்த வாடிக்கையாளனின் குறியை சுவைக்கும் முன் அவன் தந்த சாரயத்தின் போதை அவளை மீண்டும் அவனிடம் திமிரச்செய்தது 

"ஏண்டி நாயே இன்னிக்கு தலைமேல கல்ல போடவா"

"போட்டுத்தான் பாரேன்" 

"இந்தா இப்பவே போடறேண்டி குண்டி, உன் யானை சைசுக்கு அம்மிக்கல் பத்தாது இருடி பெரிய பாறையா தூக்கிட்டு வந்து போடறேன்"

"சரி போய்ட்டு வா"

"குண்டு முண்ட வாங்கினதெல்லாம் பத்தலையா யானைக்கு இன்னிக்கு ஏன் தும்பிக்க நீளுது"சொல்லிவிட்டு வேகமாக அறைந்தான் 

"மதம் பிடிச்சிருச்சுன்னு நினைச்சுக்க"அமைதியாக சொன்னாள் 

"தேவடியா முண்ட"என கத்தியவாறு எட்டி உதைத்தான் 

பீச் மணலில் விழுந்தவள் பலமாக சிரித்தாள்
வெறி கொண்டவனாக கையிலிருந்த பீர் பாட்டிலால் தலையில் அடிக்க ஓங்கியவனின் குறியில் ஒரு உதை வைத்தாள் பீர் பாட்டிலை கீழே விட்டுவிட்டு சுருங்கி விழுந்தான் 

அதே பீர் பாட்டிலை எடுத்து அவன் தலையில் ஓங்கி அடித்தாள் பாட்டில் சில்லாக தெறித்தது பின் கூரான பாட்டிலால் அவன் குரல்வளையில் குத்தினாள் மூச்சுக்காற்று இரத்தத்தோடு கழுத்து வழியாக வந்து துடித்தான் நிதானமாக அவன் இடுப்பில் இருந்த கத்தியை எடுத்தவள் பேண்டை உருவி அவனது குறியை இழுத்து பிடித்து 
அறுக்க ஆரம்பித்தாள் அவனது ஓலம் வாய்வழியாக வெளியேற திராணியற்று கழுத்திலிருந்த கீறலில் இரத்தத்தோடு வெறும் காற்றாக வெளியேறியது சில ஆண்டுகளாக ஓற்றைகுச்சியை வைத்து அடக்கி வைத்திருந்த பாகனை துவம்சம் செய்த யானையாகியிருந்தாள் கையோடு அறுத்தெடுத்த குறியை சில அடிதூரம் கொண்டுசென்று வீசியெறிந்தாள் 

அரபிக்கடலில் ஒரு புனிதத்தின் கறையை கழுவிய ஆகிருதியில் திரும்பினாள் 

ஏன் கொலை? யார் கொலை? யார் கொலையாளி? என எந்த கவலையுமின்றி தினசரி செய்திகளில் மட்டும் இடம்பிடித்து பின் கரைந்துபோன ஒரு மாதம் கழித்து மீண்டும் அதே கடற்கரையில் வேறொருவன் குறியை அறுத்துப்போட்டாள் வழக்கமான வாடிக்கையாளனே தவிர அவளுக்கும் இவனுக்கும் எந்த பகையுமில்லை ஆனால் அவளை மீண்டும் மதம் பிடிக்க வைக்க அவனிடம் அந்த கொடும் குறியிருந்தது அந்த ஒரு காரணம் அவளுக்கு போதுமாய் இருக்கிறது 

அவள் பெங்களூர் வந்து ஒரு மாதம் ஆகியிருந்தது  இந்தியாவில் மும்பையைபோல இரண்டாம்வகை விபசாரம் நடக்கும் இடங்களில் பெங்களூரும் ஓன்று என சக பீச் தொழிலாளி சொல்லியிருந்தாள் மெஜஸ்டிக் ஏரியாவை சுற்றியிருக்கும் தியேட்டர்களின் வாசல்களில் நின்றால் வாடிக்கையாளன்கள் வரக்கூடும் பின் திரையரங்கத்தினுள்ளேயே தொழில் செய்து கொள்ளலாம் என கேள்விப்பட்ட வந்திருந்தாள்... அவளுக்கு மதம் பிடிப்பது மிக பிடித்திருக்கிறது ஆண்களின் மரண ஓலமும் இரத்தம் ஓழுக வெட்டி எறியும் ஆண்குறியில் ஆயிரமாயிரம் ஆணாதிக்கங்களை அடக்கிவிட்ட பெருமதம் பிடித்திருக்கிறது கடந்த இந்த ஒரு மாதமும் அவளுக்கு மதம் பிடிக்க வழியில்லை தியேட்டர்களில் கூட்டம் இருந்தது ஆகவே அந்த வெறியை தீர்க்க முடியாத தாகம் இருந்தது நேற்றுதான் அதற்கான வழி கிடைத்தது திரைஅரங்கின் உள்ளே வாய்ப்புணர்வு முடித்தபின் அவன்தான் அங்கு கூட்டி சென்றான் அந்த பெரு மைதானத்தில் விளக்குகள் ஏதுமற்ற இருளில் அவளுக்கு மீண்டும் மதம் பிடித்தது

இரயில் நிலையம் நுழைந்து சென்னைக்கு ஒரு ஜெனரல் டிக்கெட் எடுத்துவிட்டு தயாராக இருந்த பிருந்தாவன் எக்ஸ்பிரஸ்சில் ஏறி அமர்ந்தாள் வழக்கமான கூவல்களுக்கு பிறகு இரயில் மெதுவாக பெங்களூரிலிருந்து புறப்பட்டது 

கண்ணாமூச்சி ஆட்டங்களில் ஓய்ந்திருந்த சூரியன் மீண்டும் உறங்க சென்றிருந்த மாலைவேளையில் லட்சத்து லட்சம் வாகனங்கள் ஓயாது ஒளிக்கற்றைகளை உமிழ்ந்துகொண்டே நகர்ந்து கொண்டிருந்தது கமிசனர் அலுவலகத்தில் கேஸ்பற்றி பேச ஆரம்பித்தார் கிருஷ்ணா 

"சார் கொலையானவன் பேர் சுரேஷ் அவன் ஒரு பெயிண்டர் சொந்தஊர் ஓசுர்" அவன் வீட்ல எல்லார்கிட்டயும் தெளிவா விசாரிச்சாச்சு அவனுக்கு தனிப்பட்டவிதத்துல எந்த முன் விரோதமும் இருக்கிற மாதிரி தெரியல..சோ இது திட்டமிட்டும் நடக்கல ரெண்டாவது மும்பையில் நடந்த இரட்டை சம்பவத்துக்கும் இங்க நடந்த சம்பவத்துக்கும் நிறைய ஒற்றுமை இருக்கு" 

"என்ன அந்த ஒற்றுமை? " 

"சார் கொலையாளி கொஞ்சம் சென்ஸிடிவ் ஆன ஆளு அவன் இந்த கொலைகள ஒரு சமுதாய பொறுப்பு மாதிரி நினைச்சு பன்றான்" 

"விளக்கமா சொல்லுங்க கிருஷ்ணா" 

"அதாவது சார் மும்பையில் நடந்த முதல் கொலை சதாசிவம்னு ஒரு விபசார புரோக்கரோடது அவன் கொலையானதுக்கு முந்துன நாள்தான் டெல்லில ஒரு ஸ்டூடண்ட்ட சிலர் ஓடுற பஸ்ஸுல கற்பழிச்சாங்க அந்த கேஸ் மீடியால வந்து சென்ஸிடிவ் நியூஸ் ஆச்சு...சோ மனரீதியா அந்த நியூஸால பாதிக்கப்பட்ட ஒருத்தரோ அல்லது ஒரு நெட்வொர்க்கோ எந்த சம்பந்தமும் இல்லாத அந்த புரோக்கர கொன்னு இருக்காங்க அதே மாதிரி மும்பைசிட்டிக்குள்ளயே ஒரு லேடி ரிப்போர்ட்டர கற்பழிச்ச நீயூஸ் வந்த அடுத்தநாள் தான் முதல் கொலைய போலவே கற்பழிப்புக்கு சம்பந்தமே இல்லாத உசேன் என்கிறவரோட உறுப்ப அறுத்து ரெண்டாவது கொலைய அதே மும்பைல செஞ்சிருக்காங்க சார்.. அதுக்கப்புறம் ஒரு மாசம் கழிச்சு நம்ம ஊர்ல அந்த ஸ்கூல் மேட்டர் சார்" 

"ஒரு சின்ன பொண்ன அந்த ஸ்கூல சேந்தவங்களே பாலியல் கொடுமை செஞ்சதா கேஸ் அந்த கேஸா? "

"ஆமாம் சார் அந்த நியூஸ் வந்த அடுத்த நாள்தான் இந்த கொலையும் நடந்திருக்கு"

"ஓ மை காட் இட்ஸ் வெரி ஸ்ட்ரேஞ்" 

"இதுல சிக்கலான விசயம் என்னன்னா இதெல்லாம் பன்றது ஒரு குரூப்பா இல்ல தனிப்பட்டவங்களான்னு மொதல்ல  நாம கண்டுபிடிக்கனும் ரெண்டாவதா மும்பையில ரெண்டு கொலை சோ இங்க பெங்களூர்லையும் அவங்க இன்னொரு கொலை நடத்திக்காட்டலாம்... அவங்க டார்கெட் ஒவ்வொரு எரியாவுலையும் ரெண்டு கொலையா கூட இருக்கலாம் சார்... சோ அடுத்த கொலைக்கும் பிறகு இதே மாதிரி வேற எதாவது ஏரியாவுல கொலை நடந்தா இது ஒரு நெட்வொர்க் சம்பந்தபட்டதுங்குற ஒரு கோணம் ஓரளவு உறுதியாகும் சார் " 

"நாட்டுல நடக்கிற சென்சிடிவ் பிரச்சினைக்கு அடுத்த நாள் கொலை பண்றாங்கன்னா நிச்சயமா எதோ ஒரு நெட்வொர்க்தான் இத பன்னுதுன்னு நினைக்கிறேன் போராடி போராடி சலிச்சு போன ஒரு கூட்டம் ஆயுதத்த கையிலெடுத்திருக்கு போல பிளடி பீப்பிள்" 

"பட் சார் இருந்தும் வேற ஒரு டவுட்டும் இதுல எனக்கிருக்கு எதோ நெட்வொர்க்தான் இத பன்னுதுன்னா முதல் கொலையப்பவே அவங்க எச்சரிக்கை மாதிரி எதாவது அறிக்கை விட்டிருக்கனுமே சார் மூனு கொலையிலையும் இதுவரைக்கும் அவங்க எதுவும் சொல்லல அதான் இந்த கேஸ்ல இடிக்குது" 

"மே பி தே ஆர் இண்டலிஜண்ட் பீப்பிள் அதான் மக்களுக்கே உரைக்கட்டும்னு நினைக்கிறாங்களோ?" 

"ஒருவேள இது ஒரு நெட்வொர்க் சம்பந்த பட்டதுன்னா அவங்க சொல்ல வரது ஒரே விசயம்தான் சார்.... நாட்ல எந்த ஒரு பெண்னுக்கு எதிராகவும் பாலியல் கொடுமை நடந்துன்னா ஒரு ஆண்குறி வெட்டி எறியப்படும்...அது மூலமா பெண்களுக்கெதிரான கொடுமைகளுக்கு நேர்கோட்டில் ஒரு செத்த ஆண்குறியை வைக்கப்படும் இதான் சார் அவங்க சொல்ல வர மெசெஜ்.. நமக்கிருக்குற தலைவலி இதுல என்னன்னா இனி நாட்டுல இன்னொரு பாலியல் வன்முறை நடக்காம பாத்துக்கனும் அப்பதான் அடுத்த ஆண்குறி அறுபடுதல தடுக்க முடியும் இதுக்கு நமக்கு இருக்கிற ஒரே வழி இந்த கேஸ் சம்பந்தமான கோணங்கள அப்படியே மீடியாவுக்கு கொண்டு போகனும் சார் இந்த விசயங்கள மீடியா மூலமா மக்கள்கிட்ட கொண்டு போய் சேத்தோம்னாதான் மக்கள் கொஞ்சம் எச்சரிக்கையாகி ஒரளவு தவறுகள் செய்வத குறைக்கலாம் அதுக்கு உங்க அனுமதி வேணும் சார்" 

"யெஸ் யூ ஆர் ரைட்.... ஓகே கிருஷ்ணா டிபார்ட்மெண்ட் சார்பா நைட்டே பிரஸ் மீட் வச்சு நீங்களே இத சொல்லிடுங்க அண்ட் பைண்ட் தி அக்யூஸ்ட்ஸ் சூன்" 

"தேங்க் யூ சார்"என சல்யூட் வைத்து அறைய விட்டு வெளியேறினார் கிருஷ்ணா 

சிவப்பு விளக்கின் முன்னே நீண்ட மலைப்பாம்பு போல பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் அரக்கோணத்தில் சிக்னலுக்காக காத்திருந்தது . 

-------------------------------------------------------------------------------

வெயில்

மழைக்காலத்தில்
வெயில் பற்றிய சிந்தனை 
எப்படி வந்ததென புரியவில்லை 
காலையில் தவறிவிழுந்து 

சிதிலமடைந்த முட்டையின்
மேலாக பெருங்குரலெடுத்து
கரைந்த காகத்தையும்
அம்முட்டையின் உயிர்க்குழம்பிருந்த
தடத்தையும் காணாது
தேடியபோது வந்திருக்கக்கூடும்
உண்மையில் வெயில்
மழையைப்போல
யாவையும் கழுவவிடுவதில்லை
இன்னும் ஆழமாக
கறை கூட்டி நினைவுறுத்துகிறது !!

Wednesday, November 5, 2014

ரசவாதம்

நாளொன்றுக்கு
ஏழெட்டு தடவை வீதம்
மொத்தக்குவியத்தையும்
குவித்து அவள்
நெற்றியில் பொட்டை
அமர்த்தியதற்கு
பிறகுதான்
ரசம் கூடுகிறது
கண்ணாடிக்கு. 

Wednesday, October 29, 2014

வெளிவராத கவிதைகள் - 2

ஞானஸ்நானம் 

சவுதாமினியின் அம்மாவுக்கும்
அப்பாவுக்கும் நேத்து 
பெரிய சண்டையாம் 
ஹோம்வொர்க் செய்யலன்னு 
டீச்சர் திட்டினதுக்கு 
அப்படி சொல்லிட்டு அழுதா 
ப்ளீஸ்பா நானும் ஹோம்வொர்க் 
செய்யும்போது மட்டும் 
நீங்க சண்டைபோடாதீங்க 
என கைகளுக்குள் புகுந்து 
தாடையை தடவி
அவள் சொல்லி 
முடித்தபோது ஆட்டுக்குட்டியின் 
கைகளில் கர்த்தராகியிருந்தேன் !! 

வருத்தங்களுக்குஅப்பால்

ஆடித்தள்ளுபடிகளில் கூட 
உடை வாங்கித்தராதவனென்று 
அட்சயதிருதியைகளில் கூட
நகை வாங்கித்தராதவனென்று 
பண்டிகைநாட்களில் கூட 
பொருள் வாங்கித்தராதவனென்று 
சம்பளதினங்களில் கூட 
இனிப்பு வாங்கித்தராதவனென்று 
மூகூர்த்ததினங்களில் கூட
பூக்கள் வாங்கித்தரதாவனென்று
அவளுக்கிருக்கும் ஏகவருத்தங்களுக்கு
அப்பால் சிறு தலைவலிக்கு 
பதறியடித்து தைலமொன்றை
தடவிவிடும் பேரன்பும் இருக்கிறது !!

முத்தக்கதை 

கூட்டுக்குள் அலகுகள் மோதும் 
குருவி முத்தம்
இலைகளை சினுங்க வைக்கும்
காற்றின் முத்தம்
மூச்சைப்போல் கரையை தீண்டும்
அலை முத்தம்
மோகம்தீர மேகத்தில் புகும்
நிலவு முத்தம்
பூக்களுக்குள் எப்போதும் தீராத 
தேனீ முத்தம்
புல்வெளியில் ஊர்ந்து தீர்க்கும்
பாம்பு முத்தம் 
தண்டவாளங்களில் நீண்டபடி இருக்கும்
ரயில் முத்தம் 
என மேலதிக முத்தங்கள் 
தீர்ந்த பிறகும் 
உனக்காய் எப்போதும் மிச்சமிருக்கும்
ஒரு கொசுறு முத்தம் !!
---------------------------------------------------------------------------------------------------------------------------

வெளிவராத கவிதைகள் - 1

மழை பற்றி மேலும் ஒரு கவிதை

எல்லா மண்ணிலும்
மழையை பற்றிய ஒரு
வாசனை உண்டு 

எல்லா கவிஞர்களிடமும் 
மழையை பற்றிய ஒரு 
கவிதை உண்டு 

எல்லா மழையிலும் ஊரின்
வாசனை இல்லை 

எல்லா மழையும் கவிதை இல்லை !!

காலச்சக்கரம்

இன்றை நேற்றாக
நேற்றை நாளையாக
வைத்திருக்கும் குழந்தைகளிடம் நாளை நாளையாக விரும்புவதில்லை !!

சிலுவைப்பாடு

விருப்பமில்லாத
களத்தில் இருப்புகொள்ளும் ஒவ்வொரு கணமும் புரிகிறது சிலுவைப்பாடு !

நான் இல்லாத நான்


புன்முறுவல்கள்
கைகுலுக்குதல்கள்
கட்டிப்பிடித்தல்கள்
பாராட்டுதல்கள்
பேச்சுவார்த்தைகள்
கைதட்டல்கள்
மட்டுமின்றி
தாழிடப்பட்ட இந்த 
அறைகளுக்குள்ளும்
இல்லை நானும் 
என் இந்த கவிதையும் !! 

 

Wednesday, October 22, 2014

கத்தி (2014) - மாற்று கமர்சியல் சினிமா


கொஞ்சம் சென்ஸிடிவ்வான பிரச்சினைகளை கையாளும் விதத்தை அடிப்படையாகக் கொண்ட புத்திசாலித்தனமான திரைக்கதைகள் சொல்லிஅடிக்கும் கில்லியாக ஹிட்டாகி வருவது நம் தமிழ்சினிமாவின் வரலாறு...

ரசிகனை பெரியதாக லாஜிக் பார்க்க விடாமல் கலகலவென இருக்க வைத்து கொஞ்சமாய் உள்ளூர உசுப்பேத்தி சமூக பிரச்சினைகளை பொதுப்புத்தி அனுகுதல்களில் இருந்து விலகி சற்றே மாறுபட்டு புத்திசாலித்தனமாக கையாளும் ஹீரோவை  மையப்படுத்தி கொணாடாட வைக்கும் படமே கத்தி..

எங்க  வீட்டுப்பிள்ளை, ராஜாதி ராஜா போன்ற வழக்கமான காண் ஒற்றுமை நாயகர்களை கொண்ட, வழக்கமான ஆள் மாறாட்ட  கதைதான்,  என்பதை பற்றிய யோசனை எல்லாம் சாவகாசமாக தியேட்டரை விட்டு வீட்டுக்கு வந்தவுடன் மட்டுமே தோன்றுமாறு இருக்க வைத்தது தான் இங்கே முருகதாஸின் மேஜிக் ..

கலை சினிமாவை கமர்சியல் சினிமாவாக்கும் கலை  முருகதாஸை போன்ற சிலருக்கே சொந்தமானது, மெமண்டோவை ஆகச்சிறந்த கமர்சியல் கஜினியாக்கி இந்தியாவை திக்குமுக்காட வைத்தவர்,  இதிலும் அதே பானிதான்.. சில ஆண்டுகளுக்கு முன் ஹிந்தியில் வெளியான  பீப்லிலைவ் என்றோரு நகச்சுவை கலந்த கலை சினிமாவை சுட சுட மசாலா கலந்து கமர்சியல் சினிமாவாக்கி விருந்தே படைத்திருக்கிறார் முருகதாஸ்..

இரண்டு படங்களும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அடிப்படையாக கொண்ட கதைகள், இரண்டிலும் மீடியாக்களின் டிஆர்பி பசியை துகிலுரித்திருக்கிறார்கள், இப்படி சமூக பிரச்சினைகளை கமர்சியல் சினிமாவில் எவ்வளவு உணர்ச்சிகரமாக சொன்னாலும் தியேட்டரை விட்டு வெளியே வந்ததும் மறந்துபோகும் அதுதான் அதன் ஒரே சாபக்கேடு.. 
இருக்கட்டும் தமிழ்சினிமாவின் அஞ்சான் போன்ற அரைத்த மாவு கமர்சியல் சினிமாக்களில் இருந்து வேறுபட்டு  டெக்னிக்கலாக மிரளச்செய்த இந்த கத்தியை இப்போதைக்கு வரவேற்போம் இனி கமர்சியல் சினிமாவின் தரம் இதன் மூலம் மாறும் என்ற நம்பிக்கையோடு..

விஜய்க்கு வருவோம் சமகாலத்தில் எந்த ஒரு நடிகருக்கும் அரசியல் ரீதியாக இவ்வளவு பிரச்சினைகள் வந்திருக்காது வெளிப்படையான கருத்துக்கள் எதுவும் அவர் சொல்வதில்லை என்ற போதும் அவரை கொண்டாடும் மக்களின் பொருட்டு சற்றே கலவரமாகும் அரசியல் தலைகளின் வெளிப்பாடு அவரை இந்த பாடு படுத்துகிறது.. இருந்தும் ஆயிரமாயிரம் பிரச்சினைகள் அவரை சூழ்ந்து கொண்டாலும் அவரின் ஆன் ஸ்கீரின் எனர்ஜி என்பது வேற லெவல்.. அந்த லெவலின் எல்லை வரை கூட்டிச்சென்ற சில படங்கள் எல்லாமே அவரின் மாஸ் ஹிட்டுகளாக அமைந்திருக்கின்றன அதே கதைதான் கத்தியிலும் , கில்லி,போக்கிரி,துப்பாக்கி வரிசையில் கலந்துகட்டி அடிக்கும் விஜய் எனர்ஜி சினிமாவே இந்த கத்தி..

பொதுவாக நல்ல மாஸ் நடிகனுக்கு அந்த துறு துறு எனர்ஜி மிக அவசியம் அதில் எந்த குறையும் அவர் எந்த படத்துக்கும் வெளிக்காட்டாமல் இருந்ததில்லை சமயங்களில் கைகூடாமல் போன லாஜிக் இல்லாத திரைக்கதைகளில் அந்த எனர்ஜி இருந்தும் வீனாகிப்போன பல சினிமாக்கள் 
உண்டு, போகட்டும் எல்லாம் கைகூடிய இந்த திரைக்கதையில் அந்த எனர்ஜி ரசிகனை தொற்றிக்கொண்டு ஒரு ஜகஜால 10000 வாலா பட்டாசாக வெடித்து தள்ளியிருக்கிறது என்பதே மறுக்க முடியாத நிஜம்...

ஜீவானந்தம் - மென்சோகம் இழைந்தோடும் விவசாயிகளின் பங்காளன்,
கதிரேசன் - துறு துறு கிரிமினல் இளைஞன் என இரண்டு விஜய்கள்,
விவசாயிகளின் அடிப்படை வாழ்வாதர பிரச்சினை,
கார்ப்ரேட் கம்பெனி CEO வின் சுயநலம், மீடியாக்களின் மீதான சவுக்கடி, இவற்றை சுற்றி பின்னப்பட்ட திரைக்கதையை மல்டிப்பிளக்ஸ் ரசிகன் முதல் டெண்டுகொட்டாய் ரசிகன் வரை விசிலடித்து கைதட்டி கொண்டாடும் ட்ரீட்மெண்டில் வந்திருக்கும் படமே கத்தி

விஜய் எனர்ஜி + முருகதாஸின் புத்திசாலித்தனம் + அனிருத்தின் இன்றைய இளைஞர்களுக்கு தேவையான மேஜிக்கல் மியூசிக் கலந்த கம்ப்ளிட் ஹிட் பேக்கேஜ்தான் இந்த கத்தி.. 

தமிழ்சினிமாவின்  பாக்ஸ் ஆபிஸ் ஹிட் போட்டியில் கத்திக்கென ஸ்பெஷலாக ஒரு சிம்மாசனம் காத்திருக்கிறது..

வாழ்த்துக்கள் கத்தி & டீம் 

தோழமையுடன்
கர்ணாசக்தி.


Tuesday, October 21, 2014

பன்றி (Fandry) - கடைசாதி மக்களின் நிலைக்கண்ணாடி



யார் சார் இப்பல்லாம் ஜாதி பாக்குறாங்க..எல்லாரும் அன்பாதானே இருக்கோம்..அத பத்தி பேச என்ன இருக்கு? என்றும் இடஒதுக்கீடு என்பதெல்லாம் சமூகநீதி அல்ல அது ஒரு மகாபாவம் என சித்தரித்தும்.. தப்பித்தவறி வேறு யாரேனும் தலித்தியல் குறித்து பேசினாலும் அதையும் தலித்திய சாதி வெறியாக அர்த்தப்படுத்திக்கொள்ளும் இன்றைய சமகால முற்போக்குவாதிகளே உங்களின் முகத்தில் அறைந்து உண்மையை எடுத்து சொல்ல எந்த திராணியும் இல்லாது தலித்திய பெருஞ்சோக வாழ்வை கலை வழியே காட்டி வெளிச்சம் பரப்பும் சிறு முயற்சியே இந்த பன்றி

இந்த திரைப்படம் உங்களிடம் எந்த அரசியலையும் பேசவில்லை.. மிக மிக யாதர்த்தமான ஒரு சிறுவனின் உலகத்தையே அது பேசுகிறது… உங்கள் அன்பு சூழ்ந்த உலகம் உண்மையில் எப்படி இருக்கிறது என்றே பேசுகிறது.. இதன் நாயகன் உங்கள் பதின்ம வயதைப்போலவே இரட்டைவால்குருவி, நவநாகரிக உடை, காதல், இவைகளின் மீதே மோகம் கொண்டவனாக இருக்கிறான் அவனின் பெயர் ஜாப்யா.. அவனுக்கு அந்த ஊரின் உயர்சாதி பெண் ஷாலுவின் மீது ஒருதலைக்காதல் இருக்கிறது அந்த காதலின் பொருட்டு அவனுக்கு குறுக்காக சில பன்றிகளும் உங்கள் பார்வையில் அன்பு காட்டும் வர்கம் என்று நீங்கள் சொல்லிக்கொள்ளும் உயர்நிலை,இடைநிலை சாதி மக்களின் வன்மம் மட்டுமே பெரும் சகதியாக நிற்கிறது 

அந்த சகதியை அவன் மீதும் அந்த பன்றிகளை மேய்க்கும் அவன் குடும்பத்தின் மீதும் எப்போதும் அந்த ஆதிக்க வர்கம் வாரி இறைக்கிறது எல்லாவற்றுக்கும் மேலாக அந்த கிராமம் அவனையும் ஒரு பன்றியாகவே பார்க்கிறது..

காதலுக்கு முன்னால் எந்த சகதியும் பொருட்டல்ல என்றவாறு ரெட்டைஜடை மற்றும் ரெட்டைவால் குருவிகளின் பின்னால் கவிதையாய் திரிபவனை பிடித்து இழுத்து வந்து ஊர் நடுவில் நிற்க வைத்து உங்கள் சமூகம் அந்த சகதியை நக்கச்சொல்கிறது.. அதுவும் அவனின் மானசீக காதலி பார்த்துக்கொண்டிருக்கும் போதே.. 

அவனும் எந்த அரசியலையும் பேசாமல் உடைந்து உருகி சகதியை நக்கி உங்கள் வன்மங்களுக்கு இரையாகிறான்.. தன்நிலைமை குறித்தும் சமூக பொருளாதார இருப்பை குறித்தும் எந்த காதலியின் முன்னால் காட்டக்கூடாது என்று ஓடி ஓளிந்து காதல் வளர்த்து திரிந்தானோ அதே காதலியின் முன்னால் நக்கிய உங்கள் சகதியை சுமந்து திரும்புவனிடம் உங்கள் ஆதிக்கசீண்டல்கள் இன்னும் அதிகமாக தொடர காதலியே இல்லை என்றான பிறகு அவன் எதிர்வினையாற்றுகிறான் வெடித்து அழுது அப்படி அவன் நிகழ்த்துகிற அந்த எதிர்வினையானது இந்திய சமூகத்தின் முகத்தை எப்படி பதம் பார்க்கிறது என்பதை உள்ளம் உருக பேசும் படமே பன்றி

படத்தில் ஜாப்யாவையும் அவனின் குடும்பத்தையும் போலவே எந்த அரசியலையும் வெளிப்படையாக பேசாது அம்பேத்கர் , பூலே போன்றவர்கள் சுவர் ஓவியமாக அமைதியாக இயல்பாக காட்சிகளில் கடக்கின்றனர்.. அந்த இயல்பான வாழ்கை கடத்தலினூடே படம் அமைதியாக பேசும் யாதார்த்தத்தின் அரசியலானது லட்சம் சாட்டைகளுக்கு சமம் மனசாட்சி என்ற வஸ்துவோடு இத்திரைப்படத்தை நீங்கள் பார்த்தால் அந்த சாட்டைகள் உங்களை நிர்வானமாக்கி தோலுரிக்கும் வலியை தரக்கூடியது 

படத்தில் ஒரே ஒரு பாடலாக வரும் ”ஜனகனமன “ தேசியகீதம் ஒலிக்கும் காட்சியமைப்பிற்கும் அதனூடே எழும்புகிற கேள்விகளுக்கும் உங்களால் எங்கிருந்தும் ஒரு பதிலை கண்டுபிடித்து கொண்டு வந்து விட முடியாது.. பாரம்பரிய இந்திய சினிமாவில் கட்டுடைத்தலை ஆணித்தரமாக நிறுவிய படத்தின் இயக்குனர் நாக்ராஜ் மஞ்சுலே வரலாற்று சிறப்பு மிக்க படைப்பாளி என்பதை அவர் வடித்த இந்த செல்லுலாய்ட் கவிதை காலம் முழுக்க உணர்த்திக்கொண்டே இருக்கும்.. தலித் சமூகத்தை சார்ந்த இவர் ஒரு கவிஞரும் ஆவார்.. அவரின் கிராமம் மற்றும் பதின்ம வயது அனுபவங்களே இந்த திரைப்படம்

எந்த புனைவுமில்லாது சமகால தலித்திய வாழ்வை அப்பட்டமாக உரக்கச்சொன்ன இந்த பன்றி படத்து ஜாப்யா வைப்போலவே பள்ளியை, கல்லூரியை, காதலை, இருப்பை, கடந்த, கடந்து கொண்டிருக்கும் இனி கடக்க போகும் ஒரு சமூகம் குறித்த உங்கள் பார்வையை தயவு செய்து இந்த படத்தை பார்த்த பிறகேனும் மாற்றிக்கொள்வீர்கள் என சிறிதாக நம்புகிறேன்

ஆகவே நாடெங்கும் மனிதர்களின் மீது அன்புதான் வியாபித்திருக்கிறது என நம்பி அன்பை பரப்பிக்கொண்டிருக்கும் ஜீன்ஸ் அனிந்த இயேசுபிரான்களே.. இடஒதுக்கீடு மற்றும் ஒடுக்கப்பட்டவர்களை குறித்த உங்கள் முற்போக்கு சித்தாந்தங்களை ஒருமுறையேனும் இந்த திரைப்படத்தை பார்த்த பிறகு மாநிலம் தேசம் உலகம் என எல்லாவற்றையும் கடந்து பரப்புங்கள்..

நன்றி

தோழமையுடன்

கர்ணா சக்தி


( இந்த மாபெரும் காவியத்தை காண பரிந்துரைத்த http://yalisai.blogspot.in/  லேகா ராமசுப்ரமணியன் அவர்களுக்கு ஆயுள் முழுமைக்குமான கோடி நன்றிகள் J )