Wednesday, May 24, 2017

Lion (2016) - மனிதம் கோரும் சமூக படைப்பு




முளைத்து வளர்ந்த பிரதேசத்திலிருந்து, குடும்பத்திடமிருந்து, ஐந்து வயதுச் சிறுவனை கொத்தாக பிய்த்தெடுத்து வேறொரு பிரதேசத்தில் நட்ட விதியைத் தாண்டி  இருப்பத்தைந்து வருடங்களுக்குப் பிறகு தன் பிரதேசத்தை, குடும்பத்தை மீட்டெடுக்கும் ஒரு இளைஞனின் உண்மைக் கதை லயன்.

சரூ..  என்கிற அந்த ஒற்றைக்கதாபாத்திரம்தான் படத்தின் மையம். பரந்துவிரிந்த பெரும் நிலப்பரப்புகளில் தன் வேர்களை தேடியலையும் அந்த ஐந்து வயது சிறுவனின் தவிப்பை தத்ரூபமாக வெளிக்கொணர்ந்து உண்மையான சரூ'வின் கண்களும், பிஞ்சுக்கால்களும்,குரலும், இப்படித்தான் அலைந்திருக்கும் என தன் உடம்பின் அத்தனையையும் நடிக்கவைத்திருக்கிறான் அந்தச் சிறுவன். அவனதைத்தாண்டி படத்தில் சிலாகித்திட எதுவுமில்லை என்கிற அளவிற்கு மிகச்சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறான். இருந்தும் மனிதர்களை துண்டாடும் பெரு நிலங்களின் காட்சிகளையும், பிஞ்சு சரூ'வை உள்ளடைத்துக்கொண்டு அழகழகான பிரதேசங்களில் இருட்டினூடே சீராக ஓடுகிற ரயிலை பற்பல லாங்ஷாட்டுகளும், ஜன்னல் ஷாட்டுகளுமாக காட்டி வாழ்நாளில் முதல் முறையாக ரயிலை ஒரு வில்லனைப் போல உருவகப்படுத்தி பதியவைத்த  ஒளிப்பதிவும், ஸ்கிரிப்ட்டும், இயக்கமும், இப்படத்தில் அடுத்த தரமான விசயங்களாக அமைந்திருக்கின்றன.

எல்லாவற்றிற்கும் மேலாக, திரைக்கலை முற்றாக பொழுதுபோக்கிற்கு மட்டுமே உகந்தவை என்கிற ரீதியிலான கருத்துக்களை உடைத்தெரிவதற்கு "லயன்" மாதிரியான திரைப்படங்கள் பக்கபலமாக இருக்கின்றன என்பதுதான் இத்திரைப்படத்தின்  ஆகச்சிறந்த ஆரோக்கிய முன்னெடுப்பாக சொல்லவேண்டியிருக்கிறது. எப்படியெனில், நம் அன்றாட வாழ்வில் கலைந்தகேசம், அழுக்குச்சட்டை, கோணிப்பை சகிதமாக நமைக் கடந்துபோன எண்ணற்ற சிறார்களைப் பற்றிய சிந்தனைகளை "லயன்" ஆழமாக கோருகிறது. நிராதரவாக சுற்றித்திரியும் அத்தகைய சிறார்களை அழைத்து ஒரிரு நிமிடம் வாஞ்சையுடன் பேசி அவர்களின் கதையைக் கேட்டு அவர்களுக்கு எதேனும் உதவி தேவைப்படுகிறதா என வினவ வேண்டும் என்கிற சிந்தனைகளை இத்திரைப்படம் முன்னெடுக்கிறது. இப்படியாகப்பட்ட சிந்தனைகளைத் தோற்றுவிக்கும் ஊடகமாக திரைக்கலை இருப்பதென்பது ஒரு மகத்தான
விடயமாகும். "லயன்" திரைப்படம் அப்படி ஒரு மகத்தான கலையாக கம்பீரமாக நிற்கிறது. இனி வரும் காலங்களிலும் நிற்கும்.

தங்கள் நிலம்,குடும்பத்திடமிருந்து தங்களை வலுக்கட்டாயமாக பிரித்தெடுத்த வெள்ளையர்களிடமிருந்து தப்பித்து மூன்று மாதங்கள் நடந்தே சென்று தங்கள் குடும்பத்திடம் சேரும் ஆஸ்திரேலிய பழங்குடிச் சிறுவர்களைப் பற்றிய உண்மைக்கதையான "ரேபிட் ஃப்ரூப் பென்ஸ்" எனும் உன்னத திரைப்படத்தின் நினைவு  "லயனை"ப் பார்க்கும் பொழுது வந்தது. இந்த இரண்டு திரைப்படங்களும் ஆஸ்திரேலிய கண்டத்தை பின்புலமாக கொண்டவை என்பது குறிப்பிடவேண்டிய ஒன்று " ரேபிட் ப்ரூப் பென்ஸ்" மிகச்சிறந்த திரைப்படம்தான் என்றாலும் நமக்கு பரிச்சயமில்லாத தூர தேசத்தைச் சார்ந்த குழந்தைகளைப் பற்றிய கதையாவதால் அப்படம் நமக்கு ஓரளவு அன்னியப்பட்டு இருக்கும். ஆனால் "லயன்" நம் தேசத்தில் நாம் அன்றாடம் கடந்துபோகும் தெரு சிறார்களின் கதையை முன்வைப்பதால் இப்படம் நமக்கு மிகமிக நெருக்கமான படமாக உள்நுழைந்து கொள்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, எண்ட் கார்டில் சொல்லப்படும் இந்திய தேசத்தின் நிராதரவுச் சிறுவர்களைப் பற்றிய புள்ளி விவரக்கணக்குள் பகீரென பொட்டில் அடித்தாலும், அப்படி அலையும் சரூ" போன்ற சிறார்களைக் கண்டடைந்து நம்மால் முடிந்த உதவிகளை அவர்களுக்குச் செய்ய வேண்டும் என்கிற மனிதத்தை விதைக்கின்ற படியால் "லயன்" உன்னத சினிமா என்பதைத் தாண்டி ஒரு ஆகச்சிறந்த சமூக கலைப் படைப்பாக ஆகிறது.