Saturday, August 11, 2018

விஸ்வரூபம் 2 - ஆண்டவர் (எ) சர்வதேச உளவாளி


"அமெரிக்கன் ஸ்னைப்பர்" என்றொரு ஹாலிவுட் திரைப்படம். கிளிண்ட் ஈஸ்ட்வுட் இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு வெளிவந்தது. அமெரிக்காவுக்காக ஆதிக்கம் செய்யப்போன இஸ்லாமிய நாடுகளில், அமெரிக்க ராணுவ வீரர்கள் என்னென்ன மாதிரியான உளவியல் சிக்கல்களை நேர்கொள்கிறார்கள் என்பதாக அந்தப்படம் நிகழும். ஒபாமாவின் மனைவி முதல்,  அமெரிக்காவின் தெருக்கோடி குடிமகன்கள் வரை அமெரிக்க ராணுவத்தின் பரிதாபகரமான நிலைகளை நினைத்து உச்சுக்கொட்டி  கொண்டாடிய படம் இது என்பது வரலாறு. (ஆனால், படம் பார்க்கையில் நமக்கு இஸ்க் இஸ்க் என்றுதான் கேட்கும்) படத்தில் ஸ்னைபரான நாயகன், ஒரு இஸ்லாமிய சிறுவனை சுட நேர்கிற தருணத்தை ஒரு காட்சி அழுத்தமாக காட்சிப்படுத்தியிருக்கும். 

நாயகன் அந்த இஸ்லாமியச் சிறுவனை சுடுவானா? மாட்டானா? எனப் பார்வையாளர்களிடம் சில நிமிடங்களுக்கு ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்கிவிட்டு, இறுதியில் பல்வேறு மனப்போராட்டங்களுக்கிடையே நாயகன் வேறுவழியின்றி, அச்சிறுவனை சுட்டுக்கொல்வதாக அந்தக்காட்சி நிறைவுறும். அமெரிக்கர்கள் 'பெண்கள்,குழந்தைகளை சுடமாட்டார்கள் என்பது பச்சைப் பொய்.' என்பதை,  அமெரிக்கர்களே ஒப்புக்கொண்டு படமெடுக்கின்ற காலத்தில்தான், நம் உலகநாயகன் 'அதெல்லாம் ஒன்னுங்கிடையாது.. நீங்க சும்மாருங்க.. அமெரிக்கன்ஸ் பெண்கள் குழந்தைகளை கொல்லமாட்டாங்க' என முன்னர் எடுத்த விஸ்வரூபத்தின் அடுத்த பாகத்தை "மக்கள் நீதி மய்யம்" சுய விளம்பரத்திற்கு பிறகு இன்னும் அழுத்தமாக ஆரம்பிக்கிறார். சென்றமுறைக்கு இந்தமுறை இன்னமும் பலபடிகள் முன்னேறி.. ஜிகாதிகளைக் குண்டுவீசிக் கொல்ல அமெரிக்கன்ஸ் கொண்டுவந்த ஹெலிகாப்டரில், ஓமரின் மனைவி மற்றும் குழந்தைகளை விசாம் ஏற்றி, படிக்கவைக்க கூட்டிப்போவதாக ஒருகாட்சியை வைத்திருக்கிறார். ஆஹா.. வாய்ப்பிருந்தால் கமல் ஓபாமாவின் மனைவிக்கும், அம்ரிக்க மக்களுக்கும் படத்தை திரையிட்டுக் காட்ட வேண்டும். அமெரிக்க குடிமக்கள் "அமெரிக்கன் ஸ்னைப்பர்" படத்தை தூக்கி கடாசிவிட்டு  விஸ்வரூப் 1&2 ஐக் கொண்டாடித் தீர்ப்பார்கள். கமல் ஆஸ்கர் கூட  வாங்கிக்கொள்ளக் கூடிய சாத்தியங்கள் திரைப்படத்தில் இருக்கிறது. 
--
யாரென்று புரிகிறதா? எனப் பார்வையாளர்களை நோக்கிய கேள்விக்கனைகளை வீசியபடியும், கையோடு கையாக நியூயார்க்கை காப்பாற்றிய படியும் முடிந்த முதல்பாகத்தின் தொடர்ச்சியாய் படம் துவங்குகிறது. விசாம் மற்றும் அவரது குழு உண்மையில் யார்? என்பதுதான் விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகம்.  கூடவே லண்டன் மற்றும் டெல்லியை அணுகுண்டு/ தீவிரவாத தாக்குதலில் இருந்து விஷாம் காப்பாற்றுவது படத்தில் இலவச இணைப்பு. முழுக்கமுழுக்க ஆண்டவரின் சுயபுராணத்தைப் பாடவேண்டியிருப்பதால், இந்தமுறை புறாவின் கால்களில் சீசியங்களை கட்டி நியூக்கிளியர் பாமைத் தயாரித்து வீசிக்கொண்டிருக்காமல், ஹிட்லர் காலத்தில் 1500டன் அணுஆயுதங்களுடன் கடலில் மூழ்கிய கப்பலுக்கு லண்டனை அழிக்கும் பொறுப்பைக் குடுத்துவிட்டு, லண்டனையும், போகிற போக்கில் டெல்லியையும்  காப்பாற்றுகிறார். 

கருணையே வடிவான இயேசுபிரான் அல்லது காந்தியடிகள் அல்லது அல்லா அல்லது இவர்கள் மூவரும் கலந்த சர்வதேச உளவாளியின் திரைப்படம் ஒன்றை நீங்கள் இதுவரை பார்த்ததில்லையெனில், காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளுங்கள் நம்மவர் அப்படி ஓரு மனிதநேய உளவாளியை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். உதராணமாக வில்லனின் ரைட் ஹேண்டான சலீம் ஆண்ட்ரியாவின் தலையைக் கொய்து விஷாமுக்கு பார்சல் அனுப்பியிருப்பார். அதற்கடுத்த காட்சியில் சலீமை கொல்லும் விஷாமுக்கு கண்கள் முழுக்க கண்ணீர் தேங்கி நிற்கும். போலவே, உமரை வீழ்த்தும் போதும் அவர் கண்களில் கருணை பொங்கி நிரம்பி வழியும். போலவே, ஓமரின் மனைவி,மகன்களை ஆப்கனிலிருந்து கடத்திக் கொண்டுபோய் அவர்களை வாழ்வாங்கு வாழவைப்பதோடு, மெடிசின், இஞ்சினியரிங்கும் படிக்க வைக்கிறார். இத்தனைக் கருணைமிகு உளவாளியை இந்திய ராணுவம் எப்படி தேர்ந்தெடுத்து, அவரை தன்னந்தனியாக விமானத்திலிருந்து தள்ளிவிட்டு, உளவு பார்க்க ஆப்கனுக்கும் அனுப்பியது என்பது நமக்கு ஆச்சர்யமாக இருந்தாலும், ஆண்டவரின் இயக்கம், ஸ்கீரின்பிளே என்பதால், நாம் வாய்மூடி லயிக்க வேண்டியது நம் கடமையாக இருக்கிறது. 
"பழக்கத்துக்காக கண்ணீர் வராதாயா?" எனக் கேள்வி எழுப்புகிறவர்கள்தான், ஆண்டவர் சர்வதேச தரத்தில் உளவாளியின் படத்தை எடுத்திருப்பதாகவும் பேசிக் கொள்வார்கள். 

நல்ல விசயமே இல்லையாயா? எங்க ஆண்டவர் பாப்பான தேசத்துரோகியா காட்டிருக்காரே? அதெல்லாம் பாக்க மாட்டியா? எனக் கேட்பவர்களுக்காக.. அதென்ன காட்டறது? மனுதர்மம் கொண்டு வந்ததுலர்ந்தே அவனுக தேசவிரோதிகதான?. விருமாண்டி எடுக்கும் போது பேசியாகவேண்டிய சாதிய பிரச்சினைகளை விட்டுவிட்டு சர்வதேசப் பிரச்சினையான தூக்கு பற்றி பேசுவதும், சர்வதேச அமெரிக்க சுரண்டலை பத்தி பேசவேண்டிய படத்துல அமெரிக்காவ விட்டுட்டு பாப்பான துரோகியா காட்றதும் கமலுக்கு கைவந்த கலை என்பதை குறிப்பிட வேண்டியதாகிறது.

விஸ்வரூபத்தின் ஒருகாட்சியில் விஷாமின் மனைவி நிருபமா.. வில்லன் சலீமிடம் "நீ செய்ற பாவத்தைல்லாம்,  கடவுள் பாத்துட்டுத்தான் இருக்காரு" "உங்க கடவுள் உன்னப் பாத்துப்பாரு"  எனச்சொல்லி முடிக்கிற நொடி, ஜன்னலை உடைத்துக்கொண்டு சலீமின் மீது பாயும் விஷாம், அவரைக் (பழக்கத்துக்காக அழுதுகொண்டே) கொல்லவும் செய்வார். ( குறியீடு? )

தசாவதாரம் அல்லது அன்பேசிவம் என நினைவு.  கமல் இப்படிச் செல்வார். "கடவுள் இருக்கார்னு சொல்றாம் பாரு அவனை நம்பலாம்"..  "கடவுள் இல்லன்னு சொல்றாம் பாரு அவனையும் நம்பலாம்".. " ஆனா.. தாந்தான் கடவுள்னு சொல்றாம் பாரு.. அவன மட்டும் நம்பவே கூடாது.