Wednesday, June 29, 2016

சொற்கள்

கடவுளர்களால் முலாம் பூசப்பட்டு 
வந்து விழுந்த இந்த சொற்களை
பொறுக்கி எடுத்துக்கொள்ளுங்கள்

எதுவாக வேண்டுமோ
அதுவாக மாற்றிக்கொள்ளுங்கள்

இடத்திற்கேற்ப உருமாற்றி
உபயோகித்துக் கொள்ளுங்கள்

முடிந்தமட்டும் நிதானமாக கையாள வேண்டும் 
எனும் ஒரேயொரு கோரிக்கையை 
மட்டும் நினைவில் கொள்ளுங்கள்

ஒருவேளை நீங்கள் இந்த
சொற்களின் வெளிப்புறம்
கரையுமளவு கையாள நேர்ந்தால்
அதில் வெளிப்பட்டு விடக்கூடும்
கடவுள் எனும் பைசாசத்தின் மூர்க்கம்.

- கர்ணாசக்தி

காலிப் பை


பிறந்ததிலிருந்து கைகளுக்குள்ளாகவே இருந்த மகளை அவளுக்கு முற்றிலும் அறிமுகமில்லாத ஒரு பள்ளிக் கட்டிடத்திற்கு நடுவே கல்வியின் பொருட்டு அமர்த்திவிட்டு வந்த அந்த முதல்நாளின் தவிப்பை போலவே இருந்தது பள்ளி சென்றுவர அவளை தனியார் வேனில் ஏற்றிவிட்ட இந்த முதல்நாளும்.

அவள் எல்.கே.ஜி, யு.கே.ஜிக்காக வீட்டிற்கு அருகிலேயே இருந்த பள்ளிக்கு சென்றுவந்து கொண்டிருந்த பொழுதெல்லாம் முதல் மூன்று மாதங்களைத் தவிர பெரிதாக வேறெந்த தவிப்பும் ஏற்படவில்லை. வீட்டிலிருந்து ஒரு 6 கி.மீ.க்கு அப்பால் உள்ள நகரின் சிறந்த பள்ளியில் அவளுக்கு ஒன்றாம் வகுப்பு சீட் கிடைத்து தொலைத்ததில் இருந்து வந்தது வினை.

எத்தனை வேலை இருந்தாலும் டிமிக்கி கொடுத்துவிட்டு பறவை தன் குஞ்சைக் கவ்விக்கொண்டு போவதைப் போல பள்ளியில் கொண்டு போய் விட்டுக் கொண்டும், அழைத்துக்கொண்டும் வந்து கொண்டிருந்தேன். பள்ளிக்கு போக முடியாத சமயங்களிலும் வெட்டியாக இருந்த மச்சினனை அனுப்பி அழைத்து வந்து கொண்டிருந்தேன். மச்சினனுக்கு திடீரென வேலை கிடைத்து விட்டதாலும். எனக்கு மிகச் சரியாக பள்ளி விடும் நேரங்களில் வேலை வருவதாலும் வேறு வழியின்றி தனியார் வேனின் உதவியை நாட வேண்டியதாயிற்று.

தனியார் வேனின் நம்பரையும், ஓனர், டிரைவர், என இருவரின் நம்பரையும் என்னுடைய மொபைலில், மனைவியின் மொபைலில், பதிவு செய்ததோடு தனியாக ஒரு டைரியிலும் எழுதி வைத்துக் கொண்டோம். பத்தாததற்கு அந்த வேனில் வந்துபோகும் மற்றொரு மாணவனின் அப்பா நம்பரையும் வாங்கி பதிவு செய்து கொண்டோம். வேனில் இருந்து எப்படி இறங்க வேண்டும், மற்ற மாணவர்களுக்காக வேன் காத்திருக்கும்போது வேனில் இறந்து இறங்கிவிடக்கூடாது என ஒன்றாம் வகுப்பு படிக்கும் மகளிடம் திரிஷ்யம் மோகன்லால் கணக்காக ஓராயிரம்முறை டியூசன் எடுத்து, டிரைவரிடம் அழாத குறையாக பத்திரமா பாத்துக்குங்கன்ணே என ஒன்பாதாயிரம் முறை ரிக்வெஸ்ட் கொடுத்து எல்லாம் முடிந்து முதல்முறையாக அவள் தனியார் வேனில் பள்ளிக்கும் சென்று விட்டாள்.

இனியெல்லாம் இப்படித்தான், எல்லாம் நல்லபடியாக நடக்கும், அவள் வளர்கிறாள், கவலைப்படாதே, என மனம் தனக்குத்தானே பல்வேறு ஆறுதல்களையும், சமாதானங்களையும், வழங்கிக் கொண்டே இருந்தாலும், 

என் டூவீலரின் முன்டேங்க் மட்டும் குட்டி இல்லாத கங்காருவின் காலிப்பையாட்டம் துருத்திக்கொண்டே இருக்கிறது.

Tuesday, June 28, 2016

சாய்ராத்: அடங்க மறுக்கும் அன்பு

                                           

சாய்ராத் - கிட்டத்தட்ட இயக்குனர் பாலாஜி சக்திவேலின் காதல் திரைப்படம்.
இரண்டுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது. கிட்டத்தட்ட அதே கதை என்றுகூட சொல்லலாம். ஆயினும் சாய்ராத் தமிழ் சினிமாக்களைப்போலல்லாமல் கதை மாந்தர்கள் இன்ன இன்ன சாதிகள் என தெளிவாக முன்வைக்கிறது. இந்த சாதியினர் அந்த ஊரில் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதை சம்மட்டியால் அடித்து சபைக்கு நடுவே காட்டுகிறது,

சாத்தியமில்லாத கற்பனை மூட்டைகளுடன் திரையில் ஒளிரும் வெற்றுக் கதைகளைக் காட்டிலும் நிதமும் நாம் அனுபவித்து வரும் சமூகத்தைப் பிரதியெடுக்கும் மண்ணின் கதைகளுக்கு அளப்பறியா வலிமையுண்டு. அவை இச்சமூகம் குறித்து கேள்வியெழுப்பாது மூளையில் புதைந்து போயிருக்கும் இயலாமைகளை மீட்டுருவாக்கம் செய்யும், மீண்டும் திமிறி கேள்வியெழுப்பச் சொல்லும், பதில்களைத்தேடச் சொல்லும். வழக்கம் போல கிடைக்காத பதில்களுக்காக கூனிக் குறுகி தனிமையில் அழச்செய்யும். பதில் தெரிந்த சூத்திரதாரிகள் எந்தப்புள்ளியிலாவது மானுடத்தின் இயல்பை சொல்லும் இந்த நிழல்களின் பிரதிபலிப்பை கண்டு நிஜங்களின் உண்மைகளைப் புரிந்து கொள்ள மாட்டார்களா என ஏங்கச்செய்யும். இவையனைத்தையும் ஒன்றுவிடாமல் திரைப்பிரதியின் மூலம் நிகழச் செய்கிறது மராத்தியி மொழியில் வெளியாகிருக்கும் இயக்குனர் நாக்ராஜ் மஞ்சுலேவின் சாய்ராத் திரைப்படம்.

மராத்திய மொழியில் சாய்ராத் எனில் காட்டுத்தனமான,கட்டுப்பாடுகளற்ற, எல்லையற்ற,முரட்டுத்தனமான, என்கிற ரீதியிலான தமிழ்வார்த்தைகள் கிடைக்கிறது. இன்னும் நெருக்கமாக புரிந்து கொள்ள அடங்கமறுக்கும் என வைத்துக்கொள்வோம். உண்மையில் எல்லோருக்குள்ளும் பொங்கிய, பொங்கப்போகும், பதின்ம வயதுக் காதல்கள் அத்தகைய இயல்புடையவைதான். உள்ளத்தில் புகுந்துப் புறப்படும் காதலின் இடையில் எது தடையெற்படுத்தினாலும் தூக்கியெறிந்து போகும் தன்மையுடன்தான் அது உருவாகிறது. அது இயல்பிலேயே அத்தகைய தன்மையுடன் தான் பிறக்கிறது, வளர்கிறது. வர்கம், சாதி, என எதையும் பொருட்படுத்தாத மானுடத்தின் பொதுவுடமை புரட்சி அது. அத்தகைய புரட்சி இந்தத் திரைப்படத்தில் மகாராட்டிரத்தின் ஒரு கிராமத்தில் மீன்பிடி தொழில் செய்துவரும் பர்ஷியா (எ) ப்ரஷாந்த் காலே எனும் தலித் இளைஞனுக்கும். அதே ஊரின் உயர்சாதி நிலக்கிழார்களான பாட்டீல் சமூகத்தைச்சார்ந்த அர்ச்சி (எ) அர்ச்சனாவுக்கும் இடையில் நிகழ்கிறது.

கல்லூரி பேராசியரை கன்னத்தில் அறைந்து விட்டு வந்த மகனிடம் நீ உன் தாத்தனைப் போலவே இருக்கிறாய் என பெருமைப்படும், புகார் சொல்ல வந்த பேராசியர்களிடம் புது பேராசிரியருக்கு எங்கள் சாதி பையன்களை அறிமுகம் செய்து வையுங்கள் எனச் சொல்லி வாயடைக்க வைக்கும், சாதிப்பெருமை மனிதர்கள் நிறைந்த அந்த ஊரில் எல்லையற்ற அன்பும்,நேசமும், கொண்ட காதலர்களுக்கு என்னென்ன எதிர்வினைகள் நிகழுமோ அது அத்தனையும் நிகழ்கிறது. எல்லா வீட்டு ஆதிக்கசாதி  பெருங்காதல் யட்சிகளைப்போலவே அர்ச்சி அவையனைத்தையும் உடைத்துக்கொண்டு பர்ஷியாவுடன் ஊரைவிட்டு  வெளியேறுகிறாள்.

இதற்குபிறகு இரண்டு தரப்பைச்சார்ந்த  காதலர்களுக்கும், சமூகத்திற்குமான யதார்த்தத்தையும், இழப்பீடுகளையும், சாய்ராத் முன்னிறுத்துகிறது அதில் மிக முக்கியமாக வீட்டை விட்டு வெளியேறிய ஆதிக்கசாதிப் பெண்களின் எல்லையற்ற சமரசத்தை, எப்போதும் பிறந்த வீடு குறித்த வாஞ்சையை,  தகப்பனின், தாயின், தமயனின், அருகாமையை வேண்டும் ஏக்கத்தை, எல்லாவற்றையும் பழைய நிலைக்கு மாற்றி விட முடியும் என்கிற அப்பாவித்தனமான நம்பிக்கையைப் பேசியதோடு அப்படி வாழ்ந்த/மறைந்த எண்ணற்ற  ஆதிக்கசாதிப் பெண்களின் ஒட்டுமொத்த நிஜத்தையும் சாய்ராத் பிரதிபலிக்கிறது. நேரெதிராக எதிர்புறத்தில் ஆதிக்கசாதி மனிதர்கள் பெண்களின் இந்த அடிப்படை இயல்பை ஒருபோதும் புரிந்து கொள்வதே இல்லை என்கிற உண்மையையும் படம் உரக்கப்பேசுகிறது.

அன்பை மறந்து சாதியையும் குலப்பெருமையையும் மட்டும் சுமந்து கொண்டிருக்கும் பெற்றோர்களுக்கு மகள்களாக பிறந்த பாவத்தை தவிர வேறெந்த பாவமும் அறியாத தேவதைகளுக்கும், பிறப்பை தேர்ந்தெடுக்காத பாவத்தைத்தவிர வேறெந்த பாவமும் அறியாத தேவதன்களுக்கும் இந்த நோய்ச்சமூகம் தரும் பரிசு குறித்த உண்மையை படத்தின் இறுதிக்காட்சிகளில் ஒரு பெரும் மெளனத்துடன் ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். அந்த இறுதிக் காட்சியின் போது  நீளும் அந்த நீண்ட மெளனத்தில் பார்வையாளர்களின் (மனிதத்தன்மை கொண்ட) மனசாட்சிகள் இந்து மதம் கட்டியெழுப்பி காப்பாற்றிவரும் சாதிய அமைப்பின் மீது எச்சில் உமிழும் எதிரொலிகளை உணரவேண்டுமா?

சாய்ராத்தைப் பாருங்கள்.

தோழமையுடன்
கர்ணாசக்தி

இக்கட்டுரையை மின்னம்பலத்தில் வாசிக்க https://minnambalam.com/k/1463875253

நாகராஜ் மஞ்சுலேவின் பறவைகள்


மிகச்சிறந்த செய்நேர்த்தியோடு வெளியான ஒரு படைப்பும் அதன் வீச்சும் பார்வையாளனை தொடர்ந்து அப்படைப்பு குறித்து அலசச் செய்வதோடு மென்மேலும் அதன் சிறப்பம்சங்கள் என்னென்னவென ஆராய கைப்பிடித்தும் கூட்டிச் செல்கின்றன. சமீபத்தில் பார்த்த திரைப்படங்களில் நாகராஜ் மஞ்சுலேவின் சாய்ராத் அத்தகைய படைப்புசார் ஆராய்ச்சிகளை தொடர்ந்து கோரிக்கொண்டே இருக்கின்றன.

பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கிய சாய்ராத்தில் நான் குறிப்பிட விரும்பும் ப்ரத்யேக சிறப்பம்சம் என்னவெனில், கால்ஷீட் ஏதும் வாங்காது ஒரு பெரும் பறவைக் கூட்டத்தை படத்தில் நடிக்க வைத்த இயக்குனர் நாகராஜ் மஞ்சுலேவின் நுட்பத்தைதான். இவரின் முந்தைய திரைப்படமான பன்றியின் ஆரம்ப காட்சியே ஜாப்பையா பறவை ஒன்றை தொடர்வதாகத்தான் தொடங்கும். கவனித்திருக்கிறீர்களா? படத்தின் நாயகனான ஜாப்பையா நாயகிக்கு ஒரு பறவையயை பிடித்து பரிசளிக்கும் வேட்கையுடன்தான் அதில் வெளிப்படுவான். அந்த பறவைகளை தொடரும் எண்ணவோட்டம் முழுக்க முழுக்க நாகராஜினுடையது என்பது சாய்ராத்தை அலசும் போது மெதுவாக புரியவருகிறது. அவரது இரண்டாவது திரைப்படமான சாய்ராத்திலும் நாகராஜ் பறவைகளை கதையோட்டத்துடன் பயணிக்கும் முக்கியமான குறியீடுகளாக கையாண்டிருக்கிறார்.

சாய்ராத்தில் மொத்தமாக 5 காட்சிகளின் பின்னனியில் பறவைகள் அவற்றுக்கே உடைய தன்னியல்புகளோடு வருகின்றன. 

காட்சி 1,





நாயகனால் அதுவரை பார்க்க முடியாத நாயகி ஊர் பொதுக்கிணற்றுக்கு வந்திருக்கிறாள். இதை அறிந்த நாயகனின் நண்பன் நாயகனிடம் இதைச்சொல்ல அவனைத் தேடிப்போகிறான். நதியின் நடுவில் படகில் நின்றிருக்கும் நாயகனிடம் நாயகி வந்திருப்பதாக உரக்கக் கூறுகிறான். நாயகனுக்கு எதுவும் காதில் விழவில்லை அர்ச்சி எனும் நாயகியின் பெயரைத்தவிர. அவளின் பெயரைக் கேட்ட நொடியில் எதையும் யோசிக்காது சட்டென நதியில் குதித்து நண்பணை காண பெரும் இசையின் பின்னனியில் நதியில் நீந்தி வருகிறான். அதே நதியில் எதொவொரு குறுகுறுப்புடன் நிறையப்பறவைகள் நதியினைத் தொட்டுத்தொட்டு பறந்து விளையாடுகின்றன. பறவைகளில் அதே மனநிலையில் நாயகனும் நீந்தியபடி வந்துகொண்டிருக்கிறான்.

காட்சி 2,

                                             


அதுவரை காணாத நாயகியை நாயகன் ஒரு நெகிழ்ச்சியூட்டும் ஒரு வழியில் கண்டடைந்து ஒருசில வார்த்தைகளை பேசிவிட்டும், நேருக்கு நேராக அவளின் கண்களை தரிசித்துவிட்டும், கிணற்றிலிருந்து பெரும் பரவசத்துடன் வெளியேறுகிறான். 

"இந்த பிரகாசமான காதல் என்னும் தீபத்தை ஏற்றினேன். என் இரவுகள் பகல் போல் ஒளிர்கின்றன, நட்சத்திரங்களை அழைத்து இரவு முழுவதும் பேசிக் கொண்டிருக்கிறேன், தூங்கினால் கனவுகள் என்னை எழுப்புகின்றன,
(மனதில் ) பறக்கும் பறவைகள் முழு வானத்தையும் அணைத்துக் கொள்ள செய்கின்றன" என நாயகனையொத்த பரவசத்துடன் பாடல் ஒலிக்கிறது. அதே சமயம் நாயகன் நடனமாடியபடி இருக்கும் அந்த சோலைக்கு மேலான மாலை நேரத்து வானத்தில் பறவைகளும் நாயகனைப் போலவே மிகச்சிறந்த நடனத்தை அளித்தபடி பறந்தபடி இருக்கின்றன.

காட்சி 3,




நாயகனும், நாயகியும், ஒருசேர காதலில் விழுந்த பிறகு முதன் முறையாக தனிமையில் சந்தித்துக் கொள்கின்றனர். நாயகிக்கு சொந்தமான தோப்பில் அக்காட்சி நிகழ்கிறது. இருவரும் இணைந்து பேசியபடி சில அடிகள் நடக்கின்றனர். அவர்களுக்கிருவருக்கும் இடையில் ஒரு புதுவித அனுபவத்தின் அலை அடித்தபடி இருக்கிறது. மெதுவாக எட்டுவைத்து சில அடிகள் நடக்கின்றனர். காமிரா காதலர்களுக்கு பின்னால் இருந்தபடி அவர்களுக்கு முன்னே உள்ள வானத்தை காட்டுகிறது. ஆச்சர்யம் என்னவெனில், அங்கு ஒரு சிறு பறவைக்கூட்டம் சின்னதாக அலைகளைப்போல மேலும் கீழுமாக வட்டமடித்து பறந்தபடி இருக்கின்றன. 

காட்சி 4,




கல்லூரி விடுமுறையினால் சந்திக்க முடியாத நாயகனும் நாயகியும் அலைபேசியில் தொடர்பு கொள்கின்றனர். நாயகன் நாயகியிடம் உன்னைப் பார்த்து மூன்று நாளாகிவிட்டது எனக்கூறுகிறான். அவள் ரசித்துக் கொண்டே மூன்று நாட்கள்தான் ஒரு வருடம் அல்ல என்கிறாள். நாயகன் உன்னைக்காணாத ஒவ்வொரு நொடியும் எனக்கு வருடங்கள்தான் என்கிறான். இந்தக்காட்சியின் போது நாயகன் நதிக்கரையில் அமர்ந்திருப்பான். அவனுக்கு பின்னால் உள்ள இளஞ்சிவப்பு வானத்திலுள்ள பறவைகள் இரு குழுக்களாக பிரிந்து பறந்தபடி இருக்கின்றன. 

காட்சி 5,





சாதிவெறி மனிதர்களால் தங்கள் காதலுக்கு பெரும் எதிர்ப்பு நேரிட நாயகனும் நாயகியும் ஊரைவிட்டு வெளியேறி ஒரு பெரும் நகரத்தில் தஞ்சமடைந்து பெரும் போராட்டங்களை எதிர்க்கொண்டு வாழ்க்கையை சுழியத்திலிருந்து ஒரு நல்லநிலைக்கு மாற்றியிருக்கிறார்கள். அவர்கள் பிறந்த கிராமத்தை போலல்லாது நகரம் அவர்களது வாழ்வை சுமூகமாக நகரச் செய்திருக்கிறது. எல்லாம் இயல்பாக போய்க்கொண்டிருக்கும் ஒரு காலை வேளையில் நாயகி தன் குழந்தையுடன் வாசலில் கோலமிட்டுக் கொண்டிருக்கிறாள். பக்கத்து வீட்டுப் பெண் குழந்தையை கடைக்கு அழைத்து செல்வதாக நாயகியிடமிருந்து வாங்கிச் செல்கிறாள். அவர்கள் சென்ற பின் நாயகி மீண்டும் வாசல் கோலத்தில் லயிக்கிறாள். அப்பொழுது நாயகிக்கு பின்னணியில் நகரக் கட்டிடங்களுக்கிடையே காட்டப்படும் வானத்தில் எதோ ஒரு சத்தத்தை கேட்டு பயந்து பறப்பதைப் போல் சில பறவைகள் படபடக்கும் ஓசையுடன் பறக்கின்றன. அடுத்த நொடி நாயகி அர்ச்சியின் சொந்தக்காரார்களாகிய நான்கு ஆதிக்கசாதி மனிதர்கள் அர்ச்சியின் வாசல் கோலத்தின் மீது இருள் (நிழல்) பரப்பியவாறு நிற்கிறார்கள். சற்றுமுன்பு பறந்து சென்ற பறவைகளையொத்த படபடப்புடன் அர்ச்சி அவர்களை எதிர் கொள்கிறாள்.


மேற்கண்ட இந்த ஐந்து காட்சிகளிலும் அசல் பறவைகளும், மனிதப் பறவைகளாக நாயகனும், நாயகியும்,  கிட்டத்தட்ட ஒரே நிலையில்தான் இருக்கின்றார்கள். இங்கேதான் தன் கதையை, கதைமாந்தர்களை, இயற்கையுடன் ஒன்றிணைத்து விருந்து படைத்த இயக்குனனும்,கவிஞனும்,காட்சி ஓவியனுமாகிய, நாகராஜ் மஞ்சுலே எனும் படைப்பாளியை நாம் வியந்து பாராட்ட வேண்டியதாக இருக்கிறது.

-கர்ணாசக்தி