Saturday, September 10, 2016

கம்மட்டிபாடம் - நகரமயமாக்கலும், மண்ணின் மைந்தர்களும்.





செவ்விந்தியர்களின்  நிலங்களை ஆக்கிரமித்து எழுச்சியடைந்த அமெரிக்கா, பழங்குடிகளின் நிலங்களை ஆக்கிரமித்து எழுச்சியடைந்த ஆஸ்திரேலியா, என பல்வேறு நாட்டு வளர்ச்சிகளின் பின்புலங்களானது அம்மண்ணிலிருந்து இரத்தமும் சதையுமாக பிய்த்தெறியப்பட்ட பூர்வகுடிகளின் பெருங்கதைகளால் நிரம்பியது. நாடுகள் மட்டுமல்லாது நாட்டிலுள்ள நகரத்தின் வளர்ச்சிகளுக்கும் அப்படிப்பட்ட கருப்புப் பக்கங்கள் உண்டு. அத்தகைய உண்மைக்கதைகளைக் அடிப்படையாகக் கொண்டு உலகளவில் பல்வேறு திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. அவற்றில் நகரமயமாக்கள் குறித்த திரைப்படங்களும் அடக்கம். குறிப்பிடப்பட்ட இந்த வகையில் பிரேசிலின் 'ரியோ டி ஜெனிரே' நகரத்தின் அசல் மனிதர்களின் கதையைச் சொன்ன 'சிட்டி ஆப் காட்' திரைப்படம் இன்றளவும் உலக சினிமா ரசிகர்களால் உன்னதமான திரைப்படமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்தின் நேர்க்கோட்டில் இந்திய அளவில் நிறுத்தத்தக்க ஒரே திரைப்படம் என சமீபத்தில் மலையாள மொழியில் வெளியான ஒளிப்பதிவாளர்,இயக்குனர். திரு.ராஜீவ் ரவியின் "கம்மட்டிபாடம்" திரைப்படத்தை முன் வைக்கலாம். 

இவ்விரண்டு திரைப்படங்களின் கதையும் நகரமயமாக்கலின் பின்புலத்தில் நிகழ்கின்ற கதைகள். சிட்டி ஆப் காட் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டது, கம்மட்டிபாடம் உண்மையாக நிகழ்ந்திருக்கக்கூடிய சாத்தியம் கொண்ட புனைவுக்கதை. இரண்டு திரைப்படங்களிலும் குறிப்பிட்ட சில கதாபாத்திரங்களின் வாழ்வில் பல்வேறு காலகட்டங்களில் நிகழக்கூடிய சம்பவங்களின் தொகுப்பே திரைக்கதையாக அமைந்திருக்கிறது. மேலும் இரண்டிலும் வன்முறை கலாசாரம் மைய இழையாகவும் இருக்கிறது. 

இனி கம்மட்டிபாடத்தை பற்றி மட்டும், 

வானாளவ கட்டிடங்கள் உயர்ந்து நிற்கும் எல்லா நகரங்களின் சாயலையும் கொண்ட தற்போதைய எர்ணாகுளம் எனப்படும் கொச்சின் நகரத்தை எழுப்பிவிட்டு அடியாழத்தில் அமிழ்ந்து போன ஒரு ஊரையும் அதன் மக்களையும் பற்றிய படம்தான் கம்மட்டிபாடம். கம்மட்டிபாடம் எனும் ஊரின் அசல் மனிதர்களான தலித் மக்களில் சிலரின் எழுச்சிகொண்ட வாழ்வியலும், ஏமாற்றம் பெற்ற சூழலியலும், எதிர்கொண்ட நம்பிக்கைத் துரோகங்களும், என உன்மைக்கு நெருக்கமான ஒரு  பெருங்கதையாடலை கிருஷ்ணா எனும் கதாபாத்திரத்தின் நினைவுகளின் வழியே கம்மட்டிபாடம் திரையில் விவரிக்கிறது. 

கிருஷ்ணாவிற்கு 'கம்மாட்டிபாடம்' என்கிற அந்த ஊர் முழுக்க முழுக்க பாலன்,கங்கா, கங்காவின் முறைப்பெண் அனிதா, கங்காவின் தாத்தா, எனும் தலித்தினத்தைச் சார்ந்த அந்த மண்ணின் அசல் மனிதர்களின் நினைவுகளாலானது. குடும்பம் சகிதமாக அந்த ஊருக்கு குடிபெயர்ந்த கிருஷ்ணாவிற்கு தன் பால்ய வயதையொத்த கங்காவும்,அனிதாவும், நண்பர்களாகின்றனர். கங்காவின் மூத்த சகோதரனான இளவயது பாலன் அவனது தாத்தாவிற்காக அவ்வூரின் ஆதிக்கசாதி மனிதர்களை எதிர்க்கும் செயல் ஒன்றை செய்கிறான். அவனது அந்த எதிர்ப்புக்குரல் அவ்வூரின் சுரேந்திரன் எனும் வியாபரியின் மூலம் மெல்ல மெல்ல மெருகேற்றப்படுகிறது. அந்த மெருகேற்றல் அவனை கம்மாட்டிபாடத்தின் ரெளடியாக கட்டமைக்கிறது. பாலன் இளவயதை அடைந்ததும் வியாபாரி சுரேந்திரனின் சமூகவிரோத தொழிலுக்கு காரியதாரியாக உருமாற்றப்படுகிறான். கங்கா,கிருஷ்ணா உள்ளிட்ட கம்மாட்டிபாடத்தின் பதின்பருவத்து இளைஞர்களைக் கூட்டு சேர்த்துக் கொண்டு பாலன் சுரேந்திரனின் சாராய வியாபாரத்திற்கும், அவனின் வன்முறை சார்ந்த பிரச்சினைகளுக்கும் தலைமைத்  தொழிலாளியாகின்றான். இதனிடையே கிருஷ்ணாவிற்கும் அனிதாவிற்கும் இடையில் காதல் உருவாகின்றன. இப்படியாக நகரும் நாட்களின் இடையில் கிருஷ்ணா கங்காவிற்காக முன்னெடுத்த வன்முறைச் செயலொன்றுக்காக ஜெயிலில் அடைக்கப்படுகிறான். இளவயதைத் தொட்ட பிறகு ஜெயிலில் இருந்து வெளிவரும் கிருஷ்ணா திரும்பவும் பாலனின் குழுமத்தில் இணைகிறான். இம்முறை பாலனின் முதலளாளியான சுரேந்தரனின் தொழிலும் பாலனிம் வீச்சும் அந்த ஊரில் இன்னும் விஸ்தீரணமானதாக மாறியிருக்கிறது.

சுரேந்தரன் சாராயம் விற்ற பணத்தில் மென்மேலும் தனது வியாபாரத்தை பெருக்கும் பொருட்டு ஒரு கட்டிட வியாபார நிமித்தம் பாலனின் உறவுக்காரர்களான வேறொரு ஏரியாவைச் சேர்ந்த தலித்தின மக்களின் நிலங்களை கையபகப்படுத்த நினைக்கிறான். பாலனும் ஆசானின் (முதலாளியின்) ஆசையின் பொருட்டு அதற்கு துணை போகிறான். பாலனின் தாத்தா அதை தட்டிக்கேட்டுவிட்டு ஒரு அசாதரண சந்தர்ப்பத்தில் உயிரைத் துறக்கிறார். அதற்கு பிறகு பாலன், மெதுமெதுவாக தன்னுடைய, தன் இன மக்களின் நிதர்சனத்தை உணர்கிறான். சுரேந்தரனிடம் தான் மாற விரும்புவதாகவும். அந்த உறவுக்காரர்களின் நிலங்களை விட்டுவிடச்சொல்லியும் கேட்டுக்கொண்டு அம்முதலாளியிடமிருந்து வெளியேற நினைக்கிறான். இப்படியான ஒரு வேளையில் முதலாளிகளால் திட்டமிடப்பட்ட ஒரு விபத்து பாலனின் உயிரைப் பறித்துவிடுகிறது. இப்பொழுது பாலனின் இடத்தில் அவனின் தம்பி கங்கா இடம்பெயர்கிறான். கங்கா பாலனைப் போலல்லாது இன்னும் அதிக மூர்க்கமான குணத்தையுடையவன். தனது நண்பன் கிருஷ்ணா அனிதாவிற்கு இடையிலான காதலை அவன் அறிந்திருந்தாலும். அனிதாவை அவன் கையகப்படுத்தவே நினைக்கிறான். வேறோரு சந்தர்ப்பத்தில் அந்த விருப்பத்தை நிறைவேற்றியும் கொள்கிறான். கிருஷ்ணா மும்பைக்கு இடம் பெயர்கிறான். காலங்கள் உருண்டோட கிருஷ்ணா நடுத்தர வயதில் இருக்கும் பொழுது கங்காவிடமிருந்து அவனுக்கு ஒரு அலைபேசி அழைப்பு வருகிறது. அதில் அனிதாவிற்கும் உனக்குமான கனவை நான் சிதைத்து விட்டேன் நீ வந்து அவளை அழைத்துச் செல் எனவும் தன்னை சாவு துரத்துகிறது என்றும் அரற்றுகிறான். பிறிதொரு சமயத்தில் வேறோர் அலைபேசி அழைப்பின் போது சில அசாதரண சத்தங்களினூடே அவனின் குரல் துண்டிக்கப்படுகிறது. அதன்பின் கிருஷ்ணா கங்காவைத் தேடி மறுபடியும் கொச்சின் வருகிறான். அந்த அலைபேசி அழைப்பிற்கு பிறகு கங்கா மாயமாகியிருக்கிறான். அவனுக்கு என்னவானது என்கிற  கிருஷ்ணாவின் தேடலினூடே பாலன்,பாலனின் அப்பா, பாலனின் தாத்தா, கங்கா, அனிதா, கிருஷ்ணா உள்ளிட்ட அம்மண்ணின் அசல் மனிதர்களின்  வாழ்வியலும், கம்மட்டிபாட முதலாளிகளால் நிகழ்த்தப்பட்ட சூழ்ச்சிகளும், துரோகங்களும், நான்லீனியர் திரைக்கதையாக திரையில் அரங்கேறுகிறது. 

கம்மட்டிபாடத்தை பொறுத்த வரையிலும் பாலன்,கங்கா ஆகிய இருபாத்திரங்கள்தான் படத்தின் பிரதானப் பாத்திரங்கள். இந்த பாத்திரங்களில் நடித்திருக்கும் மணிகண்டன் ஆச்சாரி மற்றும் விநாயகன் எனும் நடிகர்களின் நடிப்பும், உடல்மொழியும், அத்தனை இயல்பானதாக படத்தில் வெளிப்பட்டிருக்கிறது. இதில் விநாயகம் என்பவர் தமிழ்சினிமாவிலும் சில படங்களில் நடித்தவராவார். மலையாள சினிமாவின் முன்னனி நாயகனாக இருந்தபொழுதும் இதுபோன்றதொரு மூன்றாம் இட முக்கியத்துவமுடைய பாத்திரத்தில் நடித்த துல்கர் சல்மானின் துணிவு அவருக்கிருக்கும் மாற்று சினிமா மீதான விருப்பத்தையே காட்டுகிறது. மலையாள சினிமாக்களில் புதிய அலை இயக்குனர்களில் ஒருவரான ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான ராஜீவ்ரவி அவர்களின் மூன்றாவது திரைப்படம் இது. கொச்சி எனும் நகரத்தின் மீது இவருக்கிருக்கும் பெருங்காதலை இவரது முதல் திரைப்படமான அன்னயும் ரசூலும் திரைப்படத்தின் ஒவ்வொரு ப்ரேமிலும் நாம் பார்க்கலாம். அந்த நகரத்தின் மீதான அதே பெருங்காதலுடன் அவர் கம்மட்டிபாடத்தையும் மிக நேர்த்தியாக படைத்திருக்கிறார். 

"நீ ஆகாசத்தில் தாமசிக்குன்னுவென்னு ஞான் அறிஞில்லா ஆசானே" எனத் தங்கள் நிலங்களை சூறையாடி வானுயர கட்டிடங்களில் வசிக்கும் முதலாளிகளை இரைஞ்சி கெஞ்சிக் கொண்டிருக்கும் பூர்விக மனிதர்களின் வாழ்வியலை இரத்தமும் சதையுமாக உயிர்பித்த கதையாக,  விளிம்புநிலை மனிதர்களைச் சுரண்டி  முதலாளிகளால் கட்டமைக்கப்பட்ட கான்க்ரீட் காடுகளே நகரம் என்கிற உண்மை கதையாக வெளிப்பட்டிருக்கும் கம்மட்டிபாடம், எல்லா நகரங்களுக்கும் பின்னிருக்கும் எளிய மனிதர்களின் கருப்பு சரித்திரங்களை காலம் முழுதும் நினைவுறுத்தக்கூடிய ஓர் ஆகச்சிறந்த படைப்பாகவும், உலகதரத்தில் வெளிப்பட்ட இந்தியசினிமாவின் பெருமைமிகு படைப்புகளில் ஒன்றாகவும், வரும் காலம் முழுவதும் இருக்கப்போகிறது என்பது இப்படத்தின் தனித்தச் சிறப்புகளில் ஒன்று. 


- கர்ணாசக்தி. 

No comments:

Post a Comment