Thursday, January 29, 2015

I Live in Fear (1955) - அதிகாரங்கள் மீதான பயம்.


அதிகாரங்களுக்கிடையேயான வல்லரசு போட்டியில் தன் மேட்டிமைத்தனத்தை,வலிமையை, நிலைநிறுத்த கண்டுபிடிக்கப்பட்ட அனு ஆயுதம் என்பது பல லட்சம் எளிய மக்களை உயிருடன் எரித்து,அரித்து தின்றதும் இல்லாமல், மிஞ்சியிருக்கும் ஏனைய மனிதர்களை, அவர்தம் இருப்பிடம் குறித்த நம்பிக்கையை, எதிர்காலத்தை, இயல்பை, எப்படி சூறையாடுகிறது என்பதை துளி வன்முறையும் இன்றி மிக மென்மையான காட்சிகளில், அடுக்கி வலிமிக உணரச்செய்யும் கவிதையே இத்திரைப்படம்.

"எல்லோரும் ஒரு நாள் சாகப்போகிறவர்களே, நீங்கள் ஏன் அதற்காக எப்போதும் பயந்து  கொண்டே இருக்கிறீர்கள்?.

"நான் சாகத்தயாராகத்தான்  இருக்கிறேன், ஆனால் கொல்லப்படுவதற்குதான் தயாராக இல்லை"   - நகஷிமா

அனுகுண்டு தாக்குதல் நடந்து பத்தாண்டுகள் கழித்து, ஜப்பானின் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும்  டோக்கியோவில் துவங்குகிறது கதை. டோக்கியோவின் செல்வந்தரான நகஷிமாவுக்கு அனுகுண்டு மீதான மனநடுக்கம் நாளுக்கு நாள் வளர்ந்து விருட்சமாகி நிற்கிறது, அந்த பயம் அவர் வசிக்கும் நகரம் பாதுகாப்பானது இல்லை என்று மனதில் ஊடுருவி அவரை முழுமையாக தின்கிறது, அனுகுண்டு தாக்குதல்கள் இல்லாத பாதுகாப்பான இடம் தேடியலையும் அவர் தன் சொத்துகளை விற்றுவிட்டு  வேறு ஒரு பாதுகாப்பான இடத்திற்கு செல்லும் முனைவுடனே எப்போதும் இருக்கிறார், இது கோட்டித்தனம் என கருதும் அவர் குடும்பம் அவருக்கு எதிரான நிலைப்பாட்டைக்கொண்டு நீதிமன்றத்தை அணுகி அவர்மீது வழக்கு தொடுக்கிறது, அதை தொடர்ந்து நகஷிமாவின் வாழ்வில் கட்டமைக்கப்படும் தொடர் சம்பவங்களை தொகுத்து இப்படைப்பின் மூலம், எப்பாடு பட்டாலும் பதில் சொல்ல முடியாத கேள்விகளை அதிகாரங்களை நோக்கி வைக்கிறார் உன்னத ஆளுமை குரோசாவா. நகஷிமாவின் ஒப்பற்ற நடிப்பின் வழி அதிகாரமல்லாத எளியவர்க்குள்ளும் ஒரு நீண்ட சலனத்தை, மெளனத்தை நீளச்செய்கிறார்.

அகிராவின் எல்லா படங்களிலும் சூரியனை காட்டியபடி ஒரு குறியீட்டு காட்சி வரும், இதிலும் வருகிறது அத்தகைய  ஒரு காட்சி, என்னவொரு உன்னத படமாக்கம், மேதைகள் எப்போதும் மேதைகளே.

உண்மையில் அந்த காலகட்டத்தில் ஜப்பானில் நகஷிமா வயதையொத்த எல்லா மனிதர்களும் அந்தபயத்தினால் அடி ஆழத்தில் பீடிக்கப்பட்டுதான் இருந்திருக்கிறார்கள், ஏன் இன்றுமே இருக்கிறார்கள், வல்லரசுகளின் ஆதிக்கப்போட்டியில் எப்போதும் பலியாவது எளிய மனிதர்களே, அவர்கள் எல்லோருக்குள்ளும் நகஷிமாவின் அந்த தேடல் உண்டு, இந்த பூவுலகில் எளியவர்களுக்கான பாதுகாப்பான இடம் என்பது எங்கு உள்ளது என்ற கேள்விதான் அந்த தேடல்.


- கர்ணாசக்தி

நன்றி - என் ஞாயிறுகளை அர்த்தமுள்ளதாக மாற்றும் கோணங்கள் அமைப்பிற்கு.

Monday, January 12, 2015

A SIMPLE LIFE (2011) - எளியவர்களின் அன்பு




கோணங்கள் அமைப்பு தனது உலகசினிமா திரையிடல்களினால், மாதந்தோறும் இரண்டு ஞாயிற்றுக்கிழமை மாலைகளை கவித்துவமானதாக்கி விடுகிறது. கடந்த ஞாயிறின் மாலையும் ஹாங்காங் தேசத்தின் A SIMPLE LIFE எனும் மிக எளிமையான கவிதையால் கவித்துவமாகவே கடந்தது.

புகழ்பெற்ற ஹாங்காங் தயாரிப்பாளரான ரோஜர் என்பவர் வீட்டில் தனது 13 வயதுமுதல் 73 வயதுவரை வேலைக்காரராக வாழ்ந்த (Tao jie) எனும் பெண்மணியின் உண்மைக்கதையை அடைப்படையாக கொண்ட திரைப்படம் இது. 

(Tao jii ) அன்பின் ஊற்றானவள், தேடித்தேடி தரமான பொருட்கள் வாங்கி மிக நேர்த்தியாக சமையல் செய்யும் திறமையை கொண்டவள், தன் 13வயதில் அந்த குடும்பத்தில் வேலைக்கு சேர்ந்து இறுதிவரை தனக்கென ஒரு வாழ்க்கையை தேடிக்கொள்ளாமல், அக்குடும்பத்தில் பிறந்த குழந்தைகள் அனைவரையும் மிகுந்த பாசமூட்டி வளர்த்தவள், அம்மாக்கள் கடைக்குட்டிக்கு அதிக செல்லம் தருவதைப்போல ரோஜருக்கும் அதிக செல்லம் தந்து வளர்த்தவள், அக்குடும்பத்தில் அனைவரும் ஹாங்காங்கிலிருந்து அமெரிக்காவிற்கு சென்று செட்டிலாகிவிட, அக்குடும்பத்தில் இப்போது தனித்திருக்கும் ரோஜருக்கு பணிவிடை செய்து வருபவள், மிக எளிமையானவளான அவள் தன் வயது மூப்பின் காரணமாக ஒருநாள் திடீரென ஸ்ட்ரோக் நோயினால் பாதிக்கப்படுகிறாள், தன்னால் வேலை செய்ய முடியாது என்று தெரிந்ததும் தன்னை வேலையிலிருந்து விடுவித்துக்கொண்டு ரோஜருக்கு உதவியாக வேறு ஒரு பணிப்பெண்னை சேர்த்துக்கொள்ளச் சொல்கிறாள்.

அவளை அவளின் உடல்நிலையின் பொருட்டு, ரோஜர் தன் நண்பனின் நர்சிங்ஹோம் ஒன்றில் சேர்த்து, தன் வாழ்நாள் முழுவதையும் தன் குடும்பத்திற்காக அர்பணித்த ஜீவனின் இறுதிகாலத்தை தன்னால் முடிந்தமட்டும் மகிழ்ச்சியாக இருக்கவைக்க முற்படுகிறான். இந்த காலகட்டத்தில், அவர்களிடையே பரிமாறப்படும் உயிரோட்டமுள்ள அன்பு உன்னத காட்சிப்படிமங்களாகி இத்திரைப்படத்தை காவியத்துவமாக்கி விடுகிறது. 

மிக பொறுமையாக,எளிய காட்சிகளாக, அதிக பின்னனி இசை இல்லாத விதம் படமாக்கியதில், ஒரு சினிமாவைக் காண்கிறோம் என்ற பிரக்ஞையற்று அவர்களின் மிக இயல்பான வாழ்வை நேரடியாக காணும் பார்வையாளனாக நம்மை இருத்தி, கதைமாந்தர்களோடு சேர்த்து நம்மையும் taojii"யை விரும்பச்செய்து, அவளின் பிரிவின்பால் வருத்தம் கொள்ளவும் செய்கிறது.

கத்தியின்றி, ரத்தமின்றி சத்தமின்றி,பகட்டின்றி, ஒரு மயிலிறகின் வருடலாக மிக எளிமையானதொரு வாழ்க்கையை, அன்பை, இயல்பை, அதன் ஸ்பரிசத்தை 117நிமிடங்களுக்கு உணரச்செய்யும் அழகிய காவியம் இத்திரைப்படம்.