Thursday, August 14, 2014

பாரததேசமென்று தோள் கொட்டுவோம்


தண்ணீர்க்குழாய்,வீதி,வீடு,சுடுகாடு,
கண்ணீர்,காதல் என எதுவும் இங்கு
சமமில்லை..
சமன்படுத்த விழைவது
இளவரசனெனில் கழுத்தை முறித்து
தண்டவாளங்களில் வீசியெறியும்..
இளவரசியெனில் கற்பை முறித்து
ஊர்க்கோடி மரக்கிளையில்
தூக்கிலிட்டு தொங்கவிடும்..
தீண்டுமை ஒரு பாவச்செயல்
தீண்டுமை ஒரு பெருங்குற்றம்
தீண்டுமை ஒரு மனிததன்மையற்றசெயல்
என எப்போதும் போல
ஆதிக்கங்களின் வழியே வாழிய
எங்கள் தேசம் வாழியவே...
ஈச்வர அல்லா தேரே நாம்
சப்கோ ஷன்மதி தே பகவான் கீதம்
இசைக்கவே..
பட்டொளி வீசி மூ”வர்ண”க்கொடி
பறக்கவே...
ஜனித்து ஜீவித்த இடத்திலேயே
நீங்கள் அகதிகளாக்கிய பெடியன்களுக்கு
ஆரஞ்சுமிட்டாய்களை மட்டும்
வழக்கம்போல தருகவே...
வர்ணம் மாத்திரம் வந்தே மாதரம் !!

Wednesday, August 6, 2014

போதிமரப்பூங்காவில் ஒரு நாள்

ஞானம்,முக்தி அடைய தியானங்களை மேற்கொள்ளுங்கள் மெடிடேசன் என்பது ஐம்புலன்களையும் அடக்கி உங்களை நீங்கள் அறிந்து கொள்ள உதவும் ஒரு ஆன்மீக முயற்சி என வீடியோக்களில் வந்த,வரப்போகும் சாமியார்கள் முதல் துளிவியர்வைக்கு ஒருபவுன் தங்ககாசு வாங்கிய சூப்பர்ஸ்டார் & லிட்டில் சூப்பர்ஸ்டார் வரை சொல்வதுண்டு.. அதை இமயமலை முதல் இடும்பன்மலை வரை அவர்கள் தேடி அலைவதும் உண்டு... கோடிகளில் புரளும் அவர்களை போன்றவர்கள் எப்போதும் போயிராத போகத்தேவையிருக்காத எல்லா கடவுள்களுக்குமான பிரார்த்தனைகளும் போதிமரங்களும் சூழ்ந்த ஆஸ்ரமங்கள் எல்லா நகரங்களிலும் அரசு மருத்துவமனை என்கிற பெயரில் இருக்கிறது 

"என்ன சீக்கு வந்ததுன்னே  
தெரியலையே உசுரோடத்தான ரெண்டுபேரும் வந்தோம் சாயங்காலம் பொணமாகிட்டன்னு சொல்றாங்களே ராசா"  இப்படியாக பல கதறல்கள் மாரடித்தழும் ஒலியுடன் சேர்த்து வாயிற்கதவுகளில் வரவேற்கும்போதே உங்கள் காதுகள் மரத்துப்போகும்

கடந்து உள் சென்றால் உள்ளொடுங்கிய வயிறுகளோடு கரைந்த கன்னங்களோடு எலும்புகளை போர்த்திய தோல்களோடு தலைகளில் கண்களில் கால்களில் கைகளில் காயத்திற்கு கட்டுகளோடும் இன்னும் சில புண்களில் வழிந்தோடும் சீ கலந்த குருதிகளோடு எந்த கட்டுகளும் இல்லாதும் ஆயிரமாயிரம் மனிதர்கள் நோய்களுடனான போரட்டத்திற்கு நிவாரணம் தேடிய வெறுமைகளுடன் காத்திருக்கும் பிம்பங்கள் கண்களில் நிரம்பும் போது உங்கள் பார்வைகள் மரத்துப்போகும் 

எப்போதும் நுகரப்பிடிக்காத ஒருவித நோய்களின்,காயங்களின்,மருந்தின், மரணத்தின் வாசனைகள் நாசிகளுக்குள் நுழைந்து நுரையீரல்களுக்குள்ளாக நிரம்பி சுவாசிக்க திராணியற்று மூச்சு திணற ஆரம்பிக்கும் போது உங்கள் நுகர்வுறுப்புகள் மரத்துப்போகும் 

விபத்து பிரிவு, அவரசசிகிச்சை பிரிவு, புற்றுநோய் பிரிவு, காசநோய் பிரிவு,எய்ட்ஸ் பிரிவு,தோல்நோய் பிரிவு, எலும்புமுறிவு பிரிவு, மகப்பேறு பிரிவு, எனப்பல பிரிவுகள் கொண்ட கட்டிடங்களுக்குள் பிரிவுகளாக பீடித்திருக்கும் நோய்களுடன் எந்த ஓப்பனைகளும் இல்லாது நோய்களின் கோரங்களை பேசும் ஓவ்வொரு உயிர்களின் பரிச்சயங்கள் உங்கள் அருகாமையில் நிரம்பியிருக்கும் போது உடலின் மொத்த உறுப்புகளும் மரத்துப்போகும்

அத்தனை மரத்துப்போதல்களையும் கடந்தால் ஆங்காங்கே எப்போதும் இறுக்கமாகவே காணப்படும் வெள்ளை உடை தேவதைகளும் தேவதன்களும் காக்கி உடை நீல உடை பணியாளர்களும் நம்மை சற்றே ஆசுவாசப்படுத்தி மூச்சுவாங்க நேரம் ஓதுக்கித்தருவார்கள் இருந்தும்.. 

இறுதியாக வந்தே விடும் எப்பேர்ப்பட்ட கொம்பன்களையும் கொம்பிகளையும் அசைத்துப்பார்க்கும் பிணவறை... சராசரியாக ஒரு நாளில் குறைந்தது பத்து அமரர் ஊர்திகள் எப்போதும் இதன் வாசலில் காத்திருக்கும் குட்டி குட்டி குழந்தைளை, ரயில்சக்கரங்கள் பெயர்த்த உடல்களை,சுருக்கில் முறிந்த கழுத்துகளை, விபத்தில் சிதைந்த தலைகளை, நெருப்பில் பொசுங்கிய உடல்களை, என விதவிதமாக வைக்கோல் திணித்த மூட்டைகளாக வெளியே அனுப்பும் வாசலை கொண்ட அறை இது.... வாசலைதாண்டி உள்ளே செல்ல வேண்டிய அவசியமே இருப்பதில்லை பெரும்பாலும் வாசலிலே இதுவரை மரத்துப்போன ஐம்புலன்களோடு மொத்தமாக பிடித்து வைத்திருக்கும் உயிர்நாடியும் மரத்துப்போயிருக்கும் 

உங்கள் துரோகங்களை, வன்மங்களை, குரோதகங்களை, மமதைகளை, பேராசைகளை, நிராசைகளை, தேவைகளை, சுயநலங்களை, சட்டையை பிடித்து மெளனமாக ஆயிரம் கேள்விகள் கேட்கும் போதிமரங்கள் சூழ்ந்த ஆஸ்ரமங்கள்தான் இந்த அரசு மருத்துவமனைகள்

முழுவதுமாக ஒரே ஒருநாளை இங்கு கடத்திப்பாருங்கள் ஞானமடைந்து முக்தி பெற்ற சித்தனோ புத்தனோ ஆகிவிடுவீர்கள் என எந்த உத்திரவாதமும் இங்கே இல்லை ஆனால் நிச்சயம் இந்த பிறப்பை, சகஉயிர்களின் மீதான நேசிப்பை விரும்பும் மனிதர்களாயிருப்பீர்கள் அல்லது எந்த கேசத்திற்கும் கவலை கொள்ளாத ஞானியாக கூட மாறியிருப்பீர்கள் !! 

மீட்சி

பிணைந்த இதழ்களில் 
உமிழ்நீரை பரிமாறத்தொடங்கிய 
போது துவங்கியது அந்த 
கண்ணாமூச்சியாட்டம்  
அடித்தோலின் சுரப்பிகள் 
வழிய அங்கிங்கு போக்கிட்டு 
அலைகழித்து நீண்டது ஆட்டம் 
ரெட்டைநாக்குகள் மார்பெல்லாம் 
ஊர்ந்து கரும் திராட்சைகளை 
துழாவி ருசித்திருந்த போது 
அடிவானத்துக்கு அப்பால் 
தொலைந்தே போயிருந்தது
பின் மயிர்காடுகளினூடாக 
மறுமுனை நோக்கி  
யோனியின் கடலை கடந்த 
பெரும் யுகங்களுக்குப்பின்
காமத்தின் மெல்லிய 
வெண்ணிறத்துகள்களால்  
மீட்டெடுக்கப்பட்டது 
நான் எனும் பிரக்ஞை !!