Friday, July 18, 2014

முன் ஜென்ம காதல்

1980 - மதுரை 

வேலை வாய்ப்புகள் அவ்வளாக இல்லாத நகரம் வாடகை பணத்தை கொண்டும் அண்ணனின் உதவியோடும் ஒரே மகன் ஜெயக்குமாரோடு வாழ்ந்து வந்தாள் செல்லம்மாள், ஜெயக்குமார் முரடன் இவனுக்கு தருமன் என நண்பன் ஒருவன் உண்டு இவர்கள்தான் இந்த ஊரின் மொத்த சண்டியர்தனங்களுக்குன் குத்தகைதார்கள், அந்த ஊரின் ஊராட்சி தலைவர் மகள் சுவாதி தொத்துப்பல் பேரழகி ஜெயக்குமாருக்கும் சுவாதிக்கும் எல்லோரையும் போலவே வேதியல் தூண்டப்பட்டு கண்கள் இரண்டில் கட்டி இழுத்து வண்ணச்சிரிப்பில் இரவும் அல்லாது பகலும் அல்லாது பொழுதுகள் எப்போதும் வளர்ந்தது காதல்... சுவாதியின் சித்தப்பா கணகு விரித்த சூழ்ச்சியில் வைக்கப்பட்ட பொறி எனத்தெரியாமல் அவரின் அரசியல் ஆதாயத்திற்காக கொலை செய்யகிறார்கள் ஜெயக்குமாரும் தருமனும்.... பின்னர் அவன் வைத்த பொறியை உணர்ந்து கணகை கொலை செய்ய முயல்கயில் ஜெயக்குமார் கொல்லபடுகிறான் தருமன் அவனது சித்தப்பாவை கொலை செய்து பின்னர் சுவாதியின் அப்பாவால் கொலையாகிறான் காதலனை இழந்து விட்ட விரக்தியில் சுவாதியும் தற்கொலை செய்து இறந்து விடுகிறாள்.

2013 - சென்னை

ஜெயக்குமார் தனது அடுத்த ஜென்மத்தை சென்னையில் தொடங்கிருந்தான் நண்பன் தருமனோடு இங்கே இப்போது சரக்கடித்து சைட்டடித்து சண்டைகளுக்கு பயந்த சராசரி இளைஞர்களாக வாழ்ந்து வந்தனர்
முன் ஜென்ம நினைவில்லாமலே சுவாதியை சந்தித்து காதலும் கொள்கிறான் அவளும் அவ்வாறே செய்கிறாள் இந்த முறையும் அவர்கள் காதலுக்கு வில்லனாக அவளின் அண்ணனே இருக்கிறான் ஆனால் அவன் விரித்த வலையில் தெரியாமல் தான் சிக்குகிறான் ஜெயக்குமார் இந்தமுறை பொறியில் மாட்டிய வலியில் ஆத்திரப்படாமல் நிதானமாக அத்தனை சூழ்ச்சி முடிச்சை அவிழ்த்து சரியாக வெளியேறுகிறான் அவனது நண்பனுடன் கடைசியாக ஜெயக்குமார் சுவாதி அவர்களின் முன் ஜென்ம காதலையும் அறியாமலே வாழ்கையில் இணைகிறார்கள்
அம்புட்டுதான் கதை முடிஞ்சது 

நீதி -

இது எதோ ஒரு உண்மைகதைன்னு நீங்க நெனச்சா இன்னும் எத்தன ஜென்மம் எடுத்தாலும் தமிழ்சினிமாவ காப்பாத்த முடியாது ://

மொத கதைய சுப்பரமணியபுரத்திலும்
ரெண்டாவது கதைய வடகறி  
படத்திலையும் பொருத்தி உஸ்ஸ்ஸ்னு பெரு மூச்சு விட்டா நீயும் நல்ல சினிமா ரசிகனே - ஈஈஈ _/\_


வருத்தங்களுக்குஅப்பால்


ஆடித்தள்ளுபடிகளில் கூட 
உடை வாங்கித்தராதவனென்று 
அட்சயதிருதியைகளில் கூட
நகை வாங்கித்தராதவனென்று 
பண்டிகைநாட்களில் கூட 
பொருள் வாங்கித்தராதவனென்று 
சம்பளதினங்களில் கூட 
இனிப்பு வாங்கித்தராதவனென்று 
மூகூர்த்ததினங்களில் கூட
பூக்கள் வாங்கித்தரதாவனென்று
அவளுக்கிருக்கும் ஏகவருத்தங்களுக்கு
அப்பால் சிறு தலைவலிக்கு 
பதறியடித்து தைலமொன்றை
தடவிவிடும் பேரன்பும் இருக்கிறது !!


Tuesday, July 15, 2014

இயற்கை


ஒரு நீண்ட நெம்புகோல் இருந்தால் இந்த பூமிப்பந்தை நெம்பித்தள்ளியிருப்பேன் என யாரோ ஒரு அறிஞர் சொன்னதாய் என் தந்தை சொல்ல கேட்டதுண்டு உண்மையில் அந்த நெம்புகோல் பேராசை,சுயநலம்,அலட்சியம்,வன்மம்,துரோகம் என வெவ்வேறு பெயர்களில் மனிதர்களிடம் இருந்திருக்கிறது.. மனிதர்களின் ஓட்டு மொத்த நெம்புதல்களை பொறுத்து வந்த இயற்கை ஒரு கட்டத்தில் இவர்களுக்கு இசைந்தது என்றே நடந்து முடிந்த ஜனவரி 29,2100 பிரளயத்தை சொல்லாம்

என் குழுவிடம் அளிக்கப்பட்ட இந்த இரண்டு மாத தேடல்களின் முடிவு நமக்கு அத்தனை சாதகமில்லை என்பதை முன்பே தெரிவித்துக்கொள்கிறேன் பெருஞ்சோகமான இந்த கையறு நிலைக்கு முதல் அடிப்படை காரணமும் இனி செய்ய கூடாதவைகளுக்கான முதல் அடிப்படைகள் எனவும் நீங்கள் இந்த அறிக்கையின் முதல் பத்தியை எடுத்துக்கொள்ளலாம்.. ஆகவே நம்மையறியாமலே நாம் வைத்திருக்கும் அத்தனை நெம்புகோல்களையும் இனி தூக்கிப்போட்டுவிட்டு இயற்கை நமக்களித்த இந்த புது கிரகத்தை நாம் இழந்து விட்ட பூமியை விட சிறப்பானதாக இருக்கும்படி உருவாக்குவோம் என கூறிவிட்டு என் திட்ட விவரணைகளை இணைக்கிறேன்

என் தலைமையில் நான்கு குழுவாக பிரித்து அனுப்பப்பட்ட விண்கலன்களின் இறுதி அறிக்கையின் விவரணைகள் கீழ் வருமாறு இணைத்துள்ளேன்

(Nova-345) விவரணை -1

           நோவா345 திரு.மைக்கெல் & திரு. டகுஷிமா அவர்களின் தலைமையில் பூமியின் முந்தைய நகரமான ஜப்பானிலிருந்து  ஆஸ்திரேலிய கண்டம் முழுதும் பிப்பரவரி 05.2100ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு தன் சேவையை தொடங்கியது.... இந்த நோவா345 விண்கலத்தின் ஓயாப்பெரு இன்ஃப்ரா ரெட் தேடல் வேட்டைகளின் முடிவில் தரப்படும் இறுதிஅறிக்கையாவது -
ஜனவரி 29ல் இந்த பகுதிகளில் நிகழ்ந்திருந்த உலகின் மிகப்பெரிய சுனாமிக்கு பிறகு கடல் ஒரு நிலப்பகுதியையும் விட்டுவைக்கவில்லை மொத்த கடலும் கண்டம் இடம் பெயர்தை போல மொத்தமாக இடம்பெயர்ந்து விட்டது மேலும் கடல் உறைந்த நிலையில் இருப்பதால் இங்கு எந்த உயிரினமும் இருப்பதற்கான சாத்தியம் தென்படவில்லை இந்த இரண்டு மாத தேடல்களின் முடிவில் நோவா345 இங்கு எந்த உயிரினமும் இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவிக்கிறது
- நோவா345,மார்ச் 31.2100

(Taitan555) விவரணை-2 :

திரு.டேம் வில்லியஸ் & திரு.பேடரிக் தலைமையில் டைட்டன்555 விண்கலம் வட அமெரிக்கா தென் அமெரிக்கா கண்டம் முழுதும் தனது சேவையை பிப்பரவரி 05.2100ஆம் தேதி அதிகாலை 5 மணி அளவில் தன் சேவையை தொடங்கியது ஜனவரி29.2100 சம்பவம் அருகிலிருந்த அண்டார்டிகா கண்டம் முழுமையும் கரைத்து கடலில் கலந்தது அந்த பெரும்கடல் அமெரிக்க கண்டம் முழுமையும் சூழ்ந்தது மட்டுமன்றி 12 எரிமலைகளின் தொடர்ச்சியான வெடிப்பில் கடல் நீரும் லாவா குழம்பும் சேர்ந்து இங்கு எந்த நிலப்பகுதியையும் உயிரனங்களையும் விட்டு வைக்கவில்லை மேலும் டைட்டன்555 இன்ப்ராரெட் ஸ்கேனிங் சிஸ்டம் எல்லா நிலப்பகுதியையும் இந்த இரண்டு மாத காலத்தில் தேவையான அளவு அலசிப்பார்த்தும் இந்த பகுதியில் எந்த உயிரினமும் வசிப்பதற்கான சாத்தியம் இல்லையெனவும் பிரளயத்திற்கு பின் ஒருவரும் தப்பிப்பிழைக்கவில்லை எனவும் திடமாக தெரிவித்து திரும்புதலுக்கான சமிக்ஞைகளுக்கு காத்திருக்கிறது -நன்றி டைட்டன்555 மார்ச் 31.2100

(eva525) விவரணை-3

திரு.ஜோர்டான் & திரு.பிரான் ஸ்னேதம் தலமையில் ஈவா525 விண்கலம் தனது சேவையை பிப்பரவரி 05.2100ஆம் தேதி அன்று ஆப்ரிக்க ஐரோப்பிய கண்டம் முழுதும் அதிகாலை 5மணிக்கு தொடங்கியது.. ஜனவரி29,2100 சம்பவங்களுக்கு பிறகு தொடர்ச்சியாக பரவிய பெரும் காட்டுத்தீ ஆப்ரிக்க கண்டத்தை முழுமையாக எரித்து பெரும் சாம்பல் காடாக மாற்றிவிட்டது இந்த வெளியெங்கும் பரவியிருந்த சாம்பல்கள் எந்த உயிரினத்தையும் விட்டு வைக்கவில்லை மேலும் ஐரோப்பிய கண்டங்களில் எற்பட்ட தொடர்ச்சியான 25ரிக்டர் அளவுகொண்ட நில நடுக்கங்கள் சீட்டுக்கட்டுகளை களைப்பது போல ஐரோப்பியா முழுவதையும் களைத்து விட்டிருந்தது ஆப்பிரிக்காவின் பெரும் சாம்பல் புயல்கள் வளிமண்டலம் முழுமையும் கலந்து ஐரோப்பியா முழுதும் வீசியிருந்த காரணத்தினால் நில நடுக்கங்களுக்கு தப்பிய மக்களும் சுவாசிக்க திணறி உயிரை விட்டிருக்கின்றனர் இயற்கையின் இவ்வளவு கோர ஆட்டங்களுக்கும் முன் தாக்குப்பிடிக்க எந்த உயிரினங்களும் திராணியற்று மடிந்திருக்கின்றன மேலும் வின்கலத்தின் அல்ட்ராஇன்ப்ரா ரெட் ஸ்கேனிங் முறையில் சலித்துப்பார்த்து தேடிய இந்த இரு மாத தேடல்களின் முடிவில எந்த உயிரினமும் தப்பிப்பிழைக்கவில்லை என திட்ட வட்டமாக தெரிவித்து திரும்புதலுக்கான சமிக்ஞைகளுக்கு காத்திருக்கிறது நன்றி ஈவா525,மார்ச்31,2100

(Adam285) விவரணை-4 :

திரு.சரவணன் & திரு.மக்சூன் மக்கல்ப் தலைமையில் ஆதாம்285 ஆசியா கண்டம் முழுதும் பிப்பரவரி 05.2100ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு தனது சேவையை தொடங்கியது ஜனவரி29ஆம் தேதி நடந்த இயற்கையின் பெரும் பிரளயம் ஆசிய கண்டத்தை பொருத்தவரையில் பேரழிவுகளை நான்குமுனைத்தாக்குதல்களாக அரங்கேற்றியிருந்தது பாலைவனம் சூழ்ந்த நாடுகளை மொத்தமாக உள்ளிழுத்து புதைகுழிகளாக மாறியிருந்தன பாலைவனங்கள்.. சில பகுதிகளில் கடல்தான் இரண்டாம்முனை தாக்குதல்களை அரங்கேற்றியுள்ளது பெரும்பாலும் ஜப்பான் தொடங்கி ஆஸ்திரேலியா முழுதையும் மூழ்கடித்த அண்டார்டிகாவின் கடல்தான் இங்கும் தனது எச்சங்களை கொண்டு இந்த பிரளயங்களை நிகழ்த்தியிருக்கின்றன மேலும் மற்ற நாடுகளில் இயற்கை நிகழ்த்திய தாண்டவங்களை ஓப்பிடும்போது இந்தியா போன்ற  நாடுகளில் இயற்கையின் தாக்கம் குறைவே எனினும் முன்னெச்சரிக்கை இல்லாத அனு உலைகள் இந்த நாடுகளை பெரும் விபத்துக்குள்ளாக்கியுள்ளன நில  நடுக்கங்களின் உண்டான அதிர்வுகளில் ஏற்பட்ட அனுக்கசிவில் இறந்த உயிர்களே அனேகம்..மேலும் உச்சமாக மூன்று விண்கற்களின் தொடர்ச்சியான தாக்குதல்கள் இலங்கை நாடு முழுவதையும் பற்றியெரிய வைத்துள்ளது பாலைவனங்களில் கடல்களில் அனுக்கதிர்களில் விண்கற்கள் தாக்குதல் நடந்த இடங்களில் என கடந்த இரு மாதங்களாக ஊடுருவி அலசிய எங்கள் அல்ட்ரா இன்ப்ராரெட் ஸ்கேனிங் ரிப்போர்ட்களின் படி இங்கு எந்த உயிரினங்களையும் கண்டு பிடிக்கவில்லையென உறுதிப்பூர்வமாக தெரிவித்துக்கொள்கிறோம் -நன்றி ஆதாம்285,மார்ச்31.2100

பிப்பரவரி 02.2100ஆம் தேதி  அன்று அமெரிக்காவின் எனர்ஜி கார்ப்ரேசன் அளித்த இந்த ஆப்ரேசன் சோல் (soul) வேலையின்முடிவை மேற்கண்ட விவரணைகளை கோர்த்து எங்கள் குழு சார்பாக ஆப்ரேசன் சோல் இறுதி அறிக்கையாக இந்த அறிக்கையை சமர்ப்பித்து விண்வெளித்தளத்திற்க்கு திரும்புதலுக்கான சமிக்ஞைகளுக்கு காத்திருக்கிறோம் - நன்றி
மிஸ்டர் கே.சரவணன்
சீப் ஹேட் ஆப்ரேசன் சோல்

என விண்கத்தின் தொடுதிரை கணினியில் மொத்த அறிக்கையையும் சரவணன் பதிவேற்றியிருந்தான்...

தொடர்ச்சியான இந்த இரண்டுமாத தேடல்களின் முடிவில் உலகின் மிகப்பெரிய பிணவறைக்கு சென்று வந்த வெம்மை நிறைந்திருந்தது அவன் கண்களில் 

எத்தனை பெரிய இழப்பு இந்த பூமியில் உண்மையில் நடந்தேறிய இந்த பிரளயத்தின் முதல் குற்றவாளி யார்? இயற்கையா ? இயற்கையை சுய நலத்திற்காக பராமரிக்காமல் விட்ட மனிதர்களா? நாடுகளுக்கிடையே பரவியிருந்த வன்மங்களா? அல்லது இந்த பேரழிவின் கோரமுகத்தை முன்கூட்டியே அறிந்து அமெரிக்கா & ரஷ்யாவின் கூட்டு தளமான ஸ்பேஸ் சொசைட்டியில் தஞ்சம் புகுந்த மில்லினியர்களா? அல்லது அவர்களை மட்டும் அழைத்துகொண்ட என் பெரு ஸ்பேஸ் ரிசர்ச் முதலாளிகளா ?அல்லது அவர்களிடம் வேலை பார்க்கும் நானா? யாரை எதை குற்றம் சொல்ல.. 

அவன் மனம் அவனை கேள்விச்சாத்தானின் முன்பு கூனி நிக்க வைத்திருந்தது இந்த அறிக்கையை அளித்து விட்டு வேலையை உதறி இந்த பூமியிலே தங்கி விடலாம் அந்த விண்தளத்திற்கு திரும்ப போவதில்லை என மனதுக்குள் எற்கனவே ஒரு முடிவை எடுத்திருந்தான் முக்கியமாக ஓரிறு வார்த்தைகூட தன் தாய்மொழியில் பேச யாருமற்ற ஒரு இயந்திர உலகில் அவன் இனி வாழ விரும்பவில்லை அதற்காகவே சரவணனிடம் தமிழகம் சென்று தற்கொலை செய்து கொள்ளவும் ஒரு எண்னமிருந்தது ராஜினமா கடிதத்தோடு அந்த தற்கொலை கடிதத்தையும் ஏற்கனவே எழுதி வைத்திருந்தான் இந்த இரு கடிதமும் பிப்பரவரி 15 அன்று எழுதப்பட்டது... 

அன்றுதான் இந்த விண்கலம் தனது இன்ப்ரா ரெட் அலைவரிசையில் உயிருடன் ஒரு சிறுமியை கண்டுபிடித்திருந்தது உடனடியாக ரோபோக்களுக்கு கட்டளையிட்டு அந்த சிறுமியை கலத்திற்கு தூக்கிவருமாறு சொல்லியிருந்தான்  ஆச்சர்யமாக அடிவயிற்றின் சிறு கீறலில் வெளியே நீட்டியிருந்த குடலையும் இரத்தபோக்கையும் மீறி அந்த சிறுமி உயிருடன் இருந்தாள், முதலுதவி அளித்த அடுத்த அரைமணி  நேரத்திற்குள்ளாக அவளின் உயிரை பறித்த இயற்கையின் மீது வந்த பெரும் கோபத்தில் எழுதிய கடிதம் அது.. இதோ இந்த கடைசி தேடலும் முடிந்து இந்த ஆபரேசனின் இறுதி வடிவத்தை தயாரித்திருந்த போது அந்த தற்கொலை எண்ணம் இன்னும் திடமாக அவனுள் விஸ்வரூபம் எடுத்திருந்தது

அறிக்கையின் பெறுநர் இடத்தில் அமெரிக்கன் எனர்ஜி கார்ப்ரேசன் & ரஷ்யன் ஸ்பேஸ் சொசைட்டி முகவரிகளை பதிவிட்டு விட்டு SEND பட்டனை அழுத்தும் முன் லேசாக இருக்கையில் சாய்ந்து பெரு மூச்சை விட்டு தளர்ந்தான்

விண்கலத்தின் சாட்டிலை ஃபோன் அலறியது சரவணன் நிதானமாக ஃபோனை எடுத்தான்

"சரவணன் உடனே என் அறைக்கு விரைந்து வா""மக்கல்ப் உற்சாக குரலில் சொன்னான்

மக்கல்ப்பின் அறைக்கதவை திறக்கும் முன்னே அவனது குரல் என் செவியை அடைந்திருந்தது "நம்ப முடியவில்லை சரவணா ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும் இதோ நமது ஸ்கேனிங் பிராசஸ் முப்பது உயிர்களை கண்டுபிடித்துள்ளது"

"நிஜமாகவா சொல்கிறாய் மக்கல்ப்"

"மடையா விளையாடும் நிலையிலா நாம் இருக்கிறோம் வந்து பார்"

"ஆம் மிக சரியாகவே காட்டுகிறது முப்பது உயிரினங்கள் மெதுவாக நடந்த படி இருக்கிறார்கள் அருகில இருந்த பதுங்கு குழிகளிலிருந்து வெளியே வந்திருக்கிறார்கள் என நினைக்கிறேன் அதுவும் மனிதர்கள் முக்கியமாக தமிழர்கள்" றக்குறைய அலறியே விட்டேன்

"எப்படி தமிழர்கள் என சொல்கிறாய் மேன்? "

"இதோ அந்த லொகேசனை வைத்துதான்"

"லொகேசசன் இலங்கை மட்டகளப்பு என்றல்லவா காட்டுகிறது ? "

"மடையா அது உனக்கு புரியாது தெளிவாக பிறகு சொல்கிறேன்"

"உன் கண்களில் வெளிப்படும் கண்ணீர் ஒரு பெரும் சோக கதையை சொல்லப்போகிறதென அவதானிக்கிறேன்"

"சரவணன் வாய் நிறைய புன்னகையுடன் மக்கல்ப்பை தழுவிக்கொண்டான்"

"மேன் உடனே அங்கு நம் கலத்தை செலுத்து மேலும் மற்ற கலங்களுக்கு இங்கு வர உத்திரவிடு"

"மக்கல்ப் சொன்னான் இந்த லொகேசனை குறிப்பிட்டுவிட்டேன் இது என்ன இடமென்று சமிக்ஞையிட"

"ஈழம் என பெயரிடு" தடுக்க இப்போது எவன் இருக்கிறான் ??

"ஈழமா?...... சரி இட்டேன் உண்மையில இந்த பிரளயத்திலிருந்து தப்பித்த
அந்த மக்கள் கடவுளின் குழந்தைகள் அதன் அர்த்தம்தான் ஈழமா ?"

"ம்ம்ம்ம் அப்படியும் சொல்லாம் கடவுளின் குழந்தைகள் என்பதை விட அவர்கள் சாத்தானால் சபிக்கப்பட்டு மீண்டெழுந்த கடவுள்கள் அப்படியாக கூட ஒரு அர்த்தம் வைத்துக்கொள் அவர்களுக்கு பிரளயங்களில் நிறைய முன் அனுபவம் உண்டு .... அதில் பலி கொடுக்கப்பட்ட உயிர்கள் ஏராளம் எஞ்சிக்கிடைத்த இவர்கள் கடவுள்கள்தான் மேலும் அவர்கள் அனைவரும் என் இனம் 

" நீ கொடுத்து வைத்தவன் சரவணா' என்றபடி மக்கல்ப் கண் கலங்கினான்"

அவன் நெற்றியில் முத்தமிட்டு சரவணன் சொன்னான் " மன்னித்து விடு சகோதரா அவர்கள் நம் இனம் "

பதிவேற்றியிருந்த இறுதி திட்ட அறிக்கையை அழித்து உயிரினங்களை கண்டுபிடிக்க மேலும் சில நாட்கள் அவகாசம் கேட்டு புது மின்னஞ்சலை ஸ்பேஸ் சொசைட்டிக்கு அனுப்பிய பின்  ராஜினமா கடிதத்தையும் தற்கொலை கடிதத்தையும் அழித்து விட்டு உற்சாகமா சீட்டியடித்தான் சரவணன்.

...................................................................................................................................................................

Saturday, July 12, 2014

பிட்டுபடம்

டிஸ்கி : வக்கிரமா ஒன்னும் இல்ல பிட்டுக்காக புண் சுமந்த கதை


முதல்முத்தம் போன்ற படப்பிடிப்பு லிஸ்ட்ல கண்டிப்பா முதல்பிட்டு படமும் அடங்கும் ஏன்னா இது கதையல்ல ஓவ்வொரு ஆண்மகன்களின் நீல சரித்திரம் 

மில்லினியம் (2000-2001) ஆண்டுகளுக்கு அப்புறம் 11ஆம் வகுப்பு போயிருந்த சமயம் மீசை முளைச்ச பிற்பாடு எல்லோரையும் போலவே ஆசையும் முளைச்சது அந்த சமயம் உலகம் முழுக்க Y2Kன்னு எதோ பிரச்சின பரவியிருந்தது அதோட ஃபுல் பார்ம் என்னன்னு தெரில ஆனா என்ன மாதிரி பசங்களுக்கு இருந்த ஒரே பிரச்சின H2K இதோட ஃபுல்பார்ம் ஹவ் டூ கசமுசா.. 

ஏன்னா வயசுக்கு வந்துட்டோமே தவிர அதுபத்தி ஏதுவுமே தெரியாது அதுபத்தி தெரிஞ்சிக்க அப்போதைய விஞ்ஞானம் எங்ககிட்ட மிகப்பெரிய அறிவியல் புரட்சியான மெமரிகார்டுகளில் பிட்டு படங்களை ஷேவ் பன்னி பாக்கும் டிசைன்லாம் இல்லாம எங்களுக்கு ஓன் ருபி காயின்ஃபோன்,லேண்ட்லைன் ஃபோன், நோக்கியா செங்கல் ஃபோன் என மூனே மூனு மாடல்களில் மட்டும்தான் (செல்)ஃபோன தந்திருந்தது தவிர கொசுநெட் வாலிபால்நெட் புட்பால் நெட் இதைதவிர இண்டெர்நெட்டை சராசரி மனிதஇனம் பொழங்கவும் தரல 

சரி நம்ம தமிழ்சினிமாவுலயாச்சும் அத பத்தி தெரிஞ்சுக்கலாம்னா அது ரெண்டு பூவ முட்ட வைச்சு குலுங்க வைக்கிறது குதிரைகள் ஓடுவது கடல்அலை பாறைல மோதுவது போன்ற உலக சினிமாவுல கூட இல்லாத குறீயிடுகளை மட்டுமே காமிச்சது இதுல சோகம் என்னன்னா இன்னிக்கு வரைக்கும் அந்த குறியீடு எதுவுமே விளங்கல

இப்படியாக தேடல் நீண்டிருந்த சமயம் இதை பற்றிய விவாதங்கள் நண்பர்கள் மத்தியில நடந்தபோது எல்லார் செட்டுலையும் இருக்கிற மாதிரியே எங்க செட்டுலையும் எக்ஸ்பிரியன்ஸான சூதுகவ்வும் விஜய் சேதுபதி மாதிரி ஒருத்தன் இருந்தான் அவன் சொன்னான் இந்த மாதிரியான கல்விச்செல்வத்துக்கெல்லாம் எல்லாம் மலையாள சினிமா உலகம்தான் முன்னோடி அங்க அன்பின் ரேஷ்மா,ஷகீலா போன்ற தேவதைகள் நடிச்ச படம் பாத்தாபோதும் எல்லா விசயமும் விளங்கிறும் மக்களேன்னு 

இந்தியாவுலயே கல்வி அறிவுல கேரளம்தான முதலிடம்னுதான படிச்சிருக்கோம் ஒருவேள இந்த பக்கி பொய் சொல்றானோன்னு நினைச்சப்போ மைண்ட்ல முதல்வன் படத்து ரகுவரன் வந்து அவர் வாய்ஸ்லயே தம்பி அது கலவி போடவேண்டியது கல்வின்னு பிரிண்ட் ஆகிருச்சுப்பான்னு சொன்னாப்ல அப்புறம்தான் நம்பிக்கை ஒளிக்கீற்றுகள் கேரளத்தில் இருந்து உற்பத்தியாகுதுன்னு 
நிம்மதி+சந்தோசம் வந்தது 

அப்ப கண்டிப்பா எல்லாரும் ஒரு மலையாள படத்துக்கு போலாம்னு கூட்டறிக்கை விட்டப்போ மரியாதைக்குரிய எங்க செட் சூதுகவ்வும் விஜய் சேதுபதி சொன்னான்
பிட்டு படத்துக்கு போறதுக்கு 4 ரூல்ஸ் இருக்கு அத கடைபிடிச்சா மட்டும்தான் போகமுடியும்

ரூல் நம்பர் 1 : யூனிபார்ம் மேல போட்டுக்க ஒரு கலர் சட்டை கொண்டு வரனும் அப்பதான் நாம ஸ்கூல் பசங்கன்னு யாருக்குமே தெரியாது 

ரூல் நம்பர் 2 : படம் போட்டு 15 நிமிசம் கழிச்சுதான் தியேட்டர்க்குள்ள போகனும் அப்பதான் இருட்டுல நம்ம மொகரைய யாரலயும் கண்டு பிடிக்க முடியாது 

ரூல் நம்பர் 3 : எல்லாரும் கர்ச்சீப் கொண்டுவரனும் அப்பதான் இண்டர்வெல்ல லைட் போட்டாலும் முகத்த மூடிக்க முடியும்

ரூல் நம்பர் 4 : படத்தோட கிளைமாக்ஸ் பாக்க ஆசைபடாம 15 நிமிசத்துக்கு முன்னமே தியேட்டர காலிபன்னனும் அப்பதான் இருட்டோட இருட்டா எஸ்கேப் ஆக முடியும் 

இதுக்கெல்லாம் சம்மதம்னா மட்டும்தான் கூட்டிட்டு போவேன் ஓகே வா 

எல்லா ரூல்ஸும் கெளரவத்த காப்பாத்திக்கதான்னு ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒரு சுபயோக சுபதினத்தில் அப்போ ரிலீசாகியிருந்த எங்கள் முதல் பிட்டு படமான "லயனம்" ஓடுகிற தியேட்டருக்குள்ள ரூல் நம்பர் 1 பிரகாரம் 15 நிமிசம் கழிச்சு நுழைஞ்சோம் 

கும்மிருட்டில் குறுகுறுப்பில் தட்டுதடுமாறி சேர்ல உக்காந்து பாத்தா வெண் திரையில் ரேஷ்மா அவங்க வீட்டுக்காரர்க்கு டாட்டா காமிச்சாங்க அடடா இந்த 15 நிமிசத்துல நைட் சீன் மிஸ்ஸாகியிருக்குமோன்னு படப்பிடிப்பாகி பக்கத்து சீட்ல உக்காந்திருக்கிறவர்கிட்ட பாஸ் நாங்க வரதுக்கு முன்ன பலான சீன் எதாவது வந்திச்சான்னு கேட்டேன் அவர் ஒரு சீனும் வரல தம்பி இனிதான் வரும் பேசாம பாருன்னு சொன்னார் சரி தீவிரவாத ரசிகர் போலன்னு ஸ்கீரின மட்டும் பாத்தேன் 

ஆபிஸ் முடிஞ்சு விட்டுக்கு வந்த வீட்டுக்காரர ரேஷூ ஓமன குட்டி மல்லிக பூவெல்லாம் வச்சு வரவேத்து சாப்பாடு பறிமாறினதுக்கப்புறம் அடுத்த முக்கிய கட்டத்துக்கு வந்தாங்க ஜிவ்வ்வுன்னு நாபி கமலத்துல குண்டுகள் படபடக்க ஒட்டு மொத்த கூட்டத்தின் கண்ணும் ஸ்கிரீன்ல இருந்து... உற்சாக மிகுதியாக கைதட்டி விசிலடிச்ச கூட்டத்துல எனக்கும் ஒரு பங்கு இருந்தது அப்படியே நாக்கு வரண்டு பாத்துகிட்டிருக்கும் போது அந்த படத்து டைரக்டர்சனியன் வச்சான் பாருங்க ஒரு ட்விஸ்ட்டு உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ரேஷூ விட்டுக்காரர்க்கு காத்து போச்சு....
அடபாவி ஒன்னுமே காட்டலயேடான்னு எல்லாரும் எங்க செட் வி.சேதுபதிய முறைக்க அவன் நித்தியானந்தா மாதிரி சிரிச்சு பொறுமைன்னு கை காட்டி வெறுப்பேத்துனான் 

மறுபடியும் காலைல ரேஷூ வீட்டுகாரர் வேலைக்கு போக அட போங்கடான்னு வெறுத்து நொடியில எங்கிருந்தோ கிர்ர்ர்ர்ன்னு பெல் அடிச்சாங்க ஓட்டுமொத்த கூட்டமும் ஓக்காந்துகிட்டே அட்டென்சன் சார்ன்னு ஸ்கீரின பாக்க என்ங்கடான்னு இதுன்னு நானும் ஸ்கீரன பாத்தேன் ஸ்கிரன்ல திடிர்னு வேற எதோ படத்த இடையில சொருகியிருந்தாங்க அதுக்கு பேர்தான் பிட்டாம் ஒருவழியா 10 நிமிசத்துக்கு எல்லாரும் பிட்டெனும் இன்பவெள்ளத்தில் நீச்சலடிச்சு முடிக்க கிர்ர்ர்ர்ன்னு அடுத்த பெல்சத்தம் ஸ்கிரீன்ல இடைவேளைன்னு வந்தது கூடவே தியேட்டர்குள்ள வெளிச்சமும் வந்தது அப்ப நிஜ சனியன் அவன் பங்குக்கு ஒரு ட்வீஸ்ட் வச்சான் 

பலான சீன பத்தி விசாரிச்ச பக்கத்து சீட் தீவிரவாத ரசிகர் யாருன்னு திரும்பி பாத்தேன் அவர் அப்பாவுக்கும் எனக்கும் நல்லா தெரிஞ்ச எங்க மாமாவோட ஹவுஸ் ஓனர்.... சட்டுன்னு ரூல்ஸ் 3 ஞாபகம் வந்து தற்காப்பு கலைய தொடங்கறதுக்குள்ள அவர் என்னையும் பாத்துட்டார் அப்ப மறுபடியும் முதல்வன் ரகுவரன் மைண்ட்ல வந்து ஹா ஹா தம்பி இப்ப தெரிஞ்சதா பிட்டுபடமுங்கிறது ஒரு முள்கீரிடம்னு சொல்ல...சர்தான் போயான்னு மீதி ரூல்ஸயும் பசங்களையும் விட்டுபோட்டு எடுத்தேன் பாருங்க ஒரு ஓட்டம் ரோடுன்னு கூட பாக்கலியே வீட்லதான் போயி நிப்பாட்டினேன் 

அப்புறமா 2 நாள் கழிச்சு அந்த ரேஷ்மா ரசிகர் மன்ற தலிவர் மிக சரியாக நைனாவிடம் வத்தி வச்சிருந்தது தெரியாம ஸ்கூல் விட்டு வந்ததும் அப்பா கூப்பிட பொல்லாதவன் தனுஷ் கணக்கா அப்பா சொல்லுப்பான்னு சிரிச்சிட்டே போய் நிக்க ரைன்னு மூஞ்சில விழுந்தது ஒரு அறை

நைனா மோதிரம் போட்டிருந்த காரணத்தினால் லேசாக உதடு கிழிஞ்சு ரத்தம் வர அப்பா பயந்து போய் துணி எடுத்து தொடச்சுவிட்டுட்டு அதுக்குள்ள பெரிய மனுசனாவானேன் அடி வாங்குவானேன் சொல்லிட்டு போக அப்பதான் புரிஞ்சது இந்த அடி பிட்டுபடத்துக்காகன்னு.... அந்த காயம் வலிக்கல போயும் போயும் இதுக்காகவெல்லாம் அடிவாங்கிட்டமேன்னு அவமானம்தான் வலிச்சது 

பிறகு இன்னும் கொஞ்சம் மீசை வளர்ந்த பிறகு அமெரிக்காவின் அதி அற்புத காவியமான அமெரிக்கன் பை சீரிஸ்களை பார்க்கையில் அந்த நாட்டு டீன் ஏஜ் பசங்க மேல ஏக பொறாமை வந்தது முக்கியாமாக அந்த படத்துல ஆஸ்பிட்டல்ல இருந்து பாட்டிய கதை நாயகனோட பேரன்ட்ஸ் வீட்டுக்கு கூட்டிட்டு வரும்போது நடக்கும் பாருங்க ஒரு கலவரம் ஆகா 

நாம எல்லாம் அமெரிக்காவுக்கே போயிரலாம் சிவாஜின்னு தோணுச்சு இங்கிட்டு தான் கலாசாரம்னு மொக்க போட்டுகிட்டு இருக்கானுக இந்த நாடும் நாட்டு மக்களும் எப்படியோ போகட்டும் 

கதையின் நீதி : இந்தியாவில் செக்ஸ்கல்வி மிக அவசியம் ஆனா முதல்ல பேரண்ட்ஸ்களுக்கு :))) _/\_

Thursday, July 3, 2014

மீட்பின் வழி

இறுதி கணம்



அடர் செந்நிறமும் வெளிர் கருமையும் வெண்மையும் கலந்து நெழு நெழுவென நெளியும் இந்த புழுக்கள் சூழ்ந்த குட்டையின் ஆழம் எவ்வளவு எனத்தெரியாது உள்சென்று அளக்கவும் இப்போது நேரமுமில்லை அதற்கு சாத்தியமான வெளிச்சமும் இங்கில்லை எப்படி நிகழ்ந்தது இது?? இயற்கை விதி அல்லது மனிதன் சதி ?? எப்படி சொல்வது?? 

இனி சொல்லி என்னவாக போகிறது துளி வெளிச்சம் ஏதுமின்றி சபிக்கப்பட்ட இந்த காட்டுக்குள் வந்து விழுந்தாகிற்று மீளுவதற்கான வழியை பற்றி மட்டுமே இனி யோசிக்க வேண்டும் வெளியேறியாக வேண்டுமெனில் இந்த இருள் படர்ந்த காட்டின் அத்தனை அசைவுகளுக்கும் மறுதலிக்க வேண்டும் அல்லது இசைந்து போகவேண்டும் இரண்டாவதைதான் தேர்ந்தெடுக்கப் போகிறேன் என நினைக்கிறேன் வேறு வழியில்லை ... 
           
            ஒருவேளை என் அடையாளங்கள் இதனுள் தொலைக்கப்படலாம் அல்லது நான் உயிரற்று இந்த காட்டின் கழிவாகவும் வெளியேறலாம் எப்படியும் மேலே செல்ல முடியாது.... நிகழ்வுகளுக்கு உட்படு மூழ்கிப்பார் மூளை சொல்லியது...இன்னும் இன்னும் எவ்வளவு நேரம் வழுவழுவென இருக்கும் இந்த கிளையை பிடித்து தொங்கி கொண்டிருக்க போகிறாய் மேலே ஏறுவதும் முடியாத காரியம்...ஒன்றும் யோசிக்க தெரியவில்லை சூன்யமாகிப்போன இக்கணத்தில் இருள் இருள் இருள் அது மட்டும் தான் எங்கும் வியாபித்திருந்தது...பிடி தளர்ந்து கொண்டே இருந்து இன்னும் எத்தனை நேரம் போராடப்போகிறாய் சம்பவங்களுக்கு இசைந்து விடுவென பிடித்திருந்த இந்த வழுவழு கிளையும் பிடிப்பை தளர்த்திக்கொண்டே வந்தது அதையேதான் கடவுளும் விரும்பியிருப்பார் போலும் எங்கிருந்தோ ஹோவென இரைந்தவாறு என்னை அடித்து தள்ளி விட்டது ஒரு பெருவெள்ளம்

                             இதோ என் கடைசிப்போராட்டமும் முடிந்தது குட்டைக்குள்ளாக விழுந்த பின் தான் தெரிந்தது இது நீராலான குட்டையே அல்ல நுனி முதல் அடி வரை பற்றியெரிக்கும் அமிலம் அட கடவுளே இனி தப்பிக்க எந்த திராணியும் இல்லை இன்னும் சற்று நேரத்திற்கெல்லாம் முடிந்தது என் இறுதிப்போராட்ட கதை எல்லாம் முடிந்தாகிற்று இதோ இப்போது இந்த அமிலத்தின் வழி இப்போது என் உடல் எந்த எதிர்ப்பும் இன்றி இசைந்து கொண்டிருக்கிறது 

            மன்னிற்குள்ளாக புதைத்தும் அருவாள்களால் அறுத்தும் தலைகீழாக்கி புடைத்தும் கொதி நீருக்குள் வேகவைத்தும் இறக்காது போராடி மீண்ட நான் இதோ இந்த இருள் சூழ்ந்த குழிக்குள்ளாக விழுந்து நடுவில் எதோ ஒரு பிடிப்பில் சிறிது நேரம் ஜீவமரண போராட்டம் முடித்து இறுதியாக அமிலம் சூழ்ந்த இந்த இரைப்பையில் முற்றிலுமாக செரிந்திருந்தேன் இனி எப்போதும் இந்த உலகம் என்னை நெல் எனவோ பருக்கை எனவோ எனக்கு பிடித்தவாறு என்னை அழைக்கப்போவதில்லை எனும் பெரு சோகத்துடனே செரிந்து இறந்திருக்கிறேன் என்பதை மட்டும் உங்களிடம் சொல்லிக்கொள்கிறேன் !!