Saturday, September 26, 2015

குற்றம் கடிதல் - அடுத்த நொடியின் தீவிரம்.

குற்றம் கடிதல் - அடுத்த நொடியின் தீவிரம்.
---------------------------------------------------------------------------------------------------------------



ஆசிரிய சமூகத்தின் இயல்பான நடவடிக்கைகளில் ஒன்று குற்றம் கடிதல். வகுப்பில் மட்டும் கண்டிப்பாக காட்டிக்கொள்ளூம் ஆசிரியை ஒருவர் ஒரு குறும்புக்கார மாணவனின் குற்றத்தைக்கடியும் இயல்பான ஓர் நிகழ்வு, ஒரு மிகையூட்டும் தீவிரத்தை உண்டு செய்துவிடும் சூழ்நிலையில், அந்நிகழ்வில் நேரடியாக பாதிக்கப்பட்ட, பங்குபெற்ற, மனிதர்களோடு, வெறுமனே பார்வையிடும், கருத்திடும், சமூகத்தின், ஒரு இரவு/பகல் சூழ்நிலைகளும், அந்நிகழ்வை அவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களும், அதன் முடிவுமே, குற்றம் கடிதல் படத்தின் கதை

ஆத்திரத்தின் அடுத்த நொடியின் தீவிரம் சார்ந்து பின்னப்பட்ட இயல்பான இந்தக்கதையில் பள்ளி,கல்வி,சமூகம், சார்ந்து பரந்துபட்டு விரியும் ஒர் ஆரோக்கிய பாதையை நெய்யத மாயஜால வித்தைக்கு இயக்குனருக்கு மானசீக மரியாதையுடன்  ஓராயிரம் பூங்கொத்துகளை தரலாம். கதையையும் தாண்டி இந்தப்படைப்பில் அழகியலையும்  மெச்சிக்கொள்ளும் படி நெய்திருக்கிறார்

கதை நாயகியின் போட்டோக்கள் ஒட்டிய ஒருபக்க செல்ஃப் கதவை நாயகி மூடிய பின் அவள் நாயகனின் போட்டோக்கள் நிறைந்த மறுபக்க செல்ஃப் கதவையும் மூடும் காட்சியினூடே அவர்களுக்குள் நிகழ்ந்திருந்த திருமண நிகழ்வை, தம்பதிகளின் இயல்பான வசனங்களுக்கு பின்ணனியில் கவிதையாக விரித்து சொல்லும் காட்சியும். குற்றத்திலிருந்து தப்பிக்க கிடைக்கும் அறிவுரைகளோடு எதைச்செய்வதெனப் புரியாமல் தப்பிப்போக திரும்பும் நாயகியின் கால்களில், அவளையறியாமலே மாட்டிக்கொண்டு துருத்தும் பாலீத்தின் பை காட்சியும். ஆத்திரங்களோடு குற்றவாளியைத் தேடிப்போகும் தோழர். அந்த வீட்டில் நடக்கும் மதப் பிரார்த்தனைக் கூட்டம் முடியும் வரை காத்திருக்கும் காட்சியும், பாரதியின் சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா பாடலுக்கு மொத்த சூழ்நிலைக்கும் தீர்வாக பொருத்திய காட்சிகளும், இறுதிக்காட்சியில் அன்பளிப்பாக சேர்க்கப்போகும் புத்தகத்தின் முதல் பக்கத்தில், உரியவரின் பெயரை நிரப்பிய பின் அட்டையை மூடும் போது அந்தப் புத்தகம்  மாக்ஸிம் கார்க்கியின் தாய்க்காவியம் எனக்காட்டுவதும், இந்த குறிப்பிட்ட காட்சி, அதற்கு முந்தைய காட்சிகளோடு பொருந்திப்போகும் அந்த அற்புத சூழலும், என காட்சிவாரியாக இந்தப் படைப்பின் அழகியலை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்

"தப்பு செஞ்சவனுக்கு அவன் செஞ்ச தப்பு என்னன்னு புரியனும் அப்பத்தான் மறுபடியும் செய்ய மாட்டான்

"ரோட்டுல எவஞ்செத்துக்கிடந்தாலும் பரவால, உங்களுக்கு பங்க்சுவாலிட்டியா போயாகனும் இல்ல?" 

"ஒரு கன்னத்துல அறைஞ்சா மறு கன்னத்த காட்டிகிட்டு நிக்கிறவங்க நாங்க இல்ல

போன்ற வசனங்களில் நிறைய எழுத்து அழகியலும் கைக்கூடிய உன்னத படைப்பு இது

மேலும் மேலும் மெருகூட்டும்படியாக இதில் பங்குபெற்ற அனைத்து கலைஞர்களின் பங்கும் அசாத்திய அழகியலை உண்டு செய்கிறது.. மிக முக்கியமாக நாயகி.. எல்லா நிகழ்வுக்கும் நூறு சதம் பொருந்திப்போகும் இயல்பை, இயலாமையை, வெறுமையைதீவிரத்தை, மனப்போக்கை, அனாயசமாக கடத்திவிடுகிறார். தமிழ் சினிமா வரலாற்றில் மிக மிக முக்கியப் பங்கை வகித்த நாயகி இவர்தான். மேலும் துறுதுறுவென ரசிக்கச்செய்யும் குறும்புகள் புரியும் அச்சிறுவனும், அவன் தாய்மாமாவாக வரும் பாவலும் (மெட்ராஸ் விஜி), பிரின்சிபலும் அவர் மனைவியும், பாலியல் கல்வி குறித்து பாடம் நடத்தும் ஆசிரியையும் என மிக மிக நேர்த்தியாக இவர்கள்தம் உழைப்பை விதைத்திருக்கிறார்கள்

எதை மீதும், யார் மீதும்  குற்றம் சுமத்தாமல் சமூகத்தின் தற்போதைய இருப்பை இயல்பாக காட்டியதோடு, ஆசிரியர்-மாணவர்களுக்கிடையே தேவைப்படும்  அணுகுமுறையை, பாலியல் கல்வி குறித்த விழிப்புணர்வை, மிக நேர்த்தியாக  நிகழ் சமூகத்தின் அழுக்கை கடிதலை, சம/எதிர்கால சமூகம் சார்ந்த ஆரோக்கிய தொடக்கத்தை, விரும்பும் இந்த உன்னத படைப்பாளியின் அக்கறை மிகு படைப்பிற்கு சல்யூட். படைப்பாளி என்கிற பதத்தையும் மீறி உச்சிமீது ஏறி நின்று வழிகாட்டும் நம் சக மனிதனுக்கும் சல்யூட்


-- கர்ணாசக்தி 

Friday, September 25, 2015

தமிழ் சினிமாவின் தங்கமுட்டை



தமிழில் இதுவரை வந்த எல்லா கலை அல்லது அவார்டு சினிமாக்களும், அவை பேசும் அரசியலும், பெரும்பாலும் குறியீடுகள் பொருத்திய காட்சியின் ஊடாக அதன் கலைத்தன்மை மாறாமல் ரசிக்கும் ரசிகன் உள்வாங்கிக் கொள்கிற மாதிரி மட்டுமே வந்திருக்கின்றன. அவை ஒரு  சாமானியனின் கதையே ஆனாலும், அதைப்பார்க்கும் எந்த சாமானியனும் இது தனக்காக, தன்னைப்பற்றி பேசும் படம் எனத்தெரியாமலேயேதான் அதைக்கடந்தும் போயிருக்கிறான். அதி சிறந்த / தேர்ந்த சினிமா ரசிகர்களுக்கு மட்டுமே புரியும் அது போன்ற சினிமாக்கள்,  ஒருவகையில் தெலுங்கு கீர்த்தனைகள் இசைக்கும் கர்நாடக சங்கீதம் போலானது. எதற்காக ரசிக்கிறார்கள் என எதுவுமே புரியாமல், கூட்டத்தோடு கூட்டமாக தலையாட்டும் கர்னாடக சங்கீத கூட்டத்தில், பாடறியேன் படிப்பறியேன் என மண்ணின் மொழியைப் புகுத்தி கர்நாடக சங்கீதத்தை எளிமைப்படுத்தி சாமானியனிடம் கொண்டு சேர்த்த  ராஜாவின் படைப்பாளுமை போலானாதுதான் மணிகண்டனின் காக்கா முட்டை.

சாமானியனுக்கு பிடித்த எதுவும் இலக்கிய மண்டைகளுக்கு பிடிக்காது. என்ற ஆதிகாம விதிப்படி, படம் வெளிவந்து மூன்று நாட்களுக்குள் வந்த மூவாயிரம் விமர்சனங்களில், ஒரு சில தேர்ந்த அறிவுஜீவி எழுத்தாள முகநூல் பிரபலங்களின் கூற்றுப்படி இந்தப்படம், ஒற்றை அறை ஜீவித மக்கள் வாழ்வியலை, வெறுமனே காட்சிப்படுத்தியிருக்கிறதே தவிர, அம்மக்களின் நிலைக்கான காரணங்களின் அடியாழங்களுக்குச் சென்று, அவர்தம் சமூகநிலை முன்னேற்றம், தற்போதைய நிலைக்கான மாற்று, என எதையுமே, பேசவில்லை என்பதும், நல்லபடம் ஆனால் சிறந்தபடம் இல்லை என்பதாகவுமே இருந்தது. இது போன்ற முட்டாள்த்தனமான கூற்றுக்கு, ஒரு மறுப்புக் கட்டுரையாகவேணும் எழுத வாய்ப்பு தந்த அறிவுஜீவிகளுக்கு முதலில் நன்றி.

ஆம், அவர்கள் எதிர்ப்பார்ப்பதைப்போல இந்தப்படம், எதையும் நேரடியாக வசனங்களில் பொருத்தி பேசவில்லையே ஒழிய, எடுத்துக்கொண்ட களமும், காட்சியினூடே வெளிப்படும் தீவிரமும், சுற்றிப்பின்னப்பட்ட களமும், பக்கம்பக்கமாக பேசும் வீரதீர வசனங்களுக்கு பல மடங்கு மேலானது. அவை ஆரம்பித்த முதல் பிரேமிலேயே மிக எளிமையாக ஆரம்பிக்கிறது. அரசின்
எச்சரிக்கை வாசகமான, “மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு” என்பதை சிரித்தபடி விளையாட்டுத்தனமாக சொல்வதை தொடர்ந்து,  நமக்கு மிகப் பரிச்சயமான நிகழ்வான குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை கவிதையான காட்சியாக்கி துவங்குகிறது அடுத்த ஐம்பதாண்டுகள்  கொண்டாடப்போகும் காக்காமுட்டை எனும் காவியத் திருவிழா.

வெட்டிச்சாய்க்கப்பட்ட மரத்தினைக் கண்டு மற்ற குழந்தைகள் கைதட்டி ஆரப்பரித்து,

"யே.... இனிமே உங்கனால காக்கா முட்டை துண்ண முடியாதே?
"நீயும் தான இங்க விளையாண்டுனு இருந்த.. உன்னாலயும்தான் இனிமே இங்க விளையாட முடியாது"

எனத் தங்கள் வாழ்வியலோடு பிண்ணிப்பிணைந்திருந்த பாரம்பரியமிக்க ஒரு நிலம், அதிகாரங்களினால் கைப்பற்றப்படும் போது, எந்த பிரக்ஞையும் இல்லாது வெறித்த மற்றும் குதுகலித்த கண்களோடு இரண்டு குழு சிறுவர்களும் பேசிக்கொள்ளும் ஒற்றைக்காட்சியைப் பார்த்தும், இந்தப்படம் எதையுமே பேசவில்லை என்பதெல்லாம், புத்திசாலிகளின் முட்டாள்தனங்களில் சேர்த்தி.

இத்தனை ஆண்டுகளாக வந்த தமிழ் சினிமாக்கள் நிகழ்த்திய கதைக் களங்களில்  இந்தப்படத்தின் களமும் காட்சிகளும், மேற்பார்வைக்கு எவ்வளவு எளிமையாக தோன்றுகிறதோ அதற்கு நேர்மாறாக அது கிளறி விடும் சிந்தனைகள்  மிக மிக ஆழமானது.. வீட்டிலிருந்து உணவை சேகரித்து வந்து, காக்கைகளுக்கு இரையிட்டு, கிடைக்கும் மூன்று முட்டைகளை காக்காவிற்கு ஒன்றென மீதம் வைத்துவிட்டு, இரு சிறுவர்கள் பங்கிட்டு கொண்டு வாழும், அந்த நிலத்தின் பாரம்பரிய வாழ்வியலை சட்டென அழித்து விட்டு முளைக்கும் அன்னிய சந்தை, அந்த இடத்தைப் புழங்கிவந்த பாரம்பரிய மக்களை அன்னியப்படுத்தி வைக்கும் அதன் பகட்டு கட்டிடம், சந்தைப்பொருளை உசுப்பேத்தி விற்க வைக்க கொண்டு வரும் நட்சத்திரம், பகட்டுக்கட்டிடத்தின் உள் நுழைய எளியவர்கள் எதிர்கொள்ளும் போராட்டம், அவ்வாறான போராட்டத்தின் தேவையாக உடை வாங்க சென்று மற்றொரு கட்டிடத்தைக் கண்டு "ப்பா..இதுக்குள்ள நம்ள சத்தியமா விடமான்னானுக.." என இரண்டு சிறுவர்களும் தாமாகவே புரிந்து கொள்ளும் வர்க முரண்பாட்டின் இடைவெளி, 

எல்லா நிகழ்விலும் காசு பார்க்கத்துடிக்கும் அரசியல்வாதி, டிவியில்  உலகமயமாக்கள் குறித்த விவாத நிகழ்ச்சியில், விளம்பர இடைவேளைக்கு பிறகு தொடர்ந்து விவாதிப்போம் எனக் கூச்சமின்றி நடந்தேறும், மீடியாக்களின் லாபி, இரண்டு வர்க சிறுவர்களின் நட்புக்களுக்கு இடையில் துருத்திக்கொண்டிருக்கும் கம்பிவேலி, கம்பிக்கு அந்தப்புறம் மேடாகவும், இந்தப்புறம் தாழ்வாகவும் இருக்கும் அபார்ட்மெண்ட் வெளிச்சுவர் அமைப்பு, வணிக நோக்கத்கோடு சேரி சிறுவர்களுக்கு, முதலாளிகள் அளிக்கும் மரியாதை, தொழிலாளியை தண்டித்து தன் வியாபரத்தை தக்க வைத்துக்கொள்ளும் முதலாளித்துவம், கோடிகளில் செய்த நிலக்கரி ஊழல் இன்னமும் விசாரிக்கப்படாத இதே நாட்டில் ஒரு ஓரமாக மூலையில் குவித்த நிலக்கரியை திருடிய ஊழியரை தண்டிக்கும் ஆதிக்க நிலை, என எல்லாவாற்றையும் தாண்டி நம்ம வீட்டு நாய் கூட சாப்பிடாது, இதுக்கு ஆயா சுட்ட தோசையே நல்லாருந்தது, என பகட்டு, கவர்சிகள் தாண்டி அதற்குப் பின் உள்ள மாற்று உணவின் உண்மை முகம். என இதன் களமும், காட்சியமைப்பும் ஆயிரமாயிரம் பக்க வசனங்கள் பேசாத அரசியலை சாமானியனுக்கும் புரியும்படி மிக எளிமையாக பேசிவிடுகிறது.

உறங்க,உடை மாற்ற,உண்ண,கழிக்கவென ஒற்றை அறைக்குள் நாய்க்குட்டியும் சேர்த்து ஐந்து பேர் வாழும் வீட்டை சார்ந்த இவர்களுக்கு, விளையாட, காக்கா முட்டைத்தர இருந்த ஒரு பொறம்போக்கு இடமும் பறிபோகும் அதே நகரில் வசதிமிக்க அபார்ட்மெண்டும் அதன் மைதானத்தில் குறிப்பிட்ட நேரம் மட்டுமே விளையாட அனுமதி கிடைக்கும் அவர்களும் இருக்கிறார்கள் எனக் காட்சிப்படுத்தியதும், அபார்ட்மெண்ட் நாய்க்கு 25000 விலை வைக்கும் அதே நகரில் குடிசை நாய்க்கு எந்த மதிப்பும் இல்லை என்பதும், தனக்கு வைக்கும் உணவை காக்கைக்கும்,நாய்க்கும் வைக்கும் இவர்களும், தான் உண்ட உணவை ஏழை சிறுவர்களுக்கு தரும் அவர்களும், இவர்களுக்கு உடைகள் மேல் ஆசை, அவர்களுக்கு பானி பூரியின் மேல் ஆசை என படம் முழுக்க பேசும் வர்க அரசியல் மிக முக்கியமானது.

ஒரு காலத்தில் சாமானியர்களுக்கு அந்நியமாகியிருந்த அரிசி உணவை, எல்லோரும் எளிதில் புழங்கும் காலம் வாய்த்தபின், இத்தாலியிலிருந்து வேறு உணவை கொண்டுவந்து வர்க வேறுபாடுகளை வரையறுத்துக்கொண்ட, இனிமேலும் அப்படி மாற்றி மாற்றி வரையறுத்துக்கொண்டே  இருக்கப்போகும் இந்த சமூகத்தின் பீட்சா எனும் சப்பை உணவிற்கு பின்னான வர்க அரசியலை கதையின் மையச்சரடாக வைத்துக்கொண்டு, உலகமயமாதல், எளிய ஒடுக்கப்பட்ட மனிதர்களை வைத்து அதிகாரங்களால் செய்யப்படும் அரசியல், சமகால மீடியாவின் போலி நீள் நாக்கு, கிடைக்கும் எல்லா பிரச்சினைகளையும் பேசு பொருளாக்கி, கருத்தை பரப்பி, பொழுதைக்களிக்கும் சமூகவலைத்தளங்களின் போக்கு,  என சமகால சமூக சூழ்நிலையை, அரசியலை, அச்சு அசலாக பிரதிபலிக்கும் கண்ணாடிதான் காக்காமுட்டை.

இத்தனை அரசியலை, அனாயசமாக பேசும் இந்த படத்தில், வெறுமனே மேல்தட்டு மற்றும் பொது புத்திக்கு தேவையான அரிப்பெடுக்க கிளர்ச்சியடைய வைக்கும் வசனங்கள் வைக்கவில்லை என்பதற்காகவெல்லாம், இது நல்ல படம், ஆனால் சிறந்த படமில்லை, என ஒதுக்கி விட முடியாது. இனி அடுத்த ஐம்பதாண்டுகளில் வழக்கு எண் 18/9 க்கு அடுத்து நாம் மெச்சிக்கொள்ள நமக்கு கிடைத்திருக்கும் அடுத்த  தங்கமுட்டைதான்  இந்த காக்கா முட்டை.

இந்த அற்புதமான தங்க முட்டையை குறும்பட மெட்டீரியல் என ஒதுக்கி வைக்க முனையும் எல்லா அறிவாளிகளுக்கும் சேரி,குப்பம், என்பதெல்லாம் இலக்கியம், சினிமாவைத்தாண்டி நேரிடையாக பரிச்சயமில்லாத வாழ்வியல் களம். ஆகவே அவர்களால் அவ்வாறுதான் புரிந்து கொள்ளமுடியும். கிடக்கட்டும் அவர்கள்.  நகர்ப்புறச்சேரியில் பிறந்து வளர்ந்த என் போன்ற சாமனியர்கள் அனுபவித்து, இழந்த, எங்கள் வாழ்க்கையை, திரைப்பிரதியின் வழியே எங்கள் அகத்திரையில் நெக்குருக நிறுவிய இயக்குனர் திரு.மணிகண்டனுக்கு கோடி நன்றிகளும் அன்பு முத்தங்களும். 

கலைப்படம் என்பது இலக்கிய ரசனை கொண்ட தேர்ந்த சினிமா ரசிகர்களுக்கானது என்ற நடைமுறையை, நம்பிக்கையை கட்டுடைத்து கலைப்படம் என்பதும் சாமனியர்களுக்கானதே என நிறுவியிருக்கும் இந்தியாவின் முக்கிய சினிமா என்பதற்கு தொடர் அரங்கு நிறைந்த காட்சிகளோடும் கரவொலியோடும் ஓடிக்கொண்டிருக்கும் இந்தப்படத்தின் வெற்றியே சாட்சி. 

இறுதியாக, பீட்சா கடையில் சிறுவர்களுக்கு கிடைக்கும் மரியாதைக்கும், பீட்சாவிற்கும் ஆர்பரித்து கரவொலி எழுப்பும் அத்தனை ரசிக கண்மணிகளுக்கும் சொல்லிக்கொள்ள ஒன்றுதான் இருக்கிறது. சிறுவர்களின் நீண்ட போராட்டத்தின் முடிவில் அவர்களுக்கு  பீட்சா கிடைத்தற்கு கைத்தட்டி ஆர்ப்பரிக்கும் நீங்கள்தான், அத்தகைய மக்களின் இடஒதுக்கீடு பற்றிய அகப்பூர்வமான விவாதத்தில் வேறு வகையான பிம்பங்களை நிறுவுகிறீர்கள். நிதானமாக சிந்தியுங்கள்.


தோழமையுடன்
கர்ணாசக்தி

 நன்றி - www.Tamilpaper.net
http://www.tamilpaper.net/?p=9279