Saturday, September 10, 2016

கம்மட்டிபாடம் - நகரமயமாக்கலும், மண்ணின் மைந்தர்களும்.





செவ்விந்தியர்களின்  நிலங்களை ஆக்கிரமித்து எழுச்சியடைந்த அமெரிக்கா, பழங்குடிகளின் நிலங்களை ஆக்கிரமித்து எழுச்சியடைந்த ஆஸ்திரேலியா, என பல்வேறு நாட்டு வளர்ச்சிகளின் பின்புலங்களானது அம்மண்ணிலிருந்து இரத்தமும் சதையுமாக பிய்த்தெறியப்பட்ட பூர்வகுடிகளின் பெருங்கதைகளால் நிரம்பியது. நாடுகள் மட்டுமல்லாது நாட்டிலுள்ள நகரத்தின் வளர்ச்சிகளுக்கும் அப்படிப்பட்ட கருப்புப் பக்கங்கள் உண்டு. அத்தகைய உண்மைக்கதைகளைக் அடிப்படையாகக் கொண்டு உலகளவில் பல்வேறு திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. அவற்றில் நகரமயமாக்கள் குறித்த திரைப்படங்களும் அடக்கம். குறிப்பிடப்பட்ட இந்த வகையில் பிரேசிலின் 'ரியோ டி ஜெனிரே' நகரத்தின் அசல் மனிதர்களின் கதையைச் சொன்ன 'சிட்டி ஆப் காட்' திரைப்படம் இன்றளவும் உலக சினிமா ரசிகர்களால் உன்னதமான திரைப்படமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்தின் நேர்க்கோட்டில் இந்திய அளவில் நிறுத்தத்தக்க ஒரே திரைப்படம் என சமீபத்தில் மலையாள மொழியில் வெளியான ஒளிப்பதிவாளர்,இயக்குனர். திரு.ராஜீவ் ரவியின் "கம்மட்டிபாடம்" திரைப்படத்தை முன் வைக்கலாம். 

இவ்விரண்டு திரைப்படங்களின் கதையும் நகரமயமாக்கலின் பின்புலத்தில் நிகழ்கின்ற கதைகள். சிட்டி ஆப் காட் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டது, கம்மட்டிபாடம் உண்மையாக நிகழ்ந்திருக்கக்கூடிய சாத்தியம் கொண்ட புனைவுக்கதை. இரண்டு திரைப்படங்களிலும் குறிப்பிட்ட சில கதாபாத்திரங்களின் வாழ்வில் பல்வேறு காலகட்டங்களில் நிகழக்கூடிய சம்பவங்களின் தொகுப்பே திரைக்கதையாக அமைந்திருக்கிறது. மேலும் இரண்டிலும் வன்முறை கலாசாரம் மைய இழையாகவும் இருக்கிறது. 

இனி கம்மட்டிபாடத்தை பற்றி மட்டும், 

வானாளவ கட்டிடங்கள் உயர்ந்து நிற்கும் எல்லா நகரங்களின் சாயலையும் கொண்ட தற்போதைய எர்ணாகுளம் எனப்படும் கொச்சின் நகரத்தை எழுப்பிவிட்டு அடியாழத்தில் அமிழ்ந்து போன ஒரு ஊரையும் அதன் மக்களையும் பற்றிய படம்தான் கம்மட்டிபாடம். கம்மட்டிபாடம் எனும் ஊரின் அசல் மனிதர்களான தலித் மக்களில் சிலரின் எழுச்சிகொண்ட வாழ்வியலும், ஏமாற்றம் பெற்ற சூழலியலும், எதிர்கொண்ட நம்பிக்கைத் துரோகங்களும், என உன்மைக்கு நெருக்கமான ஒரு  பெருங்கதையாடலை கிருஷ்ணா எனும் கதாபாத்திரத்தின் நினைவுகளின் வழியே கம்மட்டிபாடம் திரையில் விவரிக்கிறது. 

கிருஷ்ணாவிற்கு 'கம்மாட்டிபாடம்' என்கிற அந்த ஊர் முழுக்க முழுக்க பாலன்,கங்கா, கங்காவின் முறைப்பெண் அனிதா, கங்காவின் தாத்தா, எனும் தலித்தினத்தைச் சார்ந்த அந்த மண்ணின் அசல் மனிதர்களின் நினைவுகளாலானது. குடும்பம் சகிதமாக அந்த ஊருக்கு குடிபெயர்ந்த கிருஷ்ணாவிற்கு தன் பால்ய வயதையொத்த கங்காவும்,அனிதாவும், நண்பர்களாகின்றனர். கங்காவின் மூத்த சகோதரனான இளவயது பாலன் அவனது தாத்தாவிற்காக அவ்வூரின் ஆதிக்கசாதி மனிதர்களை எதிர்க்கும் செயல் ஒன்றை செய்கிறான். அவனது அந்த எதிர்ப்புக்குரல் அவ்வூரின் சுரேந்திரன் எனும் வியாபரியின் மூலம் மெல்ல மெல்ல மெருகேற்றப்படுகிறது. அந்த மெருகேற்றல் அவனை கம்மாட்டிபாடத்தின் ரெளடியாக கட்டமைக்கிறது. பாலன் இளவயதை அடைந்ததும் வியாபாரி சுரேந்திரனின் சமூகவிரோத தொழிலுக்கு காரியதாரியாக உருமாற்றப்படுகிறான். கங்கா,கிருஷ்ணா உள்ளிட்ட கம்மாட்டிபாடத்தின் பதின்பருவத்து இளைஞர்களைக் கூட்டு சேர்த்துக் கொண்டு பாலன் சுரேந்திரனின் சாராய வியாபாரத்திற்கும், அவனின் வன்முறை சார்ந்த பிரச்சினைகளுக்கும் தலைமைத்  தொழிலாளியாகின்றான். இதனிடையே கிருஷ்ணாவிற்கும் அனிதாவிற்கும் இடையில் காதல் உருவாகின்றன. இப்படியாக நகரும் நாட்களின் இடையில் கிருஷ்ணா கங்காவிற்காக முன்னெடுத்த வன்முறைச் செயலொன்றுக்காக ஜெயிலில் அடைக்கப்படுகிறான். இளவயதைத் தொட்ட பிறகு ஜெயிலில் இருந்து வெளிவரும் கிருஷ்ணா திரும்பவும் பாலனின் குழுமத்தில் இணைகிறான். இம்முறை பாலனின் முதலளாளியான சுரேந்தரனின் தொழிலும் பாலனிம் வீச்சும் அந்த ஊரில் இன்னும் விஸ்தீரணமானதாக மாறியிருக்கிறது.

சுரேந்தரன் சாராயம் விற்ற பணத்தில் மென்மேலும் தனது வியாபாரத்தை பெருக்கும் பொருட்டு ஒரு கட்டிட வியாபார நிமித்தம் பாலனின் உறவுக்காரர்களான வேறொரு ஏரியாவைச் சேர்ந்த தலித்தின மக்களின் நிலங்களை கையபகப்படுத்த நினைக்கிறான். பாலனும் ஆசானின் (முதலாளியின்) ஆசையின் பொருட்டு அதற்கு துணை போகிறான். பாலனின் தாத்தா அதை தட்டிக்கேட்டுவிட்டு ஒரு அசாதரண சந்தர்ப்பத்தில் உயிரைத் துறக்கிறார். அதற்கு பிறகு பாலன், மெதுமெதுவாக தன்னுடைய, தன் இன மக்களின் நிதர்சனத்தை உணர்கிறான். சுரேந்தரனிடம் தான் மாற விரும்புவதாகவும். அந்த உறவுக்காரர்களின் நிலங்களை விட்டுவிடச்சொல்லியும் கேட்டுக்கொண்டு அம்முதலாளியிடமிருந்து வெளியேற நினைக்கிறான். இப்படியான ஒரு வேளையில் முதலாளிகளால் திட்டமிடப்பட்ட ஒரு விபத்து பாலனின் உயிரைப் பறித்துவிடுகிறது. இப்பொழுது பாலனின் இடத்தில் அவனின் தம்பி கங்கா இடம்பெயர்கிறான். கங்கா பாலனைப் போலல்லாது இன்னும் அதிக மூர்க்கமான குணத்தையுடையவன். தனது நண்பன் கிருஷ்ணா அனிதாவிற்கு இடையிலான காதலை அவன் அறிந்திருந்தாலும். அனிதாவை அவன் கையகப்படுத்தவே நினைக்கிறான். வேறோரு சந்தர்ப்பத்தில் அந்த விருப்பத்தை நிறைவேற்றியும் கொள்கிறான். கிருஷ்ணா மும்பைக்கு இடம் பெயர்கிறான். காலங்கள் உருண்டோட கிருஷ்ணா நடுத்தர வயதில் இருக்கும் பொழுது கங்காவிடமிருந்து அவனுக்கு ஒரு அலைபேசி அழைப்பு வருகிறது. அதில் அனிதாவிற்கும் உனக்குமான கனவை நான் சிதைத்து விட்டேன் நீ வந்து அவளை அழைத்துச் செல் எனவும் தன்னை சாவு துரத்துகிறது என்றும் அரற்றுகிறான். பிறிதொரு சமயத்தில் வேறோர் அலைபேசி அழைப்பின் போது சில அசாதரண சத்தங்களினூடே அவனின் குரல் துண்டிக்கப்படுகிறது. அதன்பின் கிருஷ்ணா கங்காவைத் தேடி மறுபடியும் கொச்சின் வருகிறான். அந்த அலைபேசி அழைப்பிற்கு பிறகு கங்கா மாயமாகியிருக்கிறான். அவனுக்கு என்னவானது என்கிற  கிருஷ்ணாவின் தேடலினூடே பாலன்,பாலனின் அப்பா, பாலனின் தாத்தா, கங்கா, அனிதா, கிருஷ்ணா உள்ளிட்ட அம்மண்ணின் அசல் மனிதர்களின்  வாழ்வியலும், கம்மட்டிபாட முதலாளிகளால் நிகழ்த்தப்பட்ட சூழ்ச்சிகளும், துரோகங்களும், நான்லீனியர் திரைக்கதையாக திரையில் அரங்கேறுகிறது. 

கம்மட்டிபாடத்தை பொறுத்த வரையிலும் பாலன்,கங்கா ஆகிய இருபாத்திரங்கள்தான் படத்தின் பிரதானப் பாத்திரங்கள். இந்த பாத்திரங்களில் நடித்திருக்கும் மணிகண்டன் ஆச்சாரி மற்றும் விநாயகன் எனும் நடிகர்களின் நடிப்பும், உடல்மொழியும், அத்தனை இயல்பானதாக படத்தில் வெளிப்பட்டிருக்கிறது. இதில் விநாயகம் என்பவர் தமிழ்சினிமாவிலும் சில படங்களில் நடித்தவராவார். மலையாள சினிமாவின் முன்னனி நாயகனாக இருந்தபொழுதும் இதுபோன்றதொரு மூன்றாம் இட முக்கியத்துவமுடைய பாத்திரத்தில் நடித்த துல்கர் சல்மானின் துணிவு அவருக்கிருக்கும் மாற்று சினிமா மீதான விருப்பத்தையே காட்டுகிறது. மலையாள சினிமாக்களில் புதிய அலை இயக்குனர்களில் ஒருவரான ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான ராஜீவ்ரவி அவர்களின் மூன்றாவது திரைப்படம் இது. கொச்சி எனும் நகரத்தின் மீது இவருக்கிருக்கும் பெருங்காதலை இவரது முதல் திரைப்படமான அன்னயும் ரசூலும் திரைப்படத்தின் ஒவ்வொரு ப்ரேமிலும் நாம் பார்க்கலாம். அந்த நகரத்தின் மீதான அதே பெருங்காதலுடன் அவர் கம்மட்டிபாடத்தையும் மிக நேர்த்தியாக படைத்திருக்கிறார். 

"நீ ஆகாசத்தில் தாமசிக்குன்னுவென்னு ஞான் அறிஞில்லா ஆசானே" எனத் தங்கள் நிலங்களை சூறையாடி வானுயர கட்டிடங்களில் வசிக்கும் முதலாளிகளை இரைஞ்சி கெஞ்சிக் கொண்டிருக்கும் பூர்விக மனிதர்களின் வாழ்வியலை இரத்தமும் சதையுமாக உயிர்பித்த கதையாக,  விளிம்புநிலை மனிதர்களைச் சுரண்டி  முதலாளிகளால் கட்டமைக்கப்பட்ட கான்க்ரீட் காடுகளே நகரம் என்கிற உண்மை கதையாக வெளிப்பட்டிருக்கும் கம்மட்டிபாடம், எல்லா நகரங்களுக்கும் பின்னிருக்கும் எளிய மனிதர்களின் கருப்பு சரித்திரங்களை காலம் முழுதும் நினைவுறுத்தக்கூடிய ஓர் ஆகச்சிறந்த படைப்பாகவும், உலகதரத்தில் வெளிப்பட்ட இந்தியசினிமாவின் பெருமைமிகு படைப்புகளில் ஒன்றாகவும், வரும் காலம் முழுவதும் இருக்கப்போகிறது என்பது இப்படத்தின் தனித்தச் சிறப்புகளில் ஒன்று. 


- கர்ணாசக்தி. 

Saturday, September 3, 2016

குற்றமே தண்டனை - ஓர் தத்துவார்த்த விசாரணை




உலகப்புகழ் பெற்ற தத்துவார்த்த திரைப்படங்களான ரஷமோன்,ஸ்ப்ரிங் சம்மர் பால் விண்டர், போன்ற திரைப்படங்களின் வரிசையில் தமிழின் முதல் தத்துவார்த்த சினிமாவாக வெளிப்பட்டிருக்கிறது குற்றமே தண்டனை. ஒரு கொலையைத் தொடர்ந்து படத்தின் மையக் கதாபாத்திரம் எடுக்கும் அத்தனை முடிவுகளையும், அப்பாத்திரத்தையும், குறுக்கு விசாரணைக்குட்படுத்தி முடிவெடுக்கச் செய்யும் முழுபொறுப்பும் பார்வையாளர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் அரிய முயற்சியைக் கொண்ட இந்த அற்புத திரைப்படம், உலகசினிமா எனும் கலைப் படைப்புகளில் தமிழ் மொழி சார்பாக பிரவேசித்த அசுரப்பாய்ச்சல்.

தஸ்த்தாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலின் தலைப்பை சிறு மாறுதலுக்குட்படுத்திய அச்சிந்தனையே படத்தை தலை நிமிரச்செய்வதோடு. அந்த தலைப்பு மாறுதலைச் சமன் செய்திருக்கும் கதைப்புலமும், பாத்திர மனவேட்கைளும், அவற்றின் முடிவுகளும், சொல்லவந்ததைச் பொளீரெனச் சொன்ன படைப்பு நேர்த்தியும், என் பூரண திருப்திகரமான ஒரு படைப்பை தரிசித்த உணர்வை தந்ததிற்காக, ஏற்கனவே சிகரங்களில் உட்கார்ந்திருக்கும் சில (நாடக) இயக்குனர்களை கடாசித்தள்ளிவிட்டு கேள்வியெழுப்பும் பழமைவாதிகளுக்கு எந்த பதிலையும் சொல்லாமல் இயக்குனர் மணிகண்டனை அங்கமர்த்தி விடலாம்.

தமிழ் சினிமாவிற்கு இயக்குனர் மணிகண்டன் தந்த காக்காமுட்டை பூங்கொத்து எனில், குற்றமே தண்டனை ஒரு பூந்தோட்டம். இளையராஜாவின் இசை அந்தப் பூந்தோட்டத்தில் பொழிந்த சாரல் மழை.

Wednesday, June 29, 2016

சொற்கள்

கடவுளர்களால் முலாம் பூசப்பட்டு 
வந்து விழுந்த இந்த சொற்களை
பொறுக்கி எடுத்துக்கொள்ளுங்கள்

எதுவாக வேண்டுமோ
அதுவாக மாற்றிக்கொள்ளுங்கள்

இடத்திற்கேற்ப உருமாற்றி
உபயோகித்துக் கொள்ளுங்கள்

முடிந்தமட்டும் நிதானமாக கையாள வேண்டும் 
எனும் ஒரேயொரு கோரிக்கையை 
மட்டும் நினைவில் கொள்ளுங்கள்

ஒருவேளை நீங்கள் இந்த
சொற்களின் வெளிப்புறம்
கரையுமளவு கையாள நேர்ந்தால்
அதில் வெளிப்பட்டு விடக்கூடும்
கடவுள் எனும் பைசாசத்தின் மூர்க்கம்.

- கர்ணாசக்தி

காலிப் பை


பிறந்ததிலிருந்து கைகளுக்குள்ளாகவே இருந்த மகளை அவளுக்கு முற்றிலும் அறிமுகமில்லாத ஒரு பள்ளிக் கட்டிடத்திற்கு நடுவே கல்வியின் பொருட்டு அமர்த்திவிட்டு வந்த அந்த முதல்நாளின் தவிப்பை போலவே இருந்தது பள்ளி சென்றுவர அவளை தனியார் வேனில் ஏற்றிவிட்ட இந்த முதல்நாளும்.

அவள் எல்.கே.ஜி, யு.கே.ஜிக்காக வீட்டிற்கு அருகிலேயே இருந்த பள்ளிக்கு சென்றுவந்து கொண்டிருந்த பொழுதெல்லாம் முதல் மூன்று மாதங்களைத் தவிர பெரிதாக வேறெந்த தவிப்பும் ஏற்படவில்லை. வீட்டிலிருந்து ஒரு 6 கி.மீ.க்கு அப்பால் உள்ள நகரின் சிறந்த பள்ளியில் அவளுக்கு ஒன்றாம் வகுப்பு சீட் கிடைத்து தொலைத்ததில் இருந்து வந்தது வினை.

எத்தனை வேலை இருந்தாலும் டிமிக்கி கொடுத்துவிட்டு பறவை தன் குஞ்சைக் கவ்விக்கொண்டு போவதைப் போல பள்ளியில் கொண்டு போய் விட்டுக் கொண்டும், அழைத்துக்கொண்டும் வந்து கொண்டிருந்தேன். பள்ளிக்கு போக முடியாத சமயங்களிலும் வெட்டியாக இருந்த மச்சினனை அனுப்பி அழைத்து வந்து கொண்டிருந்தேன். மச்சினனுக்கு திடீரென வேலை கிடைத்து விட்டதாலும். எனக்கு மிகச் சரியாக பள்ளி விடும் நேரங்களில் வேலை வருவதாலும் வேறு வழியின்றி தனியார் வேனின் உதவியை நாட வேண்டியதாயிற்று.

தனியார் வேனின் நம்பரையும், ஓனர், டிரைவர், என இருவரின் நம்பரையும் என்னுடைய மொபைலில், மனைவியின் மொபைலில், பதிவு செய்ததோடு தனியாக ஒரு டைரியிலும் எழுதி வைத்துக் கொண்டோம். பத்தாததற்கு அந்த வேனில் வந்துபோகும் மற்றொரு மாணவனின் அப்பா நம்பரையும் வாங்கி பதிவு செய்து கொண்டோம். வேனில் இருந்து எப்படி இறங்க வேண்டும், மற்ற மாணவர்களுக்காக வேன் காத்திருக்கும்போது வேனில் இறந்து இறங்கிவிடக்கூடாது என ஒன்றாம் வகுப்பு படிக்கும் மகளிடம் திரிஷ்யம் மோகன்லால் கணக்காக ஓராயிரம்முறை டியூசன் எடுத்து, டிரைவரிடம் அழாத குறையாக பத்திரமா பாத்துக்குங்கன்ணே என ஒன்பாதாயிரம் முறை ரிக்வெஸ்ட் கொடுத்து எல்லாம் முடிந்து முதல்முறையாக அவள் தனியார் வேனில் பள்ளிக்கும் சென்று விட்டாள்.

இனியெல்லாம் இப்படித்தான், எல்லாம் நல்லபடியாக நடக்கும், அவள் வளர்கிறாள், கவலைப்படாதே, என மனம் தனக்குத்தானே பல்வேறு ஆறுதல்களையும், சமாதானங்களையும், வழங்கிக் கொண்டே இருந்தாலும், 

என் டூவீலரின் முன்டேங்க் மட்டும் குட்டி இல்லாத கங்காருவின் காலிப்பையாட்டம் துருத்திக்கொண்டே இருக்கிறது.

Tuesday, June 28, 2016

சாய்ராத்: அடங்க மறுக்கும் அன்பு

                                           

சாய்ராத் - கிட்டத்தட்ட இயக்குனர் பாலாஜி சக்திவேலின் காதல் திரைப்படம்.
இரண்டுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது. கிட்டத்தட்ட அதே கதை என்றுகூட சொல்லலாம். ஆயினும் சாய்ராத் தமிழ் சினிமாக்களைப்போலல்லாமல் கதை மாந்தர்கள் இன்ன இன்ன சாதிகள் என தெளிவாக முன்வைக்கிறது. இந்த சாதியினர் அந்த ஊரில் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதை சம்மட்டியால் அடித்து சபைக்கு நடுவே காட்டுகிறது,

சாத்தியமில்லாத கற்பனை மூட்டைகளுடன் திரையில் ஒளிரும் வெற்றுக் கதைகளைக் காட்டிலும் நிதமும் நாம் அனுபவித்து வரும் சமூகத்தைப் பிரதியெடுக்கும் மண்ணின் கதைகளுக்கு அளப்பறியா வலிமையுண்டு. அவை இச்சமூகம் குறித்து கேள்வியெழுப்பாது மூளையில் புதைந்து போயிருக்கும் இயலாமைகளை மீட்டுருவாக்கம் செய்யும், மீண்டும் திமிறி கேள்வியெழுப்பச் சொல்லும், பதில்களைத்தேடச் சொல்லும். வழக்கம் போல கிடைக்காத பதில்களுக்காக கூனிக் குறுகி தனிமையில் அழச்செய்யும். பதில் தெரிந்த சூத்திரதாரிகள் எந்தப்புள்ளியிலாவது மானுடத்தின் இயல்பை சொல்லும் இந்த நிழல்களின் பிரதிபலிப்பை கண்டு நிஜங்களின் உண்மைகளைப் புரிந்து கொள்ள மாட்டார்களா என ஏங்கச்செய்யும். இவையனைத்தையும் ஒன்றுவிடாமல் திரைப்பிரதியின் மூலம் நிகழச் செய்கிறது மராத்தியி மொழியில் வெளியாகிருக்கும் இயக்குனர் நாக்ராஜ் மஞ்சுலேவின் சாய்ராத் திரைப்படம்.

மராத்திய மொழியில் சாய்ராத் எனில் காட்டுத்தனமான,கட்டுப்பாடுகளற்ற, எல்லையற்ற,முரட்டுத்தனமான, என்கிற ரீதியிலான தமிழ்வார்த்தைகள் கிடைக்கிறது. இன்னும் நெருக்கமாக புரிந்து கொள்ள அடங்கமறுக்கும் என வைத்துக்கொள்வோம். உண்மையில் எல்லோருக்குள்ளும் பொங்கிய, பொங்கப்போகும், பதின்ம வயதுக் காதல்கள் அத்தகைய இயல்புடையவைதான். உள்ளத்தில் புகுந்துப் புறப்படும் காதலின் இடையில் எது தடையெற்படுத்தினாலும் தூக்கியெறிந்து போகும் தன்மையுடன்தான் அது உருவாகிறது. அது இயல்பிலேயே அத்தகைய தன்மையுடன் தான் பிறக்கிறது, வளர்கிறது. வர்கம், சாதி, என எதையும் பொருட்படுத்தாத மானுடத்தின் பொதுவுடமை புரட்சி அது. அத்தகைய புரட்சி இந்தத் திரைப்படத்தில் மகாராட்டிரத்தின் ஒரு கிராமத்தில் மீன்பிடி தொழில் செய்துவரும் பர்ஷியா (எ) ப்ரஷாந்த் காலே எனும் தலித் இளைஞனுக்கும். அதே ஊரின் உயர்சாதி நிலக்கிழார்களான பாட்டீல் சமூகத்தைச்சார்ந்த அர்ச்சி (எ) அர்ச்சனாவுக்கும் இடையில் நிகழ்கிறது.

கல்லூரி பேராசியரை கன்னத்தில் அறைந்து விட்டு வந்த மகனிடம் நீ உன் தாத்தனைப் போலவே இருக்கிறாய் என பெருமைப்படும், புகார் சொல்ல வந்த பேராசியர்களிடம் புது பேராசிரியருக்கு எங்கள் சாதி பையன்களை அறிமுகம் செய்து வையுங்கள் எனச் சொல்லி வாயடைக்க வைக்கும், சாதிப்பெருமை மனிதர்கள் நிறைந்த அந்த ஊரில் எல்லையற்ற அன்பும்,நேசமும், கொண்ட காதலர்களுக்கு என்னென்ன எதிர்வினைகள் நிகழுமோ அது அத்தனையும் நிகழ்கிறது. எல்லா வீட்டு ஆதிக்கசாதி  பெருங்காதல் யட்சிகளைப்போலவே அர்ச்சி அவையனைத்தையும் உடைத்துக்கொண்டு பர்ஷியாவுடன் ஊரைவிட்டு  வெளியேறுகிறாள்.

இதற்குபிறகு இரண்டு தரப்பைச்சார்ந்த  காதலர்களுக்கும், சமூகத்திற்குமான யதார்த்தத்தையும், இழப்பீடுகளையும், சாய்ராத் முன்னிறுத்துகிறது அதில் மிக முக்கியமாக வீட்டை விட்டு வெளியேறிய ஆதிக்கசாதிப் பெண்களின் எல்லையற்ற சமரசத்தை, எப்போதும் பிறந்த வீடு குறித்த வாஞ்சையை,  தகப்பனின், தாயின், தமயனின், அருகாமையை வேண்டும் ஏக்கத்தை, எல்லாவற்றையும் பழைய நிலைக்கு மாற்றி விட முடியும் என்கிற அப்பாவித்தனமான நம்பிக்கையைப் பேசியதோடு அப்படி வாழ்ந்த/மறைந்த எண்ணற்ற  ஆதிக்கசாதிப் பெண்களின் ஒட்டுமொத்த நிஜத்தையும் சாய்ராத் பிரதிபலிக்கிறது. நேரெதிராக எதிர்புறத்தில் ஆதிக்கசாதி மனிதர்கள் பெண்களின் இந்த அடிப்படை இயல்பை ஒருபோதும் புரிந்து கொள்வதே இல்லை என்கிற உண்மையையும் படம் உரக்கப்பேசுகிறது.

அன்பை மறந்து சாதியையும் குலப்பெருமையையும் மட்டும் சுமந்து கொண்டிருக்கும் பெற்றோர்களுக்கு மகள்களாக பிறந்த பாவத்தை தவிர வேறெந்த பாவமும் அறியாத தேவதைகளுக்கும், பிறப்பை தேர்ந்தெடுக்காத பாவத்தைத்தவிர வேறெந்த பாவமும் அறியாத தேவதன்களுக்கும் இந்த நோய்ச்சமூகம் தரும் பரிசு குறித்த உண்மையை படத்தின் இறுதிக்காட்சிகளில் ஒரு பெரும் மெளனத்துடன் ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். அந்த இறுதிக் காட்சியின் போது  நீளும் அந்த நீண்ட மெளனத்தில் பார்வையாளர்களின் (மனிதத்தன்மை கொண்ட) மனசாட்சிகள் இந்து மதம் கட்டியெழுப்பி காப்பாற்றிவரும் சாதிய அமைப்பின் மீது எச்சில் உமிழும் எதிரொலிகளை உணரவேண்டுமா?

சாய்ராத்தைப் பாருங்கள்.

தோழமையுடன்
கர்ணாசக்தி

இக்கட்டுரையை மின்னம்பலத்தில் வாசிக்க https://minnambalam.com/k/1463875253

நாகராஜ் மஞ்சுலேவின் பறவைகள்


மிகச்சிறந்த செய்நேர்த்தியோடு வெளியான ஒரு படைப்பும் அதன் வீச்சும் பார்வையாளனை தொடர்ந்து அப்படைப்பு குறித்து அலசச் செய்வதோடு மென்மேலும் அதன் சிறப்பம்சங்கள் என்னென்னவென ஆராய கைப்பிடித்தும் கூட்டிச் செல்கின்றன. சமீபத்தில் பார்த்த திரைப்படங்களில் நாகராஜ் மஞ்சுலேவின் சாய்ராத் அத்தகைய படைப்புசார் ஆராய்ச்சிகளை தொடர்ந்து கோரிக்கொண்டே இருக்கின்றன.

பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கிய சாய்ராத்தில் நான் குறிப்பிட விரும்பும் ப்ரத்யேக சிறப்பம்சம் என்னவெனில், கால்ஷீட் ஏதும் வாங்காது ஒரு பெரும் பறவைக் கூட்டத்தை படத்தில் நடிக்க வைத்த இயக்குனர் நாகராஜ் மஞ்சுலேவின் நுட்பத்தைதான். இவரின் முந்தைய திரைப்படமான பன்றியின் ஆரம்ப காட்சியே ஜாப்பையா பறவை ஒன்றை தொடர்வதாகத்தான் தொடங்கும். கவனித்திருக்கிறீர்களா? படத்தின் நாயகனான ஜாப்பையா நாயகிக்கு ஒரு பறவையயை பிடித்து பரிசளிக்கும் வேட்கையுடன்தான் அதில் வெளிப்படுவான். அந்த பறவைகளை தொடரும் எண்ணவோட்டம் முழுக்க முழுக்க நாகராஜினுடையது என்பது சாய்ராத்தை அலசும் போது மெதுவாக புரியவருகிறது. அவரது இரண்டாவது திரைப்படமான சாய்ராத்திலும் நாகராஜ் பறவைகளை கதையோட்டத்துடன் பயணிக்கும் முக்கியமான குறியீடுகளாக கையாண்டிருக்கிறார்.

சாய்ராத்தில் மொத்தமாக 5 காட்சிகளின் பின்னனியில் பறவைகள் அவற்றுக்கே உடைய தன்னியல்புகளோடு வருகின்றன. 

காட்சி 1,





நாயகனால் அதுவரை பார்க்க முடியாத நாயகி ஊர் பொதுக்கிணற்றுக்கு வந்திருக்கிறாள். இதை அறிந்த நாயகனின் நண்பன் நாயகனிடம் இதைச்சொல்ல அவனைத் தேடிப்போகிறான். நதியின் நடுவில் படகில் நின்றிருக்கும் நாயகனிடம் நாயகி வந்திருப்பதாக உரக்கக் கூறுகிறான். நாயகனுக்கு எதுவும் காதில் விழவில்லை அர்ச்சி எனும் நாயகியின் பெயரைத்தவிர. அவளின் பெயரைக் கேட்ட நொடியில் எதையும் யோசிக்காது சட்டென நதியில் குதித்து நண்பணை காண பெரும் இசையின் பின்னனியில் நதியில் நீந்தி வருகிறான். அதே நதியில் எதொவொரு குறுகுறுப்புடன் நிறையப்பறவைகள் நதியினைத் தொட்டுத்தொட்டு பறந்து விளையாடுகின்றன. பறவைகளில் அதே மனநிலையில் நாயகனும் நீந்தியபடி வந்துகொண்டிருக்கிறான்.

காட்சி 2,

                                             


அதுவரை காணாத நாயகியை நாயகன் ஒரு நெகிழ்ச்சியூட்டும் ஒரு வழியில் கண்டடைந்து ஒருசில வார்த்தைகளை பேசிவிட்டும், நேருக்கு நேராக அவளின் கண்களை தரிசித்துவிட்டும், கிணற்றிலிருந்து பெரும் பரவசத்துடன் வெளியேறுகிறான். 

"இந்த பிரகாசமான காதல் என்னும் தீபத்தை ஏற்றினேன். என் இரவுகள் பகல் போல் ஒளிர்கின்றன, நட்சத்திரங்களை அழைத்து இரவு முழுவதும் பேசிக் கொண்டிருக்கிறேன், தூங்கினால் கனவுகள் என்னை எழுப்புகின்றன,
(மனதில் ) பறக்கும் பறவைகள் முழு வானத்தையும் அணைத்துக் கொள்ள செய்கின்றன" என நாயகனையொத்த பரவசத்துடன் பாடல் ஒலிக்கிறது. அதே சமயம் நாயகன் நடனமாடியபடி இருக்கும் அந்த சோலைக்கு மேலான மாலை நேரத்து வானத்தில் பறவைகளும் நாயகனைப் போலவே மிகச்சிறந்த நடனத்தை அளித்தபடி பறந்தபடி இருக்கின்றன.

காட்சி 3,




நாயகனும், நாயகியும், ஒருசேர காதலில் விழுந்த பிறகு முதன் முறையாக தனிமையில் சந்தித்துக் கொள்கின்றனர். நாயகிக்கு சொந்தமான தோப்பில் அக்காட்சி நிகழ்கிறது. இருவரும் இணைந்து பேசியபடி சில அடிகள் நடக்கின்றனர். அவர்களுக்கிருவருக்கும் இடையில் ஒரு புதுவித அனுபவத்தின் அலை அடித்தபடி இருக்கிறது. மெதுவாக எட்டுவைத்து சில அடிகள் நடக்கின்றனர். காமிரா காதலர்களுக்கு பின்னால் இருந்தபடி அவர்களுக்கு முன்னே உள்ள வானத்தை காட்டுகிறது. ஆச்சர்யம் என்னவெனில், அங்கு ஒரு சிறு பறவைக்கூட்டம் சின்னதாக அலைகளைப்போல மேலும் கீழுமாக வட்டமடித்து பறந்தபடி இருக்கின்றன. 

காட்சி 4,




கல்லூரி விடுமுறையினால் சந்திக்க முடியாத நாயகனும் நாயகியும் அலைபேசியில் தொடர்பு கொள்கின்றனர். நாயகன் நாயகியிடம் உன்னைப் பார்த்து மூன்று நாளாகிவிட்டது எனக்கூறுகிறான். அவள் ரசித்துக் கொண்டே மூன்று நாட்கள்தான் ஒரு வருடம் அல்ல என்கிறாள். நாயகன் உன்னைக்காணாத ஒவ்வொரு நொடியும் எனக்கு வருடங்கள்தான் என்கிறான். இந்தக்காட்சியின் போது நாயகன் நதிக்கரையில் அமர்ந்திருப்பான். அவனுக்கு பின்னால் உள்ள இளஞ்சிவப்பு வானத்திலுள்ள பறவைகள் இரு குழுக்களாக பிரிந்து பறந்தபடி இருக்கின்றன. 

காட்சி 5,





சாதிவெறி மனிதர்களால் தங்கள் காதலுக்கு பெரும் எதிர்ப்பு நேரிட நாயகனும் நாயகியும் ஊரைவிட்டு வெளியேறி ஒரு பெரும் நகரத்தில் தஞ்சமடைந்து பெரும் போராட்டங்களை எதிர்க்கொண்டு வாழ்க்கையை சுழியத்திலிருந்து ஒரு நல்லநிலைக்கு மாற்றியிருக்கிறார்கள். அவர்கள் பிறந்த கிராமத்தை போலல்லாது நகரம் அவர்களது வாழ்வை சுமூகமாக நகரச் செய்திருக்கிறது. எல்லாம் இயல்பாக போய்க்கொண்டிருக்கும் ஒரு காலை வேளையில் நாயகி தன் குழந்தையுடன் வாசலில் கோலமிட்டுக் கொண்டிருக்கிறாள். பக்கத்து வீட்டுப் பெண் குழந்தையை கடைக்கு அழைத்து செல்வதாக நாயகியிடமிருந்து வாங்கிச் செல்கிறாள். அவர்கள் சென்ற பின் நாயகி மீண்டும் வாசல் கோலத்தில் லயிக்கிறாள். அப்பொழுது நாயகிக்கு பின்னணியில் நகரக் கட்டிடங்களுக்கிடையே காட்டப்படும் வானத்தில் எதோ ஒரு சத்தத்தை கேட்டு பயந்து பறப்பதைப் போல் சில பறவைகள் படபடக்கும் ஓசையுடன் பறக்கின்றன. அடுத்த நொடி நாயகி அர்ச்சியின் சொந்தக்காரார்களாகிய நான்கு ஆதிக்கசாதி மனிதர்கள் அர்ச்சியின் வாசல் கோலத்தின் மீது இருள் (நிழல்) பரப்பியவாறு நிற்கிறார்கள். சற்றுமுன்பு பறந்து சென்ற பறவைகளையொத்த படபடப்புடன் அர்ச்சி அவர்களை எதிர் கொள்கிறாள்.


மேற்கண்ட இந்த ஐந்து காட்சிகளிலும் அசல் பறவைகளும், மனிதப் பறவைகளாக நாயகனும், நாயகியும்,  கிட்டத்தட்ட ஒரே நிலையில்தான் இருக்கின்றார்கள். இங்கேதான் தன் கதையை, கதைமாந்தர்களை, இயற்கையுடன் ஒன்றிணைத்து விருந்து படைத்த இயக்குனனும்,கவிஞனும்,காட்சி ஓவியனுமாகிய, நாகராஜ் மஞ்சுலே எனும் படைப்பாளியை நாம் வியந்து பாராட்ட வேண்டியதாக இருக்கிறது.

-கர்ணாசக்தி 

Saturday, April 16, 2016

கலகக்காரனின் குரல்

சினிமா வந்தபிறகு நாடகம் கொஞ்சம் கொஞ்சமாக தன் பொலிவை இழந்ததைப்போன்ற காலகட்டம் சலனப்படங்களின் வருகையால் மெளனப் படங்களுக்கும் ஏற்பட்டது. அதுவரை ஒளியை மட்டும் தரிசித்து வந்த மக்களுக்கு ஒளியும் ஒலியும் சேர்ந்து வெளியான சலனப்படங்களை காண்பதில் பெரும் ஆர்வம் ஏற்பட அவர்கள் தொடர்ந்து மெளனப்படங்களை புறக்கணிக்க தொடங்கினார்கள். காட்சி ஊடகத்தின் வளர்ச்சியை ஆராதித்து சலனப்படங்களை கொண்டாடத் தொடங்கினார்கள். இத்தகைய காலகட்டத்தில் மெளனப்படங்களின் தயாரிப்பாளர்களும், அதன் படைப்பாளிகளும், பெரும் பாதிப்பிற்கு உள்ளானார்கள். அவர்களில் மெளனப்படங்களின் முடிசூடா அரசனாகிய விளங்கிய சார்லி சாப்ளினும் ஒருவராக இருந்தார். 

இளமைப்பருவம் தொட்டு, பரமபத பாம்புகளை மட்டுமே அவருக்கு பரிசளித்துக்கொண்டிருந்த வாழ்கை, அவருக்கு மெளனப்படம் எனும் ஏணிக்காலத்தை சிறிதுகாலம் கொடுத்துவிட்டு பின் திரும்பவும் சலனப்படங்களின் மூலம் திரும்பவும் பாம்புக்காலங்களை பரிசளித்தது. சார்லி தொடர்ந்து இறங்குமுகம் கண்டார். காலியான அரங்கங்களில் ஆங்காங்கே எதோ வெறுப்புடன் தனித்து அமர்ந்திருந்த ஒரு சிலருக்காக மட்டும் உலகப்பெரும் நகைச்சுவை நடிகரின் திரைபிம்பம் தன் காமொடிகளை நிகழ்த்திக் கொண்டிருந்தது. பின்னர் மக்களின்,அரங்க முதலாளிகளின், தொடர்ச்சியான நிராகரிப்புகளுக்குப் பின்னர் சார்லி மெளனப்படங்களை தொடர்ந்து எடுக்கும் தன் முடிவைக் கைவிட்டார். பின்னர் சிலகாலம் கழித்து சார்லி சாப்ளினின் முதல் சலனப்படம் வெளியானது. 

"தி கிரேட் டிக்டேட்டர்" சார்லி சாப்ளினின் முதல் சலனப்படம்,அரசியல் பேசும் சினிமாக்களின் பிள்ளையார் சுழி, உலகப்பெரும் சர்வாதிகாரியை அவரின் சமகாலத்திலேயே பகடி செய்து எதிர்விமர்சனம் வைத்த திரைப்படம், என பல சிறப்புகள் இந்த திரைப்படத்திற்கு உண்டு. ஹிட்லரின் கோரமுகத்தை உலகம் தரிசித்துக்கொண்டிருந்த வேளையில் மிகுந்த துணிச்சலுடன், அவரின் பாசிச சிந்தனைகளை, அபிலாஷைகளை, நேர்த்தியாக பகடி செய்திருந்தது கிரேட் டிக்டேட்டர். படத்தில் சார்லி இரு வேடங்களை ஏற்றிருந்தார் ஒரு பாத்திரம் சர்வாதிகாரி ஹிட்லராகவும் மற்றொரு பாத்திரம் போருக்கு சென்ற முடிதிருத்தும் தொழிலாளியாகவும் நடித்திருந்தார். முடி திருத்தும் தொழிலாளி ஆள்மாறாட்ட குழப்பத்தால் சர்வாதிகாரியான கதை. (தமிழில் இந்தக்கதை உத்தமபுத்திரன், இம்சை அரசன் என பல பரிமாணங்கள் எடுத்தை நாம் இங்கே நினைவுக்கு நிறுத்தலாம்.) முடிதிருத்தும் தொழிலாளியான சார்லி சர்வாதிகாரியாக இடம்பெயர்ந்த பின் அதுவரை திரையில் ஒலிக்காமலிருந்த சார்லிசாப்ளின் எனும் அந்த கலகக்காரனின் குரல் திரைப்பிரதியின் வழியே முதன்முறையாக ஒலிக்கிறது. 

                                                       

" என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு ஆட்சியாளனாக இருக்க பிடிக்கவில்லை. அதுஎன் வேலையும் அல்ல, ஆட்சி செய்யவோ ஆக்கிரமிப்பு செய்யவோ எனக்குவிருப்பமில்லை. ஒரு பகுதி மக்கள் மீது வெறுப்பைக் கொட்டவோ என்னால்
முடியாது.எல்லாரையும் அன்பால் நிறைக்கவே நான் விரும்புகிறேன். இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கான இடமொன்று ஒன்று உள்ளது.

எல்லா வளங்களையும் செழிப்புகளையும் அனுபவிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு. ஆனால் நமது அறிவு நம்மை கடுமையான மனிதர்களாக மாற்றி விட்டது. ஒரு இயந்திரத்தைப் போல அன்பற்ற மனிதர்களாக வாழத்தூண்டுகிறது. சர்வாதிகாரிகளின் நோக்கத்திற்கு நீங்கள் பலியாகாதீர்கள்

நாம் வேகத்தை வளர்த்துள்ளோம்
ஆனால் நம்மை உள்ளே அடைத்துள்ளோம்
பெருவளம் கொழிக்கும் இயந்திரங்கள்
நம்மை போதாமையில் விட்டுள்ளன.
நமது அறிவு நம்மை வெறுப்புடையோராக்கியுள்ளது.
நமது கெட்டித்தனம் நம்மை
கடுமையானோராயும், இரக்கமற்றோராயும் ஆக்கியுள்ளது.

மிக அதிகம் சிந்திக்கிறோம்; மிகச் சிறிதே உணர்கிறோம்.
இயந்திரங்களை விடவும் நமக்குத் தேவையானது மனிதத்தன்மை.
கெட்டித்தனத்திலும் மேலாக நமக்குத் தேவையானவை
இரக்கமும், மென்மையும்.
இப்பண்புகளின்றி வாழ்க்கை வன்முறையானதாகும்,
யாவும் இழக்கப்பட்டுவிடும்.
………….
எனக்குச் செவி கொடுப்பவர்களுக்குச் சொல்கிறேன், தயவுசெய்து கேளுங்கள்

துயரப்படாதீர்கள்’ இத்துன்பம், இத்துயரம் பேராசைக்காரர்களால் வந்தது. அது பனிபோல் நீங்கிவிடும். மனித குலம் முன்னேறும் வேகத்தைக் கண்டு அஞ்சிக்குலை நடுங்கும் அற்பமனிதர்களால்தான் துன்பம் வருகிறது.

இனி மனிதர்களுக்கு இடையே உள்ள விரோதங்கள் மறைந்து விடும்; சர்வாதிகாரிகள் செத்து விழுவார்கள். மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட அதிகாரம் மக்களுக்கே திரும்ப வந்து சேரும். இந்த லட்சியத்துக்காக மக்கள் போரிட்டுப் பல தியாகங்கள் செய்கிறார்கள். அவர்கள் காப்பாற்றித்தரும் விடுதலை என்றுமே அழியாது!

எல்லாருக்கும் வேலை செய்யும் வாய்ப்பை வழங்கும் உலகாகும் அது. இளையவருக்கு எதிர்காலமும்,மூத்தோருக்கு பாதுகாப்பும் தரும் உலகை உருவாக்குவோம் என்று சொல்லித்தான் சர்வாதிகாரிகள் எழுகிறார்கள். அப்படி ஒன்று நடப்பதே இல்லை. பெரும் பொய் அது,அது அவர்களால் நடக்காது. ஜனநாயகத்தின் பெயரால் நாம் ஒன்று சேர்வோம்;புத்தம் புது உலகை படைப்போம் -

வீரர்களே! அடிமை வாழ்வுக்காகச் சண்டை போடுங்கள்! வெறுப்பு,பேராசை, பொறுமையின்மை ஆகியவற்றை கடந்த தேச எல்லைகளை துறந்த புத்துலகை உருவாக்க முயல்வோம் நாம். விஞ்ஞானமும் முன்னேற்றமும் மனித இனத்தை உந்தித்தள்ளும் ஒரு புது உலகத்துக்காகப் போரிடுவோம்! வீரர்களே, ஜனநாயகத்தின் பேரால் நாம் ஓரணி சேருவோம்!

ஹான்னா ! நான் பேசுவது உனக்கு கேட்கும் என்று நினைக்கிறேன். மேகங்கள் விலகி சூரியன் இருட்டை விரட்டும் பேரொளியோடு உதிக்கும் அந்த புத்துலகு. வெறுப்பு,பேராசை,மிருகத்தனங்களை கடந்து மனிதர் எழப்போகும் கருணை உலகம் அது. ஒவ்வொரு ஆன்மாவுக்கு சிறகு முளைக்கட்டும். அவன் பறக்கட்டும். அவன் வானவில்லை நோக்கிச் செல்வான். அந்தப் பயணம் அவனை நம்பிக்கையின் வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்லும். ஒளிமயமான மாட்சிமை மிகுந்த எதிர்காலம் உனக்கும் எனக்கும் நமக்கும் உரியதாகும். 

இதுதான் அந்தக்கலகக்காரனின் முதல் குரல். 

மக்களின் கலைஞனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். 

தோழமையுடன்
கர்ணாசக்தி



(நன்றி வசன மொழிபெயர்ப்பாளர் - திரு. பூ.கொ.சரவணன் சார் ) 

Friday, March 4, 2016

கிழக்கு பதிப்பகமும் அதன் உண்மை முகமும்



சேகுவேரா,மாவோ, போன்ற பெரும் போராளிகளின் வாழ்கையை எழுதி விற்று பிரபலமாகிய கிழக்குப்பதிப்பகமும் அதன் உரிமையாளரும் மத்தியில் தங்களுடைய பூர்விக அடையாளத்தின் கை ஓங்கியதும் தங்களது கம்யூனிச முகமூடியைக் கிழித்துக்கொண்டு, தங்களின் உண்மைமுகமான இந்துத்துவ முகத்தோடு வலம் வருவதை இப்போது நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். 
முற்போக்கு கம்யூனிச போர்வையில் பிரபலமாகிய இவர்களின் உண்மையான அஜெண்டா என்பது இந்து மதத்தை தமிழகத்தில் அறுதிப் பெரும்பான்மை மனங்களில் வார்த்தெடுப்பது மட்டுமேயாகும்.இந்த மொன்னை நோக்கத்திற்கு எதிராக இவர்களுக்கு பெரும் தலைவலி அளிக்கக் கூடிய இரண்டே தலைவர்களாக
இந்திய அளவில் அம்பேத்கரும், தமிழக அளவில் பெரியாரும், இருப்பதை ஜீரணிக்க முடியாமல் தங்களது கேவலமான சித்து வேலைகளை கிழக்கு பதிப்பகத்திற்கு கிடைத்த அடிமைகளைக் கொண்டு நிறுவ முயல்கிறார்கள். இந்துமத அநீதிகளைப் பொறுக்காது பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டுமே பிற மதத்தை தழுவுகிறார்கள். இந்தப்போக்கிற்கு எதிராக இந்துமதத்தில் இல்லாத புனிதத்தன்மையை இருப்பதாக கூறி அம்மக்களை திரும்ப அழைக்க அவர்களுக்கு தேவைப்படும் காரணம்தான் சமீபத்தில் அவர்கள் வெளியிட்ட மூன்று புத்தகங்கள்.

இந்துத்துவ அம்பேத்கர்.
அம்ப்பேத்கர் புத்தமதத்தை தழுவியது ஏன்?
தலித்துகளுக்கு பாடுபட்டதா நீதிக்கட்சி.

தான் இறக்கும்போது ஒருபோதும் இந்த கேடுகெட்ட மதத்தை சார்ந்தவனாக இருக்க மாட்டேன் என்று இந்து மதத்தை துப்பித்தூர வீசிவிட்டு புத்த மார்கத்தை தழுவியவரை மீண்டும் இந்துத்துவ அம்பேத்கராக்குவதன் மூலம். பிற மதத்தை தழுவிய ஒடுக்கப்பட்ட மக்களை திரும்பப் பெறும் கேடுகெட்ட சிந்தனையும், சுயமரியாதை இயக்கங்கள் தலித்துகளுக்கு பாடுபடாமல் இடைசாதிகளுக்கு மட்டும்தான் பாடுபட்டது என்பதை நிறுவுவதன் மூலமும் இவர்களது தெள்ளத்தெளிவான ஒரே குறிக்கோள் என்னவெனில் மதமாற்றங்களை தடை செய்து.. பிற மதத்தாரை இந்து மதத்திற்கு இழுத்து வருவது மட்டுமே. இதே அரசியல் காவிகள் வெளிப்படையாக தாய்மதத்திற்கு திரும்புங்கள் என வெட்கமின்றி அழைத்த அதே குயுக்திதான் பத்ரி,வெங்கடேசன் போன்ற இண்டலெக்சுவகள் மூலம் புத்தகங்களாக பரிணாமம் எடுத்து பல்லைக்காட்டுகின்றன.

த்தூவென புறக்கணிப்போம்.

Sunday, February 14, 2016

விசாரணை - தமிழின் முதல் பின்நவீனத்துவ சினிமா


"உலகில் பொய் மட்டுமே ஆட்சி செய்யும் போது உண்மையைச் சொல்வதே பெரும் புரட்சி" - ஜார்ஜ் ஆர்வெல்

தமிழ்த்திரை வரலாற்றில் தங்கப்பதக்கம் முதல் வரிசை வகுத்து வந்து கொண்டிருக்கும் சிங்கம் வரை காவல்துறை/காவலதிகாரிகள் வாழ்க்கை எனும் கதையம்சங்களோடு பெரும்பான்மையான சினிமாக்கள் வந்திருக்கின்றன. இவையனைத்தும் அந்த அமைப்பு மற்றும் அதன் அதிகாரிகளின் எல்லைதாண்டிய அதிகாரங்களை ஹீரோயிசமாக முன்னிறுத்தி காவல்துறை நம் நண்பன். குற்றவாளிகளுக்கு பகைவன் எனும் நவீனத்துவ மந்திரத்தை போற்றிப் பாதுகாத்து/ பறைசாற்றி பார்வையாளனுக்கு அளிக்கத் தவறியதே இல்லை. இத்தகைய எதிர்கேள்விகளற்ற திணிப்புகளிலிருந்து சற்றே மாறுபட்டு அந்த அமைப்பை கேள்வி/விமர்சனங்களுக்குள்ளாக்கும் படைப்புகளாக மகாநதி, கிருமி சினிமாக்களை பார்க்கலாம். ஆயினும் மகாநதியின் மையமுடிச்சும், கிளைக்கதையும், வேறு தளங்களிலும் பயணிப்பதால் அதை விலக்கிவிட்டு கிருமியை வேண்டுமானால் விசாரணைக்கு மிக நெருக்கத்தில் கொண்டு வரலாம். ஏனெனில் கிருமி எழுப்பும் கேள்வியும் விசாரணையின் முதல்பகுதி எழுப்பும் கேள்வியும் ஒன்றுதான். உண்மையில் காவல்துறை நம் நண்பனா? என்பதுதான் அது. கேள்வியெழுப்பதலோடு நின்றுவிடும் கிருமியிலிருந்து விசாரணை விலகிச்செல்லும் இடமாக நாம் கருதவும், பின் நவீனத்துவம் என முன்வைக்கவும் வலுவான காரணமாக இருப்பது விசாரணையின் இரண்டாம்பகுதி. இங்கேதான் இந்தப்படம் காவல்துறை எனும் அமைப்பை மேல்/கீழ் அகம்/புறம் என நாலாப்புறமும் சுற்றிச் சுழன்று அலசுகிறது

விசாரணையின் முதல்/இரண்டாம் பகுதியென மொத்தப்படமும் காவல்துறை எனும் அமைப்பின் அத்தனை நவீனத்துவத்தையும் கேள்விக்குள்ளாக்கி அங்கு அரசபயங்கரவாதம் என்பது என்ன? அதில் மெய்யான ஆதாயம் பெருபவர்கள் யார்? ஒடுக்கப்படுபவர்கள் யார்? அமைப்பின் அதிகாரங்களின் எல்லை எதுவரை? அதற்கு ஒரு சிக்கல் நேரிடின் அதிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ள யாரை/எதை எல்லாம் பலி கொடுக்க முனையும். மனிதம் சார்ந்த இயங்கியல் தன்மை என்பது அங்கு சாத்தியமா? இந்தப்பெரும் சிலந்திவலையில் சிக்குறும் எளிய மனிதர்களின் கதி என்னவாகும்? போன்ற பல்வேறு கேள்விகளையும் துடுக்குறச்செய்யும் பதில்களையும் படத்தில் நிகழ்த்தப்படும் இரண்டுவிதமான விசாரணைகள் மூலம் இத்திரைப்படம் முன்வைக்கின்றன. 

முதல் விசாரணையானது, 

நாதியற்ற,பொருளற்ற,அதிகாரமற்ற, எளிய மனிதர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறையின் மூலம் செய்திராத குற்றங்களை அவர்கள் தலையில் சுமத்தச் செய்து அதன் மூலம் தங்கள் சுயநலன்களை பூர்த்தி செய்துகொள்ளும் காவல் அமைப்பின் அதிகார செயல்பாடுகளை துல்லியமாக பட்டியலிடுகின்றன. கண்ணில் பட்ட வழிப்போக்க இஸ்லாமிய இளைஞனை அல்கொய்தாவுடனும், லஷ்கர் ஈ தொய்பாவுடனும் பொருத்திப்பார்க்கும், பொது-அதிகார புத்திகளையும், தமிழன் என்றால் விடுதலைப்புலி எனப் பொருத்திப்பார்க்கும் ஒன்றுபட்ட இந்திய தேசத்திம் அண்டை மாநில பொது-அதிகாரப்புத்திகளையும் பட்டவர்த்தனமாக முன்னிறுத்துகின்றன. காவல் நிலையம் எனும் அமைப்பில் சிக்கிக்கொள்ளும் எளிய மனிதர்கள் உள்நுழைந்த மறுவினாடி அவர்களின் முதல் கேள்விகளுக்கு எதிர்க்கொள்ளும் கட்டற்ற வன்முறையும், அவர்கள் தங்கவைக்கப்படும் இடமும், நடத்தப்படும் விதமும் என காவல்துறையின் வர்கபேத அணுகுமுறைகளையும் சமநிலையன்றி பிற்பாதியில் நிகழும் மற்றொர் விசாரணை மூலமும் புடம்போட்டு விளக்கிவிடுகிறது.

 இரண்டாவது விசாரணையானது, 

அதிகார வர்கத்தின் பணக்காவலாளியான, பணம்படைத்த, ஒரு மேல்த்தட்டு மனிதன் மீது நிகழ்வது, ஒற்றை அறையில் ஏர்கூலர்,கட்டில் ,மரியாதை என மிக மென்மையாக அம்மனிதனின் மீது தன்விசாரணையை துவங்குகிறது. முற்பாதியில் வந்த காவல் அமைப்பின் வர்க வேறுபாட்டு அணுகுமுறையை இங்கே விசாரணை எளிமையாக சொல்லி கடக்கிறது. அக்குற்றவாளி அதிகாரங்களுக்கெதிராக பேசிவிடக்கூடாது எனமுனையும் ஒரு சாரரும். எதாவது பேசியே ஆகவேண்டும் அப்போது பணத்தை தேத்திவிடலாம் என முனையும் மற்றொரு சாரரும், சிஸ்டத்தின் பரமபத சூதுக்களை அறியாமல் கடமையாக கண்விழித்து வேலை செய்யும் ஒரு சாரரும் (படத்தில் கோட்டாவில் வந்தவர்களென சுட்டப்படும்), இத்தனை அடுக்குகளின் நடுவில் ஏதுமறியாது எலிகளாக சிக்குண்டு கிடக்கும் ஒரு சாரரும் என ஒரேயொரு காவல் நிலையத்தில் குழுமிக்கிடக்கும் பல்வேறு மனிதர்களை மிகக் கூர்மையாக அடுத்தடுத்த காட்சி நகர்வில் அடுக்குகிறது விசாரணை. அந்த அமைப்பின் அதிகாரிகளுக்கு முழுக்க முழுக்க ஆதாயம் தேடித்தந்த ஒருவனாக இருந்தாலும் கூட அவனை ஜட்டியுடன் அமர்த்தவும். அடித்துக்கொல்லவும் செய்யும் என்ற பொளீர் உண்மைகளையும் பேசுகிறது. 

சமகால சம்பவங்களான ஆடிட்டர் தற்கொலை, ஏ.டி.எம். கொள்ளையர்கள் மீதான என்கவுண்டர். என பல இடங்களில் எந்த சமரசமுமில்லாது சுதந்திரமாக பல உண்மைகளையும் பேசியிருக்கிறது. காவல்துறை படுகொலைகள்,வன்முறைகள், என அரச பயங்கரவாதத்தை பெரும்பாலும் இரவுகளிலும், குறைந்த இருட்டிலும். கருப்பு வெள்ளை காட்சிகளிலும், படமாக்கியிருக்கும் உத்தியானது.. அத்தனை கோரத்தையும் இருண்மையில் வைத்திருக்கும் அந்த வன்முறையமைப்பின் பதிவுகள். காவல்துறை எனும் அமைப்பினில் நுழைந்தபின் ஒரு கொசுக்கடி கூட மரணவலியைத்தரும் தரவல்லது எனும் காட்சியும், இரண்டு துப்பாக்கி ரவைகளின் சத்தத்திற்கு பிறகு திரையில் மூழும் இருளில் நாம் வாழும் நாட்டின், வாழ்க்கையின்,அமைப்பின்,மீதான மொத்த குறுக்குவெட்டுத்தோற்றத்தையும் பரிசீலிக்க இறுதிக்காட்சியில் பார்வையாளர்களுக்கு அளித்த அந்த அரை நொடி அவகாசமும் விசாரணையை தமிழின் முதல் போஸ்ட்மாடர்னிச சினிமாவாக்குகிறது. 

அதிகாரவர்கத்தின் இட்டுக்கட்டிய கதைகளோடு செய்தித்தாள்களில் நாம் கடந்துவந்த காவல்துறை எனும் அமைப்பின் கைது சம்பவங்கள் மற்றும் லாக்கப்/என்கவுண்டர் மரணங்களுக்குப் பின்னிருக்கும் அரசியலை முதல் முறையாக காத்திரமாகவும் அதேசமயம் சுதந்திரமாகவும் திரையில் பேசியிருக்கும் முதல் படைப்பாளி என்பதோடல்லாமல், பொதுவுடமை நாடுகளில் கூட மறுக்கப்படும் எளியவர்களின் மனித உரிமைகளை மீட்டெடுக்க முனையும் சமூக அக்கறைமிகு படைப்பாளியாகவும், எல்லையற்ற அதிகாரங்களோடு அரச கூலிப்படையாக செயல்படும் ஒரு அமைப்பை போஸ்ட்மார்ட்டம் செய்து பொதுப்பார்வைக்கு வைத்து பெரும் கலகக்காரனாகவும். இயக்குனர் வெற்றிமாறன் அவர்களை விசாரணை முன்னிறுத்தியிருக்கிறது. 

இறுதியாக திரையில் வன்முறை அதிகமாக இருக்கிறது என சொல்லப்போகும் பொதுப்புத்திகளுக்கு நிஜத்தில் அந்த அமைப்பின் வன்முறை என்பது விசாரணை திரைப்படைத்தைக்காட்டிலும் மோசமானது. 

Wednesday, February 10, 2016

இறுதிச்சுற்று - செங்கிஸ்கானின் தமிழ்சினிமா

                                                                   

"ஐ" எனும் திரைப்படம் வெளியான சமயம். தமிழ்சினிமாவின் ஆதர்ச நடிகர்களின், இயக்குனர்களின், சினிமாக்களிலும். சமகால இயக்குனர்கள் ஷங்கர்,அமீர், முதல் "சதுரங்கவேட்டை" வினோத், வரையிலானவர்களின் சினிமாக்களிலும், எந்த பிரக்ஞையுமற்று , பொட்டை எனும் வார்த்தையை உலவவிட்டது பற்றியும், திருநங்கைகள் மற்றும் பெண்கள் பற்றிய மதிப்பீடுகள், கேலிச்சித்தரிப்புகளாக தமிழ்சினிமா சூழலில் எவ்வாறெல்லாம் வெகுஇயல்பாக புழங்குகிறது. என்பது பற்றியும் காட்சிப்பிழையில், லிவிங் ஸ்மைல் வித்யா தன் கட்டுரையில் எடுத்தியம்பி வெம்பியிருந்தார். அச்சினிமாக்களில் நேரிடையாக எந்தப்பங்கும் கொள்ளாதவன் என்றபோதும், அவை வெளியான சமயம் அதைக்கண்டு, வாய்மூடி ரசித்துப் பின் மறந்துபோன பார்வையாளன், என்ற ஒரே ஒரு குற்றவுணர்ச்சியே நீண்ட நாட்களாக அரித்துக்கொண்டு இருந்தது. போதாதக்குறைக்கு திரிஷா இல்லன்னா நயன்தாரா போன்ற குப்பைகள் தொடந்து வெளியாகி, பெரு வெற்றியடைந்த தமிழ்ச்சினிமா சூழலில் அந்தப் பார்வையாள குற்றவுணர்ச்சி இன்னுமின்னும் அழுந்த அரித்தபடி நீண்டு கொண்டிருந்தது. 

பெரும்பாலும் ஆண் இயக்குனர்களால், அவர்களது எண்ணங்களினால், கட்டமைந்த தமிழ்சினிமாவில் வந்த பெரும்பான்மையான திரைப்படங்கள் நாயகனை, அவனது போக்கை, வீரத்தை, காதலை, பறைசாற்றும் படங்களே.. வெகுசில சொற்ப சினிமாக்களே நாயகியை முன்னிறுத்தி வந்திருக்கின்றன. . சமகாலத்தை எடுத்துக் கொண்டோமேயானால் திரையரங்கிற்கு வரும் பெண்கள் சீரியலில் முடங்கிவிட்டதால், தியேட்டர்களை நிரப்பும் இளசுகளை மகிழ்விக்க எடுக்கப்படும், அண்மையத் திரைப்படங்களில் நாயகியின் சினிமா என்பது இன்னும் அகலபாதாளத்தில் சென்றிருக்கிறது. கிட்டத்தட்ட தொலைந்தும் போயிருக்கிறது/போயிருந்தது.

இப்படியான சூழலில் வந்த இறுதிச்சுற்று திரைப்படமும், அதன் மகத்தான வெற்றியும், இதுவரையிருந்த குற்றவுணர்ச்சிகளை நீக்கி, தமிழ் சினிமாவில் மீண்டும் நாயகியின் சினிமாவை மீட்டெடுத்திருக்கிறது. இச் சினிமா ஒருவகையில் விளையாட்டை மையமாக கொண்ட சினிமாவாக இருப்பினும். விளையாட்டில் சாதி,அரசியல், லாபிகளை விமர்சனம் செய்கிற சினிமாவாக இருப்பினும். இறுதிச்சுற்றில் நாம் முன்னிறுத்த வேண்டிய அம்சம் என்னவெனில் நாயகி ஆளுமையை.

இத்தனைக்காலம் கதாநாயகனின் வீரச் சண்டைக்கு, அவன் தெனாவெட்டுக்கு, உக்கிரத்திற்க்கு, மெனக்கெடலுக்கு, ஆர்பரித்து கைத்தட்டல் எழுப்பிய தமிழ்ச்சமூகம் இன்று இறுதிச்சுற்று நிகழும் திரையரங்கங்களில் தலைகீழாக... நாயகிக்கும், அவளது சண்டை, திமிர், உக்கிரம், மெனக்கெடல்களுக்கும், கைத்தட்டலெழுப்புகிறது, ஆர்ப்பரிக்கிறது, என்பது என்னவொரு அற்புதமான காலமாற்றம் மற்றும் முன்னெடுப்பு..? இதே நிகழ்வு, முன்னர் தெலுகு டப்பிங் சினிமாக்களுக்கும் நடந்திருந்தாலும், ஒருவித அன்னியத்தன்மையோடே அவை நிகழ்ந்திருக்கின்றன என்பதும். அச்சினிமாக்கள் நம்பகத்தன்மை இல்லாத கமர்சியல் கதைகள் மட்டுமே, என்பதையும் இங்கே கருத்தில் கொள்ள வேண்டியதாய் இருக்கிறது. ஆனால் இறுதிச்சுற்று, தீவிர சினிமாவின் வகைமையத் தொட்டு, அதே சமயம் வணிக சினிமாவாகமும் வெற்றி பெற்றிருக்கிறது. வடசென்னை மீனவ நாயகி எனும் எளிய மனிதர்களை முன்னிறுத்தும் கதாபாத்திரப்படைப்பு,  இச்சினிமாவை, தமிழக சூழலோடு அதிகபட்ச நெருக்கம் உடையதாய் மாற்றுகிறது. இந்தக்கதையம்சத்தில் நாயகியின் அம்மாவாக வருபவர் வடஇந்திய முகமாக விலகி நின்றாலும். நாயகியின் தந்தை செளகார்பேட்டை வெள்ளைத்தோலுக்கு ஆசப்பட்டு மோசம்போய்ட்டயேடா எனப்புலம்பும், நகைச்சுவையான வசனத்தை காட்சிப்படுத்திவிட்டதால், இந்தக்கதை நம் மண்ணில் நிகழ்ந்த கலப்புதிருமணமாக பார்வையாளன் மனதில் நிலைத்து நூறுசத தமிழ்க்கள கதையம்சமாகவும் பொருந்திப்போகிறது.

இதே திரைப்படத்தில் இன்னொரு ஆண் கதாபாத்திரத்தின் வழியே நாயக வீரத்தையும்,போர்குணத்தையும்,சேர்த்தேதான் முன்னிறுத்துகிறார்கள்தான் எனக்கொண்டாலும். அதே சமயம், அக்கதாபாத்திரத்திற்கு சற்றும் குறைவில்லாத சமதளத்தில்தான் நாயகியின் கதாபாத்திரமும் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. என்பதும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம். மென்மேலும் பல்வேறு திறமைகளை கொண்டிருக்கும் பெண் இனத்தின் மீது  வெளிச்சமூட்டி ஊக்கப்படுத்தும் சினிமாகவும் இறுதிச்சுற்று இருக்கிறது என்பதும்.
இப்படி நாயகியின் ஆளுமையை ரசிக்க வைத்து வெற்றியும் அடைந்திருக்கும் இந்த இறுதிச்சுற்று..தமிழ்சினிமாக்களில் முன்னர்வந்த பெண்கள் குறித்த கேலி மதிப்பீடுகள், "பொட்டை" போன்ற வசனங்கள், என எல்லாவற்றையும் அடித்து நொறுக்கி பெரும்பான்மை ஆண்கள், ஆணியப்பார்வைகள், குழுமியிருக்கும் ஒரு களத்தில் பெண் இயக்குனர் முன் வைக்கும் மிகமுக்கிய ஆரோக்கிய எதிர்வினையாகவும், கட்டுடைப்பாகவும், மாறியிருக்கிறது. 

அழுத்தமான கதைக்களனும், நம்பத்தகுந்த காட்சியமைப்பும், வசனங்களும், ஒன்று சேர்ந்தால் திரைப்படங்களில் கதாபாத்திரங்களின் பாலினம் ஒரு பொருட்டல்ல.. எனும் நம்பிக்கையை, விளைவிக்கும் இத்தகைய சினிமாக்களுக்கு கிடைத்த இந்த பெருவெற்றியானது, அடுத்து ஒரு திருநங்கைகளின் கதாபாத்திரங்களை, மையமாக கொண்ட சினிமாக்களை தோற்றுவிக்கும் சாத்தியத்தை உருவாக்கியிருக்கிறது என்பதும், வருங்கால தமிழ்சினிமாவை ஆரோக்கியப்பாதையில் இழுத்துப்போகும் சக்தியாகவும் இருக்கிறது, என்பதும் இறுதிச்சுற்றை முன்வைத்து நாம் மெச்சிக்கொள்ள வேண்டிய அம்சம்.

மற்ற பேரரசர்களைக்காட்டிலும், தோற்றத்தில் உயரம் குறைந்த,மெலிந்த, உடலமைப்புடையவனாக இருப்பினும், மற்ற பேரரசர்களின் ஆயுதங்களை, நம்பிக்கைகளைச், சிதைத்து பல வெற்றிகளைப்பெற்ற வரலாற்று நாயகன் செங்கிஸ்க்கான் பற்றிய வசனங்கள், இந்தப்படத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக இடம்பெறுகிறது. போலவே தமிழ்சினிமா வரலாற்றிலும் நாயகி ஆளுமையை முன்வைக்கும் இப்படம், ஒரு முக்கிய திருப்புமுனையாகவும் இருக்கப்போகிறது. 

ஏனெனில் இது ஒரு பெண் செங்கிஸ்கானின் தமிழ் சினிமா.