Wednesday, May 24, 2017

Lion (2016) - மனிதம் கோரும் சமூக படைப்பு




முளைத்து வளர்ந்த பிரதேசத்திலிருந்து, குடும்பத்திடமிருந்து, ஐந்து வயதுச் சிறுவனை கொத்தாக பிய்த்தெடுத்து வேறொரு பிரதேசத்தில் நட்ட விதியைத் தாண்டி  இருப்பத்தைந்து வருடங்களுக்குப் பிறகு தன் பிரதேசத்தை, குடும்பத்தை மீட்டெடுக்கும் ஒரு இளைஞனின் உண்மைக் கதை லயன்.

சரூ..  என்கிற அந்த ஒற்றைக்கதாபாத்திரம்தான் படத்தின் மையம். பரந்துவிரிந்த பெரும் நிலப்பரப்புகளில் தன் வேர்களை தேடியலையும் அந்த ஐந்து வயது சிறுவனின் தவிப்பை தத்ரூபமாக வெளிக்கொணர்ந்து உண்மையான சரூ'வின் கண்களும், பிஞ்சுக்கால்களும்,குரலும், இப்படித்தான் அலைந்திருக்கும் என தன் உடம்பின் அத்தனையையும் நடிக்கவைத்திருக்கிறான் அந்தச் சிறுவன். அவனதைத்தாண்டி படத்தில் சிலாகித்திட எதுவுமில்லை என்கிற அளவிற்கு மிகச்சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறான். இருந்தும் மனிதர்களை துண்டாடும் பெரு நிலங்களின் காட்சிகளையும், பிஞ்சு சரூ'வை உள்ளடைத்துக்கொண்டு அழகழகான பிரதேசங்களில் இருட்டினூடே சீராக ஓடுகிற ரயிலை பற்பல லாங்ஷாட்டுகளும், ஜன்னல் ஷாட்டுகளுமாக காட்டி வாழ்நாளில் முதல் முறையாக ரயிலை ஒரு வில்லனைப் போல உருவகப்படுத்தி பதியவைத்த  ஒளிப்பதிவும், ஸ்கிரிப்ட்டும், இயக்கமும், இப்படத்தில் அடுத்த தரமான விசயங்களாக அமைந்திருக்கின்றன.

எல்லாவற்றிற்கும் மேலாக, திரைக்கலை முற்றாக பொழுதுபோக்கிற்கு மட்டுமே உகந்தவை என்கிற ரீதியிலான கருத்துக்களை உடைத்தெரிவதற்கு "லயன்" மாதிரியான திரைப்படங்கள் பக்கபலமாக இருக்கின்றன என்பதுதான் இத்திரைப்படத்தின்  ஆகச்சிறந்த ஆரோக்கிய முன்னெடுப்பாக சொல்லவேண்டியிருக்கிறது. எப்படியெனில், நம் அன்றாட வாழ்வில் கலைந்தகேசம், அழுக்குச்சட்டை, கோணிப்பை சகிதமாக நமைக் கடந்துபோன எண்ணற்ற சிறார்களைப் பற்றிய சிந்தனைகளை "லயன்" ஆழமாக கோருகிறது. நிராதரவாக சுற்றித்திரியும் அத்தகைய சிறார்களை அழைத்து ஒரிரு நிமிடம் வாஞ்சையுடன் பேசி அவர்களின் கதையைக் கேட்டு அவர்களுக்கு எதேனும் உதவி தேவைப்படுகிறதா என வினவ வேண்டும் என்கிற சிந்தனைகளை இத்திரைப்படம் முன்னெடுக்கிறது. இப்படியாகப்பட்ட சிந்தனைகளைத் தோற்றுவிக்கும் ஊடகமாக திரைக்கலை இருப்பதென்பது ஒரு மகத்தான
விடயமாகும். "லயன்" திரைப்படம் அப்படி ஒரு மகத்தான கலையாக கம்பீரமாக நிற்கிறது. இனி வரும் காலங்களிலும் நிற்கும்.

தங்கள் நிலம்,குடும்பத்திடமிருந்து தங்களை வலுக்கட்டாயமாக பிரித்தெடுத்த வெள்ளையர்களிடமிருந்து தப்பித்து மூன்று மாதங்கள் நடந்தே சென்று தங்கள் குடும்பத்திடம் சேரும் ஆஸ்திரேலிய பழங்குடிச் சிறுவர்களைப் பற்றிய உண்மைக்கதையான "ரேபிட் ஃப்ரூப் பென்ஸ்" எனும் உன்னத திரைப்படத்தின் நினைவு  "லயனை"ப் பார்க்கும் பொழுது வந்தது. இந்த இரண்டு திரைப்படங்களும் ஆஸ்திரேலிய கண்டத்தை பின்புலமாக கொண்டவை என்பது குறிப்பிடவேண்டிய ஒன்று " ரேபிட் ப்ரூப் பென்ஸ்" மிகச்சிறந்த திரைப்படம்தான் என்றாலும் நமக்கு பரிச்சயமில்லாத தூர தேசத்தைச் சார்ந்த குழந்தைகளைப் பற்றிய கதையாவதால் அப்படம் நமக்கு ஓரளவு அன்னியப்பட்டு இருக்கும். ஆனால் "லயன்" நம் தேசத்தில் நாம் அன்றாடம் கடந்துபோகும் தெரு சிறார்களின் கதையை முன்வைப்பதால் இப்படம் நமக்கு மிகமிக நெருக்கமான படமாக உள்நுழைந்து கொள்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, எண்ட் கார்டில் சொல்லப்படும் இந்திய தேசத்தின் நிராதரவுச் சிறுவர்களைப் பற்றிய புள்ளி விவரக்கணக்குள் பகீரென பொட்டில் அடித்தாலும், அப்படி அலையும் சரூ" போன்ற சிறார்களைக் கண்டடைந்து நம்மால் முடிந்த உதவிகளை அவர்களுக்குச் செய்ய வேண்டும் என்கிற மனிதத்தை விதைக்கின்ற படியால் "லயன்" உன்னத சினிமா என்பதைத் தாண்டி ஒரு ஆகச்சிறந்த சமூக கலைப் படைப்பாக ஆகிறது.

Thursday, March 30, 2017

அங்கமாலி நினைவுகள்




மாட்டுக்கறி உணவுவகைகள் இடம்பெற்றிருந்த கேரள ஹோட்டல் கடையொன்றின் விளம்பரப்பலகையை படம்பிடித்து, "நல்லவேளையாக கேரளம் உத்திரபிரதேசத்திலிருந்து ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கிறது" என யாரோ ஒருவர் சில நாட்களுக்கு முன்பு ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். சமீபத்திருக்கும் உணவரசியல் சூழ்நிலையையை கிஞ்சித்தும் மதிக்காது ராஜநடை போடும்  கேரளவாழ்வியலை அந்த ட்வீட் ஒரு எளிமையான அவலநகைச்சுவையாக பிரதிபலித்திருந்தது, அதே கெத்தான கேரளத்தின் உணவுக்கலாசார வாழ்வியலைத்தான் "அங்கமாலி" திரைப்படம் இன்னும் அதிதீவிரமாக,விரிவாக, உரத்துப் பேசுகிறது. உணவரசியல்தான் கதைக்களம் என்பதாக இல்லாமல் "அங்கமாலி" பிரதேசத்தில் ஒருகாலத்தில் ஜீவித்திருந்த அசல் மனிதர்களின் வாழ்வியலைப் பற்றிய மையக்கதையினூடே அவர்களுடன் இரண்டறக்கலந்திருந்த உணவுக் கலாசாரத்தை ஒரு கிளைக்கதையாக படம் முன்வைக்கின்றது.  பெரும்பான்மை மக்களுக்குப் பிடித்த உணவுவகைகள் என்பது வெறுமனே ஒரு உணவு மட்டுமல்ல, அது எப்படி மக்களில் வாழ்வியலில் ஒர் அங்கமாகி, கொண்டாட்டமாகி, பொருளாதாரமாகி, பரவியிருக்கின்றன  என்பதை நகைச்சுவையும்,தீவிரமும் கலந்துக்கட்டி காட்சிப்படுத்தி, அம்மண் மனிதர்களை, வாசனையை, பார்வையாளனுக்கு சிறப்பாக கடத்துகிற படம்தான் "அங்கமாலி டைரீஸ்".

தமிழகத்தின் தனித்த வட்டார பாசைகள் கொண்ட நெல்லை,கோவை,போலவே கேரளத்தின் தனித்த வட்டார பாசைகளையும் மனிதர்களையும் கொண்ட ஒரு பகுதிதான் கேரளத்தின் அங்கமாலி, பெரும்பாலும் மளையாளத் திரைப்படங்களில் நாயர்,மேனன்,போன்ற உயர்குடி கதைமாந்தர்களின் கதைகளாகவே வெளிவந்து கொண்டிருக்கும் சமயத்தில், அங்கமாலி போன்ற குட்டிப்பகுதிகளில் வசிக்கும் சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட மனிதர்களின் கதையை எந்தச் சினிமா பூச்சுமின்றி இயல்பாக உலவ விட்ட பெருமைக்குரிய படைப்புகளில், அங்கமாலி டைரீஸூம் ஒன்று என்பதை மட்டுமே ஒரு காரணமாகக் கொண்டு காலரைத் தூக்கிக் கொண்டு திரையரங்கில் அமரலாம். என்றாலும், படம் தொடர்ந்து பல்வேறு சுவாரஸ்யங்களை அளித்து நமை கொண்டாடச் செய்கிறது என்பது நிஜத்திலும் நிஜம்.

முதல்காட்சியில் சரக்கும், கையுமாக, மலைப்பாம்புக்கறியும், தெனாவெட்டுமாகத் தோன்றும் தாதா முதற்கொண்டு பாபுஜி, பத்து மில்லி தாமஸ் சேட்டா, மரங்கொத்தி சிஜோ, பன்றிக் கொட்டகை ரவி & ராஜன், காடு பீமன், குஞ்சோட்டி, வர்கி, வின்செண்ட் பெப்பே, சீமா, சகி, லிச்சி, ரவி மைத்துனன், போலீஸ் இன்ஸ்பெக்டர், வக்கீல், என கதை மாந்தர்கள் அத்தனைப் பேரும் மொத்தப் படத்தையும் தாங்கு தாங்கெனத்தாங்கி, படத்தை மிகப் பிரமாதமாக தூக்கிக் சென்று நமைக் கொண்டாட வைத்திருக்கிறார்கள். இவர்களில் பெரும்பான்மை நடிகர்கள் "அங்கமாலி" பகுதியின் அசல் மனிதர்கள் என்பது படத்திற்கு வெளியேயான கூடுதல் தகவல். பார் ஒன்றில்,  இயேசு கிறிஸ்து, அனுமார், கன்னியாஸ்திரி, ரோமானிய வீரர், நடிகை, வேடமிட்டு ஒற்றைச் சிகரெட்டைப் பங்கிட்டு சரக்கடித்துக் கொண்டிருக்கும் பள்ளியங்காடு டீம் பாய்ஸைக் காட்டியவாறு படம் துவங்குகிறது, எதிரி குழாமைச் சேர்ந்தவன் வேறு டீம் ஆட்கள், வேடமிட்டு இருக்கும் இவர்களைச் சீண்ட நடிகை வேடமிட்டவரிடம் முத்தம் கேட்க கொடுக்கப்படுகிறது, கன்னியாஸ்த்திரியிடம் கேட்கப்பட்டு மறுக்கப்படும் பட்சத்தில், வலுக்கட்டாயமாக பெற எத்தனிக்கும் போது, முதல் உதை தரும் இயேசு கிறிஸ்த்துவிடம் இருந்து படம் அதகளப் பாய்ச்சலில் பாய்கிறது.

பொருளாதார மேன்மையை அடைய நினையும் இளைஞர்களின் வாழ்வியலில், உள்ளூர் குழுக்களால் அவர்கள் எதிர் கொள்ளும் தடைகளையும், தடைகளின் பொருட்டு அவர்கள் பாவித்துக் கொள்கிற சமூகவிரோத நடவடிக்கைகளையும், படம் தெளிவாக கடத்துவதோடு கேரள உள்ளூர்களின் அரசியல் பொருளாதார சூழ்நிலையையும், வழியின்மையையும், மிகச்சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறது. எதையும் பிரசார தொனியில் இல்லாமல், நிலவி இருந்த வாழ்வியல் சூழ்நிலையாகவே முன்வைத்தது இங்கே குறிப்பிடத்தக்கது. எர்ணாகுளம் பகுதியின் ஒடுக்கப்பட்ட மனிதர்களின் கதையான  "கம்மாட்டிபாடம்" படத்தை "அங்கமாலி" ஓரளவு நினைவு கூர்ந்தாலும், அப்படம் பேசும் தீவிர அரசியலைப் போலல்லாமல், உள்ளூர் வன்மங்களை அரசியல் நோக்கித் திருப்பாது, உள்ளூர் குழுக்களுக்குள்ளாகவே முடித்துக் கொள்வதைப்போல முடித்துக்கொண்டது மட்டுமே இப்படத்தை "கம்மாட்டிப்பாடம்" திரைப்படம் தந்த அனுபவத்திலிருந்து கீழாக இறக்கி வைத்துப் பார்கச் செய்கிறது. மற்றபடி திரைப்பட ரசிகர்கள் அனைவரும் கொண்டாடத்தக்க திரைப்படம் "அங்கமாலி டைரீஸ்" என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஏனெனில், தொழில்நுட்ப ரீதியாக "அங்கமாலி" இந்திய சினிமாவில் ஒரு பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறது. உதாரணமாக இடைவேளை சமயத்துக் காட்சிகளாகட்டும், சென்றவருட ஹாலிவுட்டின் ஆஸ்கர் திரைப்படமான "பேர்ட்மேன்" படத்தைப் போன்று ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட கிளைமாக்ஸ் காட்சிகளாகட்டும், கடைசி ஒற்றை ஷாட்டில் விரியும் துபாய் நாட்டின் பெருநிலக் காட்சிகளாகட்டும், திரைப்பட பிரியர்கள் தவறவிடக்கூடாத உன்னத அனுபவமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

மத்தியில் ஆளும் பாஜக அரசின் உணவரசியல் அடாவடித்தனங்களுக்கெதிராக, உணவுக்கலாசாராமும், அசல் வாழ்வியலும், இரண்டறக் கலந்த இதுபோன்றக் கதைகளை இந்தியதேசம் முழுக்க பல்வேறு மொழிகளில், கலைகளின் வாயிலாக அதிதீவிரமாக முன்னெடுப்பது என்பது தற்போதைய அத்தியாவசியத் தேவையாக இருக்கின்ற அதேசமயம், அக்கதைகள், அங்கமாலியின் பன்றிக்கறி பின்புல வரலாற்றைப்போலவே  மாட்டுக்கறி பின்னணியிலமைந்த நிஜ/புனைவு/அபுனைவுக் கதைகளாக பரிமாணிக்க வேண்டும் என்பதும் பெரும் ஆசையாக இருக்கிறது.

தோழமையுடன்
கர்ணாசக்தி