Saturday, May 9, 2015

கொலை நினைவுகள்

கொரியாவின் கிராமமுமல்லாத நகரமும் அல்லாத ஒரு சின்ன ஊரில் துவங்குகிறது படம். அந்த ஊரில் ஒன்றுமறியாத சில அப்பாவிப் பெண்கள்  தொடர்கொலைகளுக்கு பலியாகின்றனர். நிகழ்கின்ற அக்கொலைகளின் கொலையாளியைத்தேடி.. கொலைவளையத்திற்குள் வரும் சந்தேக நபர்களை பிடித்து விசாரிக்கும் இரு அதிகாரிகளின் விசாரனையும்,தேடல்களுமே இந்த
Memories of Murder (2003) "Salinui chueok" (original title) எனும் கொரியத் திரைப்படம். 

                                          

இரு அதிகாரிகளின் மாறுபட்ட பார்வைகளும், கோணங்களும், கொலையாளியை நெருங்குகின்றனவா என்பதும்.. இந்தத்தேடல் சூழ்நிலை உளவியல் பூர்வமாக அந்த அதிகாரிகளை எப்படி கையாள்கிறது என்பதும், அடுத்தடுத்த கொலைகள் நிகழ்ந்து கொண்டே இருக்க காட்சிகளோடு ஒன்றிய பார்வையாளர்களான நம்மையும் அந்த அதிகாரிகளோடு வெறி கொண்டு கொலையாளியை தேடச்செய் பாங்கும் இந்த படத்தின் உன்னத சிறப்பம்சம்.

பொதுவாக படங்கள் முடியும் தருவாயில் திருப்திகரமான அனுபவத்தை தருவதும்,  எப்போது படத்தை முடிப்பார்கள் என ரசிகனை கதறச்செய்வதுமான இரண்டு கோட்பாடுகளிலேயே அனேக திரைப்படங்கள் வந்துள்ளன.. ஆனால் இந்தபடத்தில்தான் அந்த மாயாஜாலம் நிகழ்கிறது.. இந்த படம் முடிவை நெருங்கிக்கொண்டிருக்கும் தருவாயில் பார்வையாளர்கள் இதன் இயக்குனரிடம் மானசீகமாக முடித்துவிடாதே.. முடித்துவிடாதே… என கெஞ்சிக்கொண்டே இருப்பார்கள்/இருந்தேன்.. ஆனால் கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் முடித்தார் என்பது வேறுகதை. அந்தளவு அற்புதமான திரைப்படம் இது.

உரக்கக் கத்தியே சொல்கிறேன்.. இந்த படத்தைப்போல ஒரு க்ரைம் படத்தை உங்கள் வாழ்க்கையில் பாத்திருக்க முடியாது.. இனி பார்க்கவும் முடியாது.. எனக்கு அப்படித்தான் தோன்றியது, இதுவரை நான்பார்த்த அத்தனை க்ரைம் படங்களையும் புரட்டிப்போட்ட ஒரே திரைப்படம் இந்த படம்தான்.  காலம்காலமாக நாம் பார்த்து விதந்தோந்திய பல க்ரைம் படங்களின் முடிவுகளை, தர்கங்களை,கட்டமைப்பை, எனக்குத்தெரிந்து கட்டுடைத்த ஒரே திரைப்படமும் இதுதான்.

எழில் கொஞ்சும் வயல்கள் சூழ்ந்த அழகியலில் வெட்டுக்கிளியை கபக்கென்று பிடிக்கும் ஒரு சிறுவனை காட்டியவாறு முதற்காட்சி துவங்குகிறது, உண்மையில் அந்தக்காட்சி மட்டும்தான் இந்த படத்தின் பார்வையாளர்களுக்கு கிடைக்கும் ஒரே ஆசுவாசம்.. ஒரு வகையில் அந்தக்காட்சி பார்வையாளனை மெல்லிய மனோ நிலையில் உட்காரச்செய்யும் வித்தை.. எழில் சூழ்ந்த வயல்வெளிகளில் அந்த வெட்டுக்கிளியை பிடிப்பது போல அத்தனை சுலபமானதல்ல இதன் அடுத்தடுத்த காட்சியோட்டம் என்பதும், ஆரம்ப காட்சியில் நாம் கொண்ட மெல்லிய மனோநிலையில் மீதிய காட்சிகளில் நாம் ஒருபோதும் இருக்கவில்லை என்பதும் இறுதியில்தான் நமக்குப் புரிகிறது.

முன்ன பாத்த கிரைம் படத்தை எல்லாம் அழிச்சுட்டு இதப்பாரு.. இதாண்டா உண்மையான க்ரைம் படம், இதான் படைப்பு, பாத்துக்க என கெத்தாக சொல்லும்   எனும் படைப்பாளி கடவுளின் உன்னதம் இந்த திரைப்படம்.

Monday, May 4, 2015

நகர்ப்புறத்து மீன்கள்:


“ஹலோ வெரி குட்மார்னிங் சிவக்குமார் சார். நான் …. …… லைப் இன்ஸூரன்ஸ் கம்பெனில இருந்து சரவணன் பேசறேன் சார்”
“…”
“ஹலோ சார்”
“வண்டானுக எச்சிக்கல நாய்க காலங்காத்தாலயே … ” பீங்..பீங்..பீங்
ஏனோ இந்த நகரம் தந்த முதல் மாத சம்பளம் என்னை அவ்வளவு மகிழ்ச்சியாக வைக்கவில்லை. இவ்வளவு பணம் இருந்தும் வெம்மையாகவே இருந்தது மனம்.. இந்த நகரத்தின் கொடிய தனிமையை, என் சோகங்களை சொல்லி அழ அல்லது சொல்லாமல் அழ என்னைப்போலவே ஒரு ஜீவனை இந்த காசுக்குள் வாங்கிவிடமென்று மனம் சொன்னது..
பட்டவர்த்தனமாக என்னைதான் திட்டுகிறார் என தெரிகிறது…தெரிந்து என்னவாகப் போகிறது காலை ஒன்பதரைக்கு ஆரம்பித்த இந்த டெலிமார்க்கெட்டிங்கில் இந்த அரைமணி நேரத்திற்குள்ளாக கிட்டத்தட்ட இது 25ஆவது பட்டம்… பொத்தாம் பொதுவாக நாய் என கூறினால் ஒருவேளை ஹட்ச் விளம்பரநாய் போல சொகுசு நாயாகவோ அல்லது நடிகைகள் கொஞ்சும் உயர் ரக நாய் எனவோ பொருள் பட்டு விடக்கூடாதென குப்பைத் தொட்டியில் எச்சில் இலைகளை மேயும் நாயின் மீதாக மிக சரியாக குறி வைத்து எறியப்படும் கல் போலத்தான் செவியில் மோதியிருந்தது அந்த சொல்.
வேலைக்கு சேர்ந்த முதல்நாள் மேனேஜர்  இது பாலிசி ஹோல்டர்களின் பணம் புழங்குகிற இடம்.. உன்னை நம்பும் கஸ்டமர்கள் நிறைய பணம் கொண்ட செக்குகளையோ அல்லது பணத்தையோ உன்னிடம் கம்பெனியில் கட்ட சொல்லித் தரலாம், அப்படி வந்த எதாவது பணத்தை நீ கையாடல் செய்து தலைமறைவாகி விட்டால் என்ன செய்வது ஆதலால் உன் ஒரிஜினல் சர்டிபிகேட்டுகளை ஒப்படைத்துவிடு என்று சொன்னார்..
”நம்பிக்கை இல்லாத இடத்தில் எனக்கெதுக்கு சார் வேலை, தேவையில்லை”யென தூக்கிப்போட்டுவிட்டு வெளியேற என் பசி முதலில் அனுமதிக்கவில்லை அப்படி அது அனுமதித்திருந்தாலும் என் ரூம்மேட் முருகேசன் நிச்சயம் அனுமதித்திருக்க மாட்டான், முருகேசனுக்கும் எனக்குமானது 10 வருட பழைய நட்பு… இந்த இடத்தில் பழைய என்பதற்கு பொருள் இப்போது இல்லை என்பதேயாகும் எப்படி இல்லாமல் போனது என்பதற்கும் காரணம் இருக்கிறது. அது இந்த பெரு நகரத்தில் தன் இருப்பை நிலை நிறுத்திக்கொள்ள மன்றாடிக்கொண்டிருக்கும் லட்சக்கணக்கான பேச்சிலர்களுக்கும், வீட்டு உரிமையாளர்களின் பேராசைகளுக்கும் இடையிலான கண்ணி அது…
ஸ்கூல் மெட்டாக, காலேஜ் மெட்டாக உண்பது,குடிப்பது என எல்லாவற்றிலும் வேறுபாடு இல்லாது பங்கி ருசித்து கழித்திருந்த நட்பு வாழ்கையின் அடுத்த கட்டங்களில் தன்னைப் பற்றி மட்டுமே யோசிக்கத் தொடங்கியிருந்தது அல்லது அப்படி மாறி விட்டிருந்தது அவனுக்கும் எனக்குமான நட்பில் பெரிய விரிசல் என்று ஒன்றுமே இல்லை இருந்தும் ஒரு பீரை,ஒரு சிகரெட்டை,ஒரு பரோட்டாவையெல்லாம் பங்கிடத் தெரிந்திருந்த நட்பு, ஒரு 10க்கு 8ரூமில் பங்கீடு என்று வரும் போது முருகேசனை அப்படித்தான் அன்று பேச வைத்தது
“ஹலோ மச்சி நான் சரவணன் பேசறேன் டா”
“சொல்டா மச்சி எப்டி இருக்க? ”
“நல்லா இருக்கேன் மச்சி நீ எப்டி இருக்க ”
“ம்ம் பரவாலடா ஒரு மாதிரியா இருக்கேன்..என்ன திடிர்னு போன்”
“மச்சி ஒரு தேவையாதான் கூப்பிட்டேன்… எனக்கு ஒரு வேலை வேணும்டா இங்க இதுக்குமேல இருக்க என்னால முடியாது.. நானும் சென்னைக்கு வரலாம்னு முடிவு பண்ணிட்டேன்.. கடன்தொல்லை ஜாஸ்தியாகி இருந்த நிலத்த ரியல் எஸ்டேட்காரனுக்கு வித்து வந்த பணத்துல கடன் எல்லாம் அடச்சிட்டு அய்யா இப்போ டவுன்ல ஒரு ஏடிஎம்ல செக்யூரிட்டியா வேலைக்கு போறார், தங்கச்சி இப்போ டென்த் படிக்கிறா… அய்யா பாவம்டா காடு கழனின்னு கயித்துக் கட்டில்ல சொகமா படுத்திட்டு காவல் காத்துகிட்டிருந்தவர் எதோ ஒரு எடிஎம் வாசல்ல ஒத்த சேர்ல உக்காந்து கண்ணு முழிச்சு வேல பாக்குறத நினைச்சா கஷ்டமா இருக்கு மாப்ள”
“நான் அப்பவே சொன்னேன் இல்லடா, விவசாயம் பாத்திட்டு ஊர்ல கிடந்தா வேலைக்காவாது சென்னைக்கு வந்து எதாவது பொழப்பப் பாருன்னு ஆனா நீ அய்யா பாக்குற விவசாயத்துக்கு ஒத்தாசையா இருக்கிறது தான் சந்தோசம் தவிர அடுத்தவன்கிட்ட பேச்சு வாங்கிட்டு செய்யிற வேலையெல்லாம் உனக்கு சரிபட்டு வராதுன்னு சொன்ன ”
“சொன்னந்தான் இல்லன்னு சொல்லல மழை இல்ல… கூலிக்கு ஆள் கிடைக்கல யாருமே இப்ப நிலத்துல இறங்கி வேல பாக்க விரும்பறதில்ல மச்சி… வட்டிக்காரன் கொடச்சல் வேற தாங்கல என்னடா செய்ய…. சாகுற வரைக்கும் விவசாயம்தான் பாப்பேன்னு வைராக்கியமா இருந்த அய்யாவையே வாட்ச்மேனாக்கி அழகு பாக்குது காலம்.. நானெல்லாம் எம்மாத்திரம் மச்சி ”
“சரி இப்போயென்ன என்ன செய்ய சொல்ற? ”
“மச்சி நான் அங்க வரேண்டா உங்கூடவே தங்கிட்டு எதுனா வேலை தேடிக்கறேன் இல்ல நீ எதாவது வேலை பாத்து சொல்லு”
“டேய் மச்சி இந்த ஊர்லாம் உனக்கு ஒத்துவரும்னு எனக்கு தோணலடா அதுவும் இல்லாம நானே இங்க ஒரு இன்ஸ்சூரன்ஸ் கம்பெனில மார்கெட்டிங் வேலைல திண்டாடிகிட்டு வீடுங்குற பேர்ல ஒரு புறாக் கூண்டுல ஒண்டிகிட்டு இருக்கேன்… ஹவுஸ் ஓனர் வேற செம ஸ்டிரிக்ட்டு இன்னொரு ஆள சேத்துப்பானான்னு தெரில”
“மச்சி எனக்கு உன்ன விட்டா அங்க யார தெரியும் ப்ளீஸ் டா எதாவது ஹெல்ப் பண்னு ”
“ஸாரி டா மச்சி இப்போதைக்கு இத தவிர வேற எதையும் என்னால சொல்ல முடியாது…வைக்கிறேன்டா கொஞ்சம் வொர்க் இருக்கு ”
பின்னாட்களில் எனது தொடர்ச்சியான சிலபல அலைபேசி அழைப்புகளில் ”தாங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நபர் தற்சமயம் பிஸியாக இருப்பதால் சிறிது நேரம் கழித்து தொடர்பு கொள்ளவும்” என அவனின் சிந்தனையொத்த ஒரு ரெக்கார்டிங் பெண் குரல் பேசிக்கொண்டிருந்த நாட்களில் பத்து வருட நட்பு மேலே சொன்ன பொருளில் பழைய நட்பாகத்தான் தோன்றியது .
பின்னொரு நாளில் நட்பை மீண்டும் புதுப்பித்த ஒரு அழைப்பாக அவனது கால் தானாக வந்து சேர்ந்தது.
“மச்சி நான் முருகேசன் பேசறேன் ஸாரி மச்சி இடையில கொஞ்ச நாளா பிஸியா இருந்தேன் அதான் உன் ஃபோன் அட்டன் பன்ன முடியல, அப்புறம் ஒரு முக்கியமான விசயம் உனக்கு என் இன்ஸூரன்ஸ் கம்பெனிலயே வேலை பாத்திட்டேன்… நீ வர சண்டே இங்க இருக்கிற மாதிரி வந்திரு மண்டே உனக்கு இண்டர்வியூ ஒகே வா ”
ஓயாது அவனிடம் பேச முயற்சித்து கொண்டிருந்ததால் வந்த கனவோ என எந்த சந்தேகமும் படாமலே முற்றிய நினைவுடன் தவித்திருந்த ஒரு நன்னாளில் வந்திருந்தது அவனது ஃபோன் கால், அதே சமயம் எப்படி தானாக வந்தது சரவணனுக்கு என் மீதான திடிர் அக்கறை என்ற கேள்வியும்..
விடை ஒரு ஞாயிறில் இந்த பெரு நகரம் வந்திறங்கிய போது கிடைத்தது..
“மச்சி வேலை கிடைக்கிறதுல எந்த கஷ்டமும் இல்ல கண்டிப்பா கிடைக்கும் என் டீம் லீடர் ஆள்கிடைக்காம திணறிகிட்டிருந்தார் அவர்ட்ட உன்ன பத்தி சொன்னேன் உனக்கு எக்ஸ்பிரியன்ஸ் இல்லன்னு மொதல்ல தயங்கினார் அப்புறம் என் பிரண்டுங்கிறதால ரெகமெண்ட் பன்றேன்னு சொல்லிட்டார் ஸோ உனக்கு வேலை கிடைக்கிறதுல எந்த பிராப்ளமும் இருக்காது”

Sunday, May 3, 2015

உத்தம வில்லன் - உன்னத சினிமாவா?

தொடக்கத்திலேயே சொல்லிவிடுகிறேன் இது பத்தாண்டுகளுக்கு பிந்தைய சினிமாவை சமகாலத்தில் வெளியிட்ட கடவுள் என மெச்சும் பதிவெல்லாம் கிடையாது.. கமலைப்பற்றிய அந்த மெச்சல்களெல்லாம் குணா,மகாநதியோடு வழக்கொழிந்து போய்விட்டது என்பது நிதர்சனம். அப்படி அவரை மெச்சித்தான் ஆகவேண்டும் எனச்சொல்ல கமல் என் மனதுக்கு நெருக்கமானவரும் கிடையாது.

சினிமா… மனம் விட்டு விரும்ப, கிறுக்கு பிடிக்க,ரசிக்க,சிலாகிக்க வைக்கிற எனக்குப்பிடித்த ஒரு மீடியா. இதில் தொன்று தொட்டு ஆதிக்கம் செலுத்திவரும் கமலஹாசன் என்ற மனிதர் மீது தேவர்மகன் தொட்டு,  எனக்கு தனிப்பட்ட விமர்சனங்களும், வன்மமும் நிறைய உண்டு..சமீபத்திய தசாவதாரம், விசுவரூபம் வரை அவை நீண்டு கொண்டேதான் இருக்கிறது .. அவ்வப்போது அதை வெளிப்படுத்தியும் இருக்கிறேன்..இருப்பேன்.

ஆனாலும் நான் உச்சி முகர்கிற சில தமிழ் படங்களில், அவரின் சில படங்களுக்கும் இடமுண்டு, என்பதை ஒரு போதும் என்னால் மறுக்கலாகாது.. அப்படிப்பட்ட தாக்கத்தை தரக்கூடிய படமாக உத்தமவில்லன் இல்லாவிட்டாலும், கமலஹாசனை திரைப்போர்த்தி எக்காளமிட்டு கேலி செய்துக்கொண்டிருக்கும் என்போன்ற சிலரை உத்தமவில்லன் சற்று தடுமாற செய்திருக்கிறது என்பதை பகிரங்கமாக ஒப்புக்கொள்கிறேன். சமீபத்தில் ஹேராம் தவிர்த்து அவரது எந்தபடமும் செய்யாத இந்த அதிர்வுக்கோட்டில் எதோ ஒரு புள்ளியில் வந்து நிற்கத்தான் செய்கிறது  உத்தமவில்லன்.

உத்தமவில்லனைப் பொறுத்த மட்டில் கமல் தாண்டி எதுவும் பேசலாகாது.. அப்படி பேசுதல் அறமும் ஆகாது.. அப்படி பேசுவது தேவையுமற்றது…எனவே முழுக்க முழுக்க அவரைப்பற்றி மட்டுமே பேசியாக வேண்டியதாய் இருக்கிறது.. அதுவே நியாயமானாதாகவும் இருக்கிறது.

முதல் மெச்சல்.. தமிழ் சினிமாவின் ஒருத்திக்கு ஒருவன் நாயக பிம்பத்தை கட்டுடைத்தற்காக.. முன்னமே அனேகர் இதைசெய்திருந்தாலும், ஏன்  கமலே அதை இந்திரன் சந்திரன் படத்திலேயே செய்திருந்தாலும், ஒரு சில சமரசம் வேண்டி வேறோரு நல்ல நாயகனோ, அல்லது நாயகன் செயல்களுக்கு எதாவதொரு கற்பிதமோ கற்பிக்கப்பட்டுதான் இதுவரை அனேக சினிமாக்கள் வந்துள்ளது. ( பருத்திவீரன் விதிவிலக்கு ) அல்லது  இன்னொரு நாயகனுக்கு நல்லவன் எனும் முகமூடியை மாட்டிவிட்டுத்தான் வந்திருக்கிறது.. அதுவே உத்தமவில்லனில் மனோரஞ்சன் என்கிற கேரக்டர் கள்ள உறவு வைத்திருப்பது தொட்டு, சூழ்நிலைகளின் போக்கில இசையும்,  சராசரி மனிதன் என்பதாலும், அவனே  இந்தபடத்தின் நாயகன் என்பதாலும் இது ஆகச்சிறந்த கட்டுடைத்தலாகிறது.

இரண்டாவது மெச்சல்.. நான்லீனியர் யுக்தியில் சாவின் நுனியிலுள்ள ஒரு நாயகனை சுற்றிய நிஜ கதையையும், சாவை வென்ற ஒரு நாயகனைச் சுற்றிய ஒரு கற்பனை கதையையும் கோர்த்து இரண்டையும் ஒரு புள்ளியில் இணைக்கும் ஒரு முழு நீள கதை சொல்லலுக்காக..ஆங்காங்கே கொஞ்சம் சோம்பல் தொற்றும் கதையானாலும் இறுதியில் முழுக்க முழுக்க நெகிழ வைக்கும் கதையைத்தான் சொல்லியிருக்கிறார் என்பதில் ஐயமேதுமில்லை.

மூன்றாவது மெச்சல்.. உலகமே கமலஹாசன் அவர்களின் நடிப்புத்திறனை அறியும். அவரே தன்னந்தனியாக போட்டி போட்டுக்கொண்டு அவரின் முந்தைய உச்சங்களை அடித்து நொறுக்கும் மாண்பு அவரின் அடுத்தடுத்த படங்களில் வெளிப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது என்றாலும், சமீபத்திய சில படங்களில் அதீத மேக்கப் எனும் உச்ச ஒப்பனைகளுக்குப்பின்னால். அவரின் நடிப்புத்திறன் ஒளிந்தும்/ஒழிந்தும் வந்திருக்கிறது.. அந்த நிகழ்வுகள் உத்தமவில்லனிலும் தைய்யம்  கலையினூடே  தொடர்ந்தாலும் நிச்சயம் இதில் வேறு படுகிறது என்றே சொல்வேன்.

திடீரென தான் அறியவந்த தன் மகளின் ஒவ்வொரு போட்டோக்களை.. சிறுத்து விரிந்த கண்களையும், நெகிழ்ந்து மகிழ்ந்த முகத்தினையும் கொண்டு ஒவ்வொன்றாக நோக்கும் போதும்.

தன்நோய் குறித்து அறிந்து கொண்ட மகனின் உணர்ச்சிகளினூடே தன்னை புதைத்துக்கொள்ள அதைச்சில ரசிகர்கள் எட்டிப்பார்த்து கைதட்டி ஆர்ப்பரிக்க.. போங்கய்யா ப்ளீஸ் இது என் பிரைவசி என அழுதுகொண்டே அதட்டிக் கெஞ்சும் போதும்.

அறுவைசிகிச்சையின் முன்பு.. மெதுவாக மயங்கிக்கொண்டிருக்கும் வேளையிலும் தனக்கு மாட்டப்பட்ட மாஸ்க்கினுள்ளே உதடு குவித்து காதலியிடம் முத்தம் ஒன்றினை கடத்திக் கண்ணடிக்கும் போதும். 

மேல்வந்த காட்சிகளில் அவரின் நடிப்பைப் பார்த்து சிலிர்த்த போது தோன்றியது/ஊர்ஜிதமானது ஒன்றுதான்.. ஒப்பனைக்களுக்கு அப்பாற்பட்ட உன்னத நடிகன்/கலைஞன் திரு.கமலஹாசன்.

நான்காவது மெச்சல்.. படத்தில் இரண்டுகடிதங்கள் வாசிக்கப்படுகிறது.. ஒன்று ஒரு உச்ச நடிகனை சூழ்நிலையால்  பிரிந்து செல்லும் அவனது காதலியால் எழுதப்பட்டது.. கடிதம் அவன் மீது பரவிய வெளிச்ச சிக்கல்களினால் சிக்குண்ட அவளது காதலைப்பேசுகிறது
அக் கடிதம் வாசிக்கப்படுகிறபோது திரைக்கு முன்னால் ப்ரொஜெக்டரின் வெளிச்சத்தினூடே நிற்கிற அந்த நடிகனின் முகத்தைக் குறியீடாக அந்தக்காட்சி காட்டுகிறது.

இரண்டாவது கடிதம் வாசிக்கப்படுகிறது.. தன்காதலிக்கு தன்மீது பரவிய அந்த வெளிச்ச சிக்கல்களை விட தன் காதலே பெருசென அந்த கலைஞனின் கடிதம் பேசுகிறது.. அப்போது அந்தகலைஞன் தனது ஒப்பனையை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து தன் உண்மை முகத்தைக் காட்டுகிற காட்சி குறியீடாக வருகிறது..இப்படி காட்சிகளின் தீவிரத்தை, தமிழ் சினிமாவில் திரை மொழியினூடே கமல் தவிர வேறு யாராலும் நிறுவப்பட முடியாது, என்பதை இங்கே மெச்சித்தான் ஆகவேண்டும்.

இப்படி மெச்சில்களைப் பட்டியலிட்டு பட்டியலிட்டு ஆயிரமாயிரம் உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம் என்றாலும், ஒரு முழு சினிமாவாக காணும் போது அவரின் பல சினிமாக்களின் நீட்சியாக ஆங்காங்கே   நாடகபாணியில் காட்சிகள் வருவது, எல்லா படத்திலும் ஒரு கும்பல் கமலை நேசிப்பது என தொடரும் க்ளிஷே காட்சிகள் நெருடலாக இருக்கிறது.. சுவாரஸ்யமற்ற கற்பனை கதைவேறு ரசிகனை பொறுமையின் எல்லைவரை அழைத்துச்சென்று சோதிக்கிறது.. மேலும் மேலும் நொட்டையும் நொள்ளையும் சொல்ல சில விசயங்கள் இந்தப்படத்தில் இருக்கத்தான் செய்கிறது என்றாலும் கிளைமாக்ஸ் முடிந்து மொத்தமாக உத்தமவில்லன் எனும் அவுட்புட்டை தரிசித்து வெளிவருகையில் முகத்தில் கமல்டா எனும் பெருமை எழவே செய்கிறது. அதுவே கமலின் வெற்றி..ஆகவே உத்தமவில்லன் உன்னத கலைஞனின் சினிமாதான். ஆனாலும் இதுதான்  உன்னத படைப்பு என்றில்லை.

தோழமையுடன்
கர்ணாசக்தி