"ஐ" எனும் திரைப்படம் வெளியான சமயம். தமிழ்சினிமாவின் ஆதர்ச நடிகர்களின், இயக்குனர்களின், சினிமாக்களிலும். சமகால இயக்குனர்கள் ஷங்கர்,அமீர், முதல் "சதுரங்கவேட்டை" வினோத், வரையிலானவர்களின் சினிமாக்களிலும், எந்த பிரக்ஞையுமற்று , பொட்டை எனும் வார்த்தையை உலவவிட்டது பற்றியும், திருநங்கைகள் மற்றும் பெண்கள் பற்றிய மதிப்பீடுகள், கேலிச்சித்தரிப்புகளாக தமிழ்சினிமா சூழலில் எவ்வாறெல்லாம் வெகுஇயல்பாக புழங்குகிறது. என்பது பற்றியும் காட்சிப்பிழையில், லிவிங் ஸ்மைல் வித்யா தன் கட்டுரையில் எடுத்தியம்பி வெம்பியிருந்தார். அச்சினிமாக்களில் நேரிடையாக எந்தப்பங்கும் கொள்ளாதவன் என்றபோதும், அவை வெளியான சமயம் அதைக்கண்டு, வாய்மூடி ரசித்துப் பின் மறந்துபோன பார்வையாளன், என்ற ஒரே ஒரு குற்றவுணர்ச்சியே நீண்ட நாட்களாக அரித்துக்கொண்டு இருந்தது. போதாதக்குறைக்கு திரிஷா இல்லன்னா நயன்தாரா போன்ற குப்பைகள் தொடந்து வெளியாகி, பெரு வெற்றியடைந்த தமிழ்ச்சினிமா சூழலில் அந்தப் பார்வையாள குற்றவுணர்ச்சி இன்னுமின்னும் அழுந்த அரித்தபடி நீண்டு கொண்டிருந்தது.
பெரும்பாலும் ஆண் இயக்குனர்களால், அவர்களது எண்ணங்களினால், கட்டமைந்த தமிழ்சினிமாவில் வந்த பெரும்பான்மையான திரைப்படங்கள் நாயகனை, அவனது போக்கை, வீரத்தை, காதலை, பறைசாற்றும் படங்களே.. வெகுசில சொற்ப சினிமாக்களே நாயகியை முன்னிறுத்தி வந்திருக்கின்றன. . சமகாலத்தை எடுத்துக் கொண்டோமேயானால் திரையரங்கிற்கு வரும் பெண்கள் சீரியலில் முடங்கிவிட்டதால், தியேட்டர்களை நிரப்பும் இளசுகளை மகிழ்விக்க எடுக்கப்படும், அண்மையத் திரைப்படங்களில் நாயகியின் சினிமா என்பது இன்னும் அகலபாதாளத்தில் சென்றிருக்கிறது. கிட்டத்தட்ட தொலைந்தும் போயிருக்கிறது/போயிருந்தது.
இப்படியான சூழலில் வந்த இறுதிச்சுற்று திரைப்படமும், அதன் மகத்தான வெற்றியும், இதுவரையிருந்த குற்றவுணர்ச்சிகளை நீக்கி, தமிழ் சினிமாவில் மீண்டும் நாயகியின் சினிமாவை மீட்டெடுத்திருக்கிறது. இச் சினிமா ஒருவகையில் விளையாட்டை மையமாக கொண்ட சினிமாவாக இருப்பினும். விளையாட்டில் சாதி,அரசியல், லாபிகளை விமர்சனம் செய்கிற சினிமாவாக இருப்பினும். இறுதிச்சுற்றில் நாம் முன்னிறுத்த வேண்டிய அம்சம் என்னவெனில் நாயகி ஆளுமையை.
இத்தனைக்காலம் கதாநாயகனின் வீரச் சண்டைக்கு, அவன் தெனாவெட்டுக்கு, உக்கிரத்திற்க்கு, மெனக்கெடலுக்கு, ஆர்பரித்து கைத்தட்டல் எழுப்பிய தமிழ்ச்சமூகம் இன்று இறுதிச்சுற்று நிகழும் திரையரங்கங்களில் தலைகீழாக... நாயகிக்கும், அவளது சண்டை, திமிர், உக்கிரம், மெனக்கெடல்களுக்கும், கைத்தட்டலெழுப்புகிறது, ஆர்ப்பரிக்கிறது, என்பது என்னவொரு அற்புதமான காலமாற்றம் மற்றும் முன்னெடுப்பு..? இதே நிகழ்வு, முன்னர் தெலுகு டப்பிங் சினிமாக்களுக்கும் நடந்திருந்தாலும், ஒருவித அன்னியத்தன்மையோடே அவை நிகழ்ந்திருக்கின்றன என்பதும். அச்சினிமாக்கள் நம்பகத்தன்மை இல்லாத கமர்சியல் கதைகள் மட்டுமே, என்பதையும் இங்கே கருத்தில் கொள்ள வேண்டியதாய் இருக்கிறது. ஆனால் இறுதிச்சுற்று, தீவிர சினிமாவின் வகைமையத் தொட்டு, அதே சமயம் வணிக சினிமாவாகமும் வெற்றி பெற்றிருக்கிறது. வடசென்னை மீனவ நாயகி எனும் எளிய மனிதர்களை முன்னிறுத்தும் கதாபாத்திரப்படைப்பு, இச்சினிமாவை, தமிழக சூழலோடு அதிகபட்ச நெருக்கம் உடையதாய் மாற்றுகிறது. இந்தக்கதையம்சத்தில் நாயகியின் அம்மாவாக வருபவர் வடஇந்திய முகமாக விலகி நின்றாலும். நாயகியின் தந்தை செளகார்பேட்டை வெள்ளைத்தோலுக்கு ஆசப்பட்டு மோசம்போய்ட்டயேடா எனப்புலம்பும், நகைச்சுவையான வசனத்தை காட்சிப்படுத்திவிட்டதால், இந்தக்கதை நம் மண்ணில் நிகழ்ந்த கலப்புதிருமணமாக பார்வையாளன் மனதில் நிலைத்து நூறுசத தமிழ்க்கள கதையம்சமாகவும் பொருந்திப்போகிறது.
இதே திரைப்படத்தில் இன்னொரு ஆண் கதாபாத்திரத்தின் வழியே நாயக வீரத்தையும்,போர்குணத்தையும்,சேர்த்தேதான் முன்னிறுத்துகிறார்கள்தான் எனக்கொண்டாலும். அதே சமயம், அக்கதாபாத்திரத்திற்கு சற்றும் குறைவில்லாத சமதளத்தில்தான் நாயகியின் கதாபாத்திரமும் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. என்பதும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம். மென்மேலும் பல்வேறு திறமைகளை கொண்டிருக்கும் பெண் இனத்தின் மீது வெளிச்சமூட்டி ஊக்கப்படுத்தும் சினிமாகவும் இறுதிச்சுற்று இருக்கிறது என்பதும்.
இப்படி நாயகியின் ஆளுமையை ரசிக்க வைத்து வெற்றியும் அடைந்திருக்கும் இந்த இறுதிச்சுற்று..தமிழ்சினிமாக் களில் முன்னர்வந்த பெண்கள் குறித்த கேலி மதிப்பீடுகள், "பொட்டை" போன்ற வசனங்கள், என எல்லாவற்றையும் அடித்து நொறுக்கி பெரும்பான்மை ஆண்கள், ஆணியப்பார்வைகள், குழுமியிருக்கும் ஒரு களத்தில் பெண் இயக்குனர் முன் வைக்கும் மிகமுக்கிய ஆரோக்கிய எதிர்வினையாகவும், கட்டுடைப்பாகவும், மாறியிருக்கிறது.
அழுத்தமான கதைக்களனும், நம்பத்தகுந்த காட்சியமைப்பும், வசனங்களும், ஒன்று சேர்ந்தால் திரைப்படங்களில் கதாபாத்திரங்களின் பாலினம் ஒரு பொருட்டல்ல.. எனும் நம்பிக்கையை, விளைவிக்கும் இத்தகைய சினிமாக்களுக்கு கிடைத்த இந்த பெருவெற்றியானது, அடுத்து ஒரு திருநங்கைகளின் கதாபாத்திரங்களை, மையமாக கொண்ட சினிமாக்களை தோற்றுவிக்கும் சாத்தியத்தை உருவாக்கியிருக்கிறது என்பதும், வருங்கால தமிழ்சினிமாவை ஆரோக்கியப்பாதையில் இழுத்துப்போகும் சக்தியாகவும் இருக்கிறது, என்பதும் இறுதிச்சுற்றை முன்வைத்து நாம் மெச்சிக்கொள்ள வேண்டிய அம்சம்.
மற்ற பேரரசர்களைக்காட்டிலும், தோற்றத்தில் உயரம் குறைந்த,மெலிந்த, உடலமைப்புடையவனாக இருப்பினும், மற்ற பேரரசர்களின் ஆயுதங்களை, நம்பிக்கைகளைச், சிதைத்து பல வெற்றிகளைப்பெற்ற வரலாற்று நாயகன் செங்கிஸ்க்கான் பற்றிய வசனங்கள், இந்தப்படத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக இடம்பெறுகிறது. போலவே தமிழ்சினிமா வரலாற்றிலும் நாயகி ஆளுமையை முன்வைக்கும் இப்படம், ஒரு முக்கிய திருப்புமுனையாகவும் இருக்கப்போகிறது.
ஏனெனில் இது ஒரு பெண் செங்கிஸ்கானின் தமிழ் சினிமா.

No comments:
Post a Comment