Tuesday, June 28, 2016

சாய்ராத்: அடங்க மறுக்கும் அன்பு

                                           

சாய்ராத் - கிட்டத்தட்ட இயக்குனர் பாலாஜி சக்திவேலின் காதல் திரைப்படம்.
இரண்டுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது. கிட்டத்தட்ட அதே கதை என்றுகூட சொல்லலாம். ஆயினும் சாய்ராத் தமிழ் சினிமாக்களைப்போலல்லாமல் கதை மாந்தர்கள் இன்ன இன்ன சாதிகள் என தெளிவாக முன்வைக்கிறது. இந்த சாதியினர் அந்த ஊரில் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதை சம்மட்டியால் அடித்து சபைக்கு நடுவே காட்டுகிறது,

சாத்தியமில்லாத கற்பனை மூட்டைகளுடன் திரையில் ஒளிரும் வெற்றுக் கதைகளைக் காட்டிலும் நிதமும் நாம் அனுபவித்து வரும் சமூகத்தைப் பிரதியெடுக்கும் மண்ணின் கதைகளுக்கு அளப்பறியா வலிமையுண்டு. அவை இச்சமூகம் குறித்து கேள்வியெழுப்பாது மூளையில் புதைந்து போயிருக்கும் இயலாமைகளை மீட்டுருவாக்கம் செய்யும், மீண்டும் திமிறி கேள்வியெழுப்பச் சொல்லும், பதில்களைத்தேடச் சொல்லும். வழக்கம் போல கிடைக்காத பதில்களுக்காக கூனிக் குறுகி தனிமையில் அழச்செய்யும். பதில் தெரிந்த சூத்திரதாரிகள் எந்தப்புள்ளியிலாவது மானுடத்தின் இயல்பை சொல்லும் இந்த நிழல்களின் பிரதிபலிப்பை கண்டு நிஜங்களின் உண்மைகளைப் புரிந்து கொள்ள மாட்டார்களா என ஏங்கச்செய்யும். இவையனைத்தையும் ஒன்றுவிடாமல் திரைப்பிரதியின் மூலம் நிகழச் செய்கிறது மராத்தியி மொழியில் வெளியாகிருக்கும் இயக்குனர் நாக்ராஜ் மஞ்சுலேவின் சாய்ராத் திரைப்படம்.

மராத்திய மொழியில் சாய்ராத் எனில் காட்டுத்தனமான,கட்டுப்பாடுகளற்ற, எல்லையற்ற,முரட்டுத்தனமான, என்கிற ரீதியிலான தமிழ்வார்த்தைகள் கிடைக்கிறது. இன்னும் நெருக்கமாக புரிந்து கொள்ள அடங்கமறுக்கும் என வைத்துக்கொள்வோம். உண்மையில் எல்லோருக்குள்ளும் பொங்கிய, பொங்கப்போகும், பதின்ம வயதுக் காதல்கள் அத்தகைய இயல்புடையவைதான். உள்ளத்தில் புகுந்துப் புறப்படும் காதலின் இடையில் எது தடையெற்படுத்தினாலும் தூக்கியெறிந்து போகும் தன்மையுடன்தான் அது உருவாகிறது. அது இயல்பிலேயே அத்தகைய தன்மையுடன் தான் பிறக்கிறது, வளர்கிறது. வர்கம், சாதி, என எதையும் பொருட்படுத்தாத மானுடத்தின் பொதுவுடமை புரட்சி அது. அத்தகைய புரட்சி இந்தத் திரைப்படத்தில் மகாராட்டிரத்தின் ஒரு கிராமத்தில் மீன்பிடி தொழில் செய்துவரும் பர்ஷியா (எ) ப்ரஷாந்த் காலே எனும் தலித் இளைஞனுக்கும். அதே ஊரின் உயர்சாதி நிலக்கிழார்களான பாட்டீல் சமூகத்தைச்சார்ந்த அர்ச்சி (எ) அர்ச்சனாவுக்கும் இடையில் நிகழ்கிறது.

கல்லூரி பேராசியரை கன்னத்தில் அறைந்து விட்டு வந்த மகனிடம் நீ உன் தாத்தனைப் போலவே இருக்கிறாய் என பெருமைப்படும், புகார் சொல்ல வந்த பேராசியர்களிடம் புது பேராசிரியருக்கு எங்கள் சாதி பையன்களை அறிமுகம் செய்து வையுங்கள் எனச் சொல்லி வாயடைக்க வைக்கும், சாதிப்பெருமை மனிதர்கள் நிறைந்த அந்த ஊரில் எல்லையற்ற அன்பும்,நேசமும், கொண்ட காதலர்களுக்கு என்னென்ன எதிர்வினைகள் நிகழுமோ அது அத்தனையும் நிகழ்கிறது. எல்லா வீட்டு ஆதிக்கசாதி  பெருங்காதல் யட்சிகளைப்போலவே அர்ச்சி அவையனைத்தையும் உடைத்துக்கொண்டு பர்ஷியாவுடன் ஊரைவிட்டு  வெளியேறுகிறாள்.

இதற்குபிறகு இரண்டு தரப்பைச்சார்ந்த  காதலர்களுக்கும், சமூகத்திற்குமான யதார்த்தத்தையும், இழப்பீடுகளையும், சாய்ராத் முன்னிறுத்துகிறது அதில் மிக முக்கியமாக வீட்டை விட்டு வெளியேறிய ஆதிக்கசாதிப் பெண்களின் எல்லையற்ற சமரசத்தை, எப்போதும் பிறந்த வீடு குறித்த வாஞ்சையை,  தகப்பனின், தாயின், தமயனின், அருகாமையை வேண்டும் ஏக்கத்தை, எல்லாவற்றையும் பழைய நிலைக்கு மாற்றி விட முடியும் என்கிற அப்பாவித்தனமான நம்பிக்கையைப் பேசியதோடு அப்படி வாழ்ந்த/மறைந்த எண்ணற்ற  ஆதிக்கசாதிப் பெண்களின் ஒட்டுமொத்த நிஜத்தையும் சாய்ராத் பிரதிபலிக்கிறது. நேரெதிராக எதிர்புறத்தில் ஆதிக்கசாதி மனிதர்கள் பெண்களின் இந்த அடிப்படை இயல்பை ஒருபோதும் புரிந்து கொள்வதே இல்லை என்கிற உண்மையையும் படம் உரக்கப்பேசுகிறது.

அன்பை மறந்து சாதியையும் குலப்பெருமையையும் மட்டும் சுமந்து கொண்டிருக்கும் பெற்றோர்களுக்கு மகள்களாக பிறந்த பாவத்தை தவிர வேறெந்த பாவமும் அறியாத தேவதைகளுக்கும், பிறப்பை தேர்ந்தெடுக்காத பாவத்தைத்தவிர வேறெந்த பாவமும் அறியாத தேவதன்களுக்கும் இந்த நோய்ச்சமூகம் தரும் பரிசு குறித்த உண்மையை படத்தின் இறுதிக்காட்சிகளில் ஒரு பெரும் மெளனத்துடன் ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். அந்த இறுதிக் காட்சியின் போது  நீளும் அந்த நீண்ட மெளனத்தில் பார்வையாளர்களின் (மனிதத்தன்மை கொண்ட) மனசாட்சிகள் இந்து மதம் கட்டியெழுப்பி காப்பாற்றிவரும் சாதிய அமைப்பின் மீது எச்சில் உமிழும் எதிரொலிகளை உணரவேண்டுமா?

சாய்ராத்தைப் பாருங்கள்.

தோழமையுடன்
கர்ணாசக்தி

இக்கட்டுரையை மின்னம்பலத்தில் வாசிக்க https://minnambalam.com/k/1463875253

No comments:

Post a Comment