அடர் செந்நிறமும் வெளிர் கருமையும் வெண்மையும் கலந்து நெழு நெழுவென நெளியும் இந்த புழுக்கள் சூழ்ந்த குட்டையின் ஆழம் எவ்வளவு எனத்தெரியாது உள்சென்று அளக்கவும் இப்போது நேரமுமில்லை அதற்கு சாத்தியமான வெளிச்சமும் இங்கில்லை எப்படி நிகழ்ந்தது இது?? இயற்கை விதி அல்லது மனிதன் சதி ?? எப்படி சொல்வது??
இனி சொல்லி என்னவாக போகிறது துளி வெளிச்சம் ஏதுமின்றி சபிக்கப்பட்ட இந்த காட்டுக்குள் வந்து விழுந்தாகிற்று மீளுவதற்கான வழியை பற்றி மட்டுமே இனி யோசிக்க வேண்டும் வெளியேறியாக வேண்டுமெனில் இந்த இருள் படர்ந்த காட்டின் அத்தனை அசைவுகளுக்கும் மறுதலிக்க வேண்டும் அல்லது இசைந்து போகவேண்டும் இரண்டாவதைதான் தேர்ந்தெடுக்கப் போகிறேன் என நினைக்கிறேன் வேறு வழியில்லை ...
ஒருவேளை என் அடையாளங்கள் இதனுள் தொலைக்கப்படலாம் அல்லது நான் உயிரற்று இந்த காட்டின் கழிவாகவும் வெளியேறலாம் எப்படியும் மேலே செல்ல முடியாது.... நிகழ்வுகளுக்கு உட்படு மூழ்கிப்பார் மூளை சொல்லியது...இன்னும் இன்னும் எவ்வளவு நேரம் வழுவழுவென இருக்கும் இந்த கிளையை பிடித்து தொங்கி கொண்டிருக்க போகிறாய் மேலே ஏறுவதும் முடியாத காரியம்...ஒன்றும் யோசிக்க தெரியவில்லை சூன்யமாகிப்போன இக்கணத்தில் இருள் இருள் இருள் அது மட்டும் தான் எங்கும் வியாபித்திருந்தது...பிடி தளர்ந்து கொண்டே இருந்து இன்னும் எத்தனை நேரம் போராடப்போகிறாய் சம்பவங்களுக்கு இசைந்து விடுவென பிடித்திருந்த இந்த வழுவழு கிளையும் பிடிப்பை தளர்த்திக்கொண்டே வந்தது அதையேதான் கடவுளும் விரும்பியிருப்பார் போலும் எங்கிருந்தோ ஹோவென இரைந்தவாறு என்னை அடித்து தள்ளி விட்டது ஒரு பெருவெள்ளம்
இதோ என் கடைசிப்போராட்டமும் முடிந்தது குட்டைக்குள்ளாக விழுந்த பின் தான் தெரிந்தது இது நீராலான குட்டையே அல்ல நுனி முதல் அடி வரை பற்றியெரிக்கும் அமிலம் அட கடவுளே இனி தப்பிக்க எந்த திராணியும் இல்லை இன்னும் சற்று நேரத்திற்கெல்லாம் முடிந்தது என் இறுதிப்போராட்ட கதை எல்லாம் முடிந்தாகிற்று இதோ இப்போது இந்த அமிலத்தின் வழி இப்போது என் உடல் எந்த எதிர்ப்பும் இன்றி இசைந்து கொண்டிருக்கிறது
மன்னிற்குள்ளாக புதைத்தும் அருவாள்களால் அறுத்தும் தலைகீழாக்கி புடைத்தும் கொதி நீருக்குள் வேகவைத்தும் இறக்காது போராடி மீண்ட நான் இதோ இந்த இருள் சூழ்ந்த குழிக்குள்ளாக விழுந்து நடுவில் எதோ ஒரு பிடிப்பில் சிறிது நேரம் ஜீவமரண போராட்டம் முடித்து இறுதியாக அமிலம் சூழ்ந்த இந்த இரைப்பையில் முற்றிலுமாக செரிந்திருந்தேன் இனி எப்போதும் இந்த உலகம் என்னை நெல் எனவோ பருக்கை எனவோ எனக்கு பிடித்தவாறு என்னை அழைக்கப்போவதில்லை எனும் பெரு சோகத்துடனே செரிந்து இறந்திருக்கிறேன் என்பதை மட்டும் உங்களிடம் சொல்லிக்கொள்கிறேன் !!

No comments:
Post a Comment