யார் சார் இப்பல்லாம் ஜாதி பாக்குறாங்க..எல்லாரும் அன்பாதானே இருக்கோம்..அத பத்தி பேச என்ன இருக்கு? என்றும் இடஒதுக்கீடு என்பதெல்லாம் சமூகநீதி அல்ல அது ஒரு மகாபாவம் என சித்தரித்தும்.. தப்பித்தவறி வேறு யாரேனும் தலித்தியல் குறித்து பேசினாலும் அதையும் தலித்திய சாதி வெறியாக அர்த்தப்படுத்திக்கொள்ளும் இன்றைய சமகால முற்போக்குவாதிகளே உங்களின் முகத்தில் அறைந்து உண்மையை எடுத்து சொல்ல எந்த திராணியும் இல்லாது தலித்திய பெருஞ்சோக வாழ்வை கலை வழியே காட்டி வெளிச்சம் பரப்பும் சிறு முயற்சியே இந்த பன்றி
இந்த திரைப்படம் உங்களிடம் எந்த அரசியலையும் பேசவில்லை.. மிக
மிக யாதர்த்தமான ஒரு சிறுவனின் உலகத்தையே அது பேசுகிறது… உங்கள் அன்பு சூழ்ந்த உலகம்
உண்மையில் எப்படி இருக்கிறது என்றே பேசுகிறது.. இதன் நாயகன் உங்கள் பதின்ம வயதைப்போலவே
இரட்டைவால்குருவி, நவநாகரிக உடை, காதல், இவைகளின் மீதே மோகம் கொண்டவனாக இருக்கிறான்
அவனின் பெயர் ஜாப்யா.. அவனுக்கு அந்த ஊரின் உயர்சாதி பெண் ஷாலுவின் மீது ஒருதலைக்காதல்
இருக்கிறது அந்த காதலின் பொருட்டு அவனுக்கு குறுக்காக சில பன்றிகளும் உங்கள் பார்வையில்
அன்பு காட்டும் வர்கம் என்று நீங்கள் சொல்லிக்கொள்ளும் உயர்நிலை,இடைநிலை சாதி மக்களின்
வன்மம் மட்டுமே பெரும் சகதியாக நிற்கிறது
அந்த சகதியை அவன் மீதும் அந்த பன்றிகளை மேய்க்கும்
அவன் குடும்பத்தின் மீதும் எப்போதும் அந்த ஆதிக்க வர்கம் வாரி இறைக்கிறது எல்லாவற்றுக்கும்
மேலாக அந்த கிராமம் அவனையும் ஒரு பன்றியாகவே பார்க்கிறது..
காதலுக்கு முன்னால் எந்த சகதியும் பொருட்டல்ல என்றவாறு ரெட்டைஜடை
மற்றும் ரெட்டைவால் குருவிகளின் பின்னால் கவிதையாய் திரிபவனை பிடித்து இழுத்து வந்து
ஊர் நடுவில் நிற்க வைத்து உங்கள் சமூகம் அந்த சகதியை நக்கச்சொல்கிறது.. அதுவும் அவனின்
மானசீக காதலி பார்த்துக்கொண்டிருக்கும் போதே..
அவனும் எந்த அரசியலையும் பேசாமல் உடைந்து
உருகி சகதியை நக்கி உங்கள் வன்மங்களுக்கு இரையாகிறான்.. தன்நிலைமை குறித்தும் சமூக
பொருளாதார இருப்பை குறித்தும் எந்த காதலியின் முன்னால் காட்டக்கூடாது என்று ஓடி ஓளிந்து
காதல் வளர்த்து திரிந்தானோ அதே காதலியின் முன்னால் நக்கிய உங்கள் சகதியை சுமந்து திரும்புவனிடம் உங்கள் ஆதிக்கசீண்டல்கள் இன்னும் அதிகமாக தொடர காதலியே இல்லை என்றான பிறகு அவன் எதிர்வினையாற்றுகிறான் வெடித்து அழுது அப்படி அவன் நிகழ்த்துகிற அந்த எதிர்வினையானது இந்திய சமூகத்தின் முகத்தை எப்படி பதம் பார்க்கிறது என்பதை உள்ளம் உருக பேசும் படமே பன்றி
படத்தில் ஜாப்யாவையும் அவனின் குடும்பத்தையும் போலவே எந்த அரசியலையும்
வெளிப்படையாக பேசாது அம்பேத்கர் , பூலே போன்றவர்கள் சுவர் ஓவியமாக அமைதியாக இயல்பாக
காட்சிகளில் கடக்கின்றனர்.. அந்த இயல்பான வாழ்கை கடத்தலினூடே படம் அமைதியாக பேசும்
யாதார்த்தத்தின் அரசியலானது லட்சம் சாட்டைகளுக்கு சமம் மனசாட்சி என்ற வஸ்துவோடு இத்திரைப்படத்தை நீங்கள் பார்த்தால்
அந்த சாட்டைகள் உங்களை நிர்வானமாக்கி தோலுரிக்கும் வலியை தரக்கூடியது
படத்தில் ஒரே ஒரு பாடலாக வரும் ”ஜனகனமன “ தேசியகீதம் ஒலிக்கும் காட்சியமைப்பிற்கும் அதனூடே எழும்புகிற கேள்விகளுக்கும் உங்களால்
எங்கிருந்தும் ஒரு பதிலை கண்டுபிடித்து கொண்டு வந்து விட முடியாது.. பாரம்பரிய இந்திய சினிமாவில் கட்டுடைத்தலை ஆணித்தரமாக நிறுவிய
படத்தின் இயக்குனர் நாக்ராஜ் மஞ்சுலே வரலாற்று சிறப்பு மிக்க படைப்பாளி என்பதை அவர்
வடித்த இந்த செல்லுலாய்ட் கவிதை காலம் முழுக்க உணர்த்திக்கொண்டே இருக்கும்.. தலித்
சமூகத்தை சார்ந்த இவர் ஒரு கவிஞரும் ஆவார்.. அவரின் கிராமம் மற்றும் பதின்ம வயது அனுபவங்களே
இந்த திரைப்படம்
எந்த புனைவுமில்லாது சமகால தலித்திய வாழ்வை அப்பட்டமாக உரக்கச்சொன்ன
இந்த பன்றி படத்து ஜாப்யா வைப்போலவே பள்ளியை, கல்லூரியை, காதலை, இருப்பை, கடந்த, கடந்து கொண்டிருக்கும்
இனி கடக்க போகும் ஒரு சமூகம் குறித்த உங்கள் பார்வையை தயவு செய்து இந்த படத்தை பார்த்த
பிறகேனும் மாற்றிக்கொள்வீர்கள் என சிறிதாக நம்புகிறேன்
ஆகவே நாடெங்கும் மனிதர்களின் மீது அன்புதான் வியாபித்திருக்கிறது
என நம்பி அன்பை பரப்பிக்கொண்டிருக்கும் ஜீன்ஸ் அனிந்த இயேசுபிரான்களே.. இடஒதுக்கீடு
மற்றும் ஒடுக்கப்பட்டவர்களை குறித்த உங்கள் முற்போக்கு சித்தாந்தங்களை ஒருமுறையேனும்
இந்த திரைப்படத்தை பார்த்த பிறகு மாநிலம் தேசம் உலகம் என எல்லாவற்றையும் கடந்து பரப்புங்கள்..
நன்றி
தோழமையுடன்
கர்ணா சக்தி
( இந்த மாபெரும் காவியத்தை காண பரிந்துரைத்த http://yalisai.blogspot.in/ லேகா ராமசுப்ரமணியன்
அவர்களுக்கு ஆயுள் முழுமைக்குமான கோடி நன்றிகள் J )

அருமையான பதிவு கர்ணா.ஒடுக்கப்பட்டவர்களுக்கான குரல் இப்படம்.தலைமுறை தலைமுறையாய் ஆதிக்க ஜாதிகளுக்கு அடிபணிந்து அமைதியாக அவர்களின் ஏச்சு பேச்சுகளை தாங்கி கொண்ட சமூகத்தின் ஒரு துளிர்...இனி எப்போதும் நாங்கள் உங்களுக்கு அடிமையில்லை என்பதை சொல்லுவதாக அந்த இறுதிக் காட்சி.
ReplyDeleteதிருவிழா கொண்டாட்டத்தில் நாயகன் லயித்து பெருமிதம் கொண்டிருக்க அவன் தகப்பனோ சாமி விளக்கு பிடிக்க செய்திடுவார்.இந்த காட்சி இந்த வருட எங்க ஊர் சாமி கும்பிடுவில் நிகழ்ந்தது..கண்ணீர் வரச் செய்த காட்சியது.
சின்ன சின்ன சம்பவங்களை கொண்டு நாக்ராஜ் கட்டமைத்திருக்கும் திரைக்கதை அசாத்தியமானது.அந்த மாபெரும் கலைஞனுக்கு மரியாதைகள்!
நன்றி லேகா,
Deleteஇந்த படத்தில் அந்த சிறுவனின் வளர்ந்த தோழனாக சைக்கிள் கடைக்காரர் வருவாரே அவர்தான் நாக்ராஜாம் (இயக்குனர்), மனிதர் மிக எளிமையான கதை சொல்லி.. ஆனால் அழுத்தமாகவும் சொல்லியிருக்கிறார்..
குறிப்பாக அந்த திருவிழா காட்சி மெய்சிலிரித்து அழச்செய்திருந்தார்தான்
அதுபோக அந்த தேசியகீதமும் நிறைவுப்பகுதியில் திரையில் தெறித்த விழும் கல் காட்சியமைப்பிற்கும் அவர் ஒரு தேர்ந்த கலைஞன் என்பதை அழுந்த சொல்கின்றன.. சமகால யதார்த்த சினிமாவின் உன்னத கலைஞனின் காலத்தில் நாமும் இருப்பதே நமக்கு பெருமையான நிகழ்வு
:)