Monday, October 6, 2014

நெப்ராஸ்கா ( NEBRASKA -2013 ) ” அப்பாக்களை நினைவுறுத்தும் ஒரு கவிதை ”




வூடி – 75 வயதுகளுக்குள் இருப்பவர்.. டிமென்சியா என்ற நோயால் பீடிக்கப்பட்டவர் அந்த வயதுக்கே உரிய ஞாபக மறதிகளையும் கொண்டவர்.இவருக்கு கேட்டி என்ற மனைவியும் ரோஸ் டேவிட் என இரண்டு மகன்களும் உள்ளனர்..

வூடிக்கு அவர் வசிக்கும் மாகாணத்திலிருந்து சுமார் 900 கி.மீ கொண்ட நெப்ராஸ்கா நகரத்தில் இருக்கும் ஒரு நிறுவனத்தை சேர்ந்த லாட்டரியில் பரிசுத்தொகை விழுந்ததாக நம்புகிறார் ஆனால் அவரை தவிர எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது அந்த லாட்டரி ஒரு கண் துடைப்பிற்காக நடத்தப்படுகிறது எனவும் உண்மையில் அவருக்கு எந்த பரிசுத்தொகையும் விழவில்லை என்பதும் ஆனால் வூடிக்கு உள்ள மனக்குறைபாடால் அவர் அந்த பரிசுத் தொகை விழுந்ததாகவே நம்புகிறார் அதை மற்றவர்கள் யாரும் நம்பாததால் தானே சென்று அடைவதற்காக சில முறை முயற்சியும் செய்கிறார்.. அவரின் ஓயாத இந்த ஆர்வத்தால் சற்றே கலவரமடையும் அவரது மகன் தான் அழைத்துப்போவாதாக சொல்லி அவரை நெபரஸ்காவிற்கு அழைத்துப்போகிறார் இவர்களுக்கிடையேயான அன்பால் நிகழும் பயணமே நெபரஸ்கா

பொதுவாக அப்பாக்களில் ஒரு மகனை பார்க்கும் தருணங்கள் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை அப்படி குழந்தையாக மாறிப்போன ஒரு அப்பாவும் அப்பாவாக மாறிப்போகும் ஒரு மகனுமாக மிகச்சிறந்த கவிதையொன்றை கருப்பு வெள்ளை பிரேம்களில் வாசித்த நெகிழ்வு படம் முழுக்க கிடைக்கிறது

முக்கியமாக வூடியின் சொந்த ஊரில் சில காலம் தங்கியிருக்கும் போது அப்பாவை பற்றி சிலரிடம் தெரிந்து கொள்ளும் போதும் அப்பாவின் சிறுவயது மன நிலையை ஜீவனுடன் கடந்திருக்கிறார் அவரின் மகனாக நடித்தவர்

வூடி- எல்லா அப்பாக்களின் சாயல்களும் அள்ளித் தெளிக்கும் அற்புதமான படைப்பு
இறுதியாக பரிசு விழவில்லையென்று தெரிந்த பின்னும் ஆறுதல் பரிசாக வெள்ளைத்தொப்பியை வாங்கிக்கொண்டு நடக்கும் போதும் அத்தனை வயதுகளிலும் ஒரு குழந்தையை நினைவூட்டுகிறார்.. மகனிடம் இயலாமைகளில் தோய்ந்து அழுதபடி ஒரு பிக்அப் டிரக் வாங்குவதும் தொலைந்துபோன தனது கம்பரசர் வாங்குவதும் பற்றிய ஆசையை வெளிப்படுத்தும்போதும் கடைசியில் ஆசை நிறைவேறிய பூரிப்பில் தனது சொந்த ஊர் மக்களின் முன் பெருமையாக தனது டிரக்கை ஓட்டிக்காட்டும் போதும்.. கண்களில் நீர் பெருக அப்பாக்கள் எனும் பிம்பத்தை நிரம்ப விடுகிறார்.

மென்மையாக, காற்றில் மிதக்கும் ஒரு சிறகைப்போல எந்த வித உறுத்தல்களும் இல்லாது மிருதுவாக கட்டமைக்கப்பட்ட ஒரு ஹாலிவுட் படத்தை முதன் முதலாக பார்த்த ஒரு உணர்வுப்பூர்வமான அனுபவம் படம் நிறைவடையும் போது கிடைக்கிறது

அப்பாக்களை பற்றிய மிக பிடித்தமான ஒரு கவிதை வாசித்த அனுபவம் வேண்டுமா நெப்ரஸ்கா பாருங்கள்

2 comments:

  1. நல்ல விமர்சனம், படத்தைப் பார்க்க வேண்டும்.

    amas32

    ReplyDelete
    Replies
    1. நன்றிம்மா, கண்டிப்பா பாருங்க :))))

      Delete