ஆண்டாண்டு காலமாக கும்பிடறேன் ஆண்ட... சரிங்க ஆண்டேன்னு சொல்லவும் பண்ணக்காரர்களை நாட்டாமைகளை கும்பிடுகிற இடுப்பில் துண்டை கட்டிக்கொள்கிற தரையில் உட்கார வைக்கிற துணை நடிகர்களாக மட்டுமே காட்டப்பட்டு வந்த ஒரு சமூகத்தின் அச்சு அசல் சமகால வாழ்விய பதிவுதான் மெட்ராஸ்...என்பதையும் மீறி இது உண்மையான சென்னையை பற்றிய பதிவு
சென்னை என்றால் வானுயர்ந்த கட்டிடங்களும் அவசரகதியில் ஓடிக்கொண்டிருக்கும் நடுத்தர மக்களை கொண்ட தென் சென்னை அல்ல.. ஓங்கி வளர்ந்த எல்லா கட்டிடங்களையும் தன் இரத்தத்தையும் வியர்வையையும் தந்து கட்டித்தந்துவிட்டு குடிசைகளிலும் ஹவுசிங்போர்டுகளிலும் வாழும் வட சென்னை மக்களே அசல் சென்னையின் சொந்த குடிகள் அவர்கள்தான் உண்மையான சென்னையின் அடையாளங்கள் இதுவரை தமிழ்சினிமாவில் தீண்டப்படாமல் இருந்த களம் மனிதர்கள் அவர்களின் வாழ்வியலே இந்த மெட்ராஸ்
சின்னபொறியை வைத்து எழுப்பப்படுகிற பெருந்தீயை போலவே.. சின்னதான ஒரு சுவரை அடிப்படையாக வைத்து எழுப்பப்படுகிற சமூக அரசியல் பெருந்தீயே இந்த படம், நிச்சயமாக ஒரு கலகக்காரனின் படம்..
காலம் காலமாக வெறும் ஓட்டுகளாக மட்டுமே கருதப்படும் மக்களுக்கு தேவையான அரசியலை பேசும் படம்.. இனி அவர்களை பயன்படுத்த துடிக்கும் அரசியல் சக்திகளை எப்படி கையாள வேண்டும் என்பதை சொல்லித்தரும் படம்..
தமிழ் தமிழ்னு ஒன்னாத்தான் நிப்பான் ஆனா சாதின்னு வந்துட்டா உடனே கத்திய தூக்கிருவான் என்ற வசனங்களின் மூலம் இன்னமும் நிலவிக்கொண்டிருக்கும் ஆதிக்க மனப்போக்கை தர்மபுரி கலவரங்களை காடு வெட்டிகளை கண் முன் நிறுத்தும் பதிவு
இதெல்லாம் மீறி ஜனரஞ்சக சினிமாவின் எல்லா யுக்திகளுமே நிறைந்த கலை சினிமா என்பதுதான் இந்த படத்தின் சிறப்பம்சம்
காளி,அன்பு,ஜானி,மாரி,கலை, என எல்லா பாத்திரங்களுமே மிக சாதரணமாக ஒரு அசல் வாழ்வை நமக்குள் கடத்தும் அற்புத கதாபாத்திரங்கள் எல்லோருமே ஒரு இன மக்களின் பெரு வாழ்வை வாழ்ந்துதான் காட்டியிருக்கிறார்கள் குறிப்பாக அன்பு, ஜானி, அற்புதம் செய்திருக்கிறார்கள்
காட்சியியலின் ஒவ்வொரு படிமத்துக்கும் நிகழ்வுக்கும் ஏற்றபடி முரளியின் காமிரா நிகழ்த்தியிருக்கும் சாகஸம் பிரம்மிக்கத்தக்கது குறிப்பாக ஒவ்வொரு லாங்ஷாட்டின் போதும் காண்பிக்கப்படுகிற சுவர் நமக்குள் ஒரு கலவரத்தை, பீதியை,குரூரத்தை, எதிர்பார்ப்பை, நிகழ்த்தி விடுமாறு காட்டிய லாவகம் மிக அற்புதம்
இடைவேளை தொடக்கத்திலிருந்து இறுதிவரை சந்தோஷ் நாரயனனின் இசைதான் நிகழவிருக்கிற அதகளத்தின் மொத்த பெரும் சாட்சி.. மனிதர் பின்னனியை பின்னி பெடலெடுத்திருக்கிறார்
எல்லாப்புகழும் இயக்குனருக்கே தோழர் பா.இரஞ்சித்தின் கனவு ஒரு தனிமனிதனின் கனவு அல்ல ஒரு நீண்ட சோக வரலாறு கொண்ட ஒரு சமூகத்தின் கனவு
இனி நிகழவிருக்கும் அல்லது நிகழ வேண்டிய கட்டாயத்தின் கனவு.. இலக்கியம் தவிர இதுவரையில் சினிமாக்களில் தீண்டப்படாத தலித்திய வாழ்வியல் பதிவை முதல் பதிவாகவும் இதைவிட சிறப்பானதொரு முழுமுதல் பதிவு இல்லை எனும்படியாகவும் நூறாண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவில் அழுத்தமாக பதிய வைத்த கை தோழர். பா.இரஞ்சித்தின் கை.. அந்த கைகளுக்கு ஆயிரமாயிரம் அன்பு முத்தங்கள்..
தோழமையுடன்
-கர்ணா சக்தி

No comments:
Post a Comment